SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் கோரிக்கை ஊரடங்கை நீட்டிக்க பரிசீலனை: 10ம் தேதி முடிவை அறிவிக்கிறது மத்திய அரசு

2020-04-08@ 00:06:05

புதுடெல்லி: கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கையின்படி, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், புதிதாக வைரஸ் தொற்றுக்கு பாதிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. நேற்று ஒரே நாளில் 354 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது.

இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் முடக்கப்படுவதாக கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பஸ், ரயில், விமான சேவை அடியோடு முடக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விற்கப்பட்டு வருகிறது. 130 கோடி மக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதில் அடித்தட்டு மக்களும், தினக்கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 21 நாள் ஊரடங்கு வரும் 14ம் தேதியோடு நிறைவடைவதால், 15ம் தேதி முதல் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆவலோடு காத்துள்ளனர். ஆனால், தற்போதுதான் வைரஸ் பரவலின் வீரியம் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் முடக்கத்தை தளர்த்தினால் மக்கள் மீண்டும் அதிகளவில் கூடுவார்கள்.

இதன் காரணமாக வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஊரடங்கை  ஏப்.14க்குப் பிறகும் நீட்டிக்க வேண்டுமென தெலங்கானாவின் சந்திரசேகர ராவ், ராஜஸ்தானின் அசோக் கெலாட் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திலும் ஏற்படும் பாதிப்பை கண்காணித்து வருகிறோம். எனவே, தேச நலன் கருதி முடிவு எடுக்கப்படும். அந்த முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்,’’ என்றார்.

இதற்கேற்ப பிரதமர் மோடியும் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நீண்டகால போர். அதில் மக்கள் சோர்வடையோ, தோற்கடிக்க முடியாது என்றோ கவலையடைய வேண்டாம். இதை எதிர்த்து நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்,’ என கூறியிருந்தார். எனவே, ஏப்ரல் 14க்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் வலுத்த நிலையில், நேற்று முக்கிய தகவல் வெளியானது. ‘பல்வேறு மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கைப்படி ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது,’ என அரசின் நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கொரோனாவின் தீவிரத்தால் ஊரடங்கு காலத்தை நீட்டித்து வருவதால், இந்தியாவிலும் முடக்க காலம் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், நோய் தொற்று பரவிய மாவட்டங்களை மட்டும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, 10ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் முன்பதிவு ஏப்.30 வரை ரத்து:
21 நாள் முடக்கத்தையொட்டி ஐஆர்சிடிசி 3 தனியார் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவை 21 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இதை வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக நேற்று அறிவித்தது. அதில் டிக்கெட் முன்பதிவு செய்த அனைவருக்கும் கட்டணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முடக்க காலம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு ரயில்களுக்கு முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

* 21 நாள் ஊரடங்கு வரும் 14ம் தேதியோடு நிறைவு.
* தற்போதுதான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
* கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை.
* ஊரடங்கை  நீட்டிக்க வேண்டுமென பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்.
*  ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலனை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்