SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டு(ம்) எழுவோம்

2020-04-08@ 00:02:24

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்த  உலகத்தின் நிலைமைக்கும், தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் உள்ள உலகத்தின்  நிலைமைக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டாம் உலகப்போரின்போது பொதுமக்கள், ராணுவத்தினர் என 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சர்வதேச அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பல  நாடுகளை அழித்த அதே இரண்டாம் உலகப்போர்தான், புதுவகை சமூகத்தை உருவாக்கவும்  களமாக அமைந்தது.  அப்போதிருந்த சிக்கலை, மேலும் மனிதத்தன்மை மிக்க உலகை  படைக்க வாய்ப்பாக மக்கள் பயன்படுத்திக்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின்போது விழுந்த  குண்டுகள் ஏழை, பணக்காரன் என்று தரம் பிரித்து  பார்க்கவில்லை. இதை மக்கள் உணர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

தற்போது மிரட்டும் கொரோனா  வைரசும் அப்படியே. ஏழை, பணக்காரன் என பேதம் பிரித்து பார்க்காமல் மனித உயிர்களை கொத்து, கொத்தாக பறிக்கிறது. ஆட்கொல்லி கொரோனாவை இந்தியா துணிச்சலுடன் எதிர்கொள்கிறது. வீரத்தைவிட விவேகமே வெற்றிதரும் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது இந்தியா. அந்த விவேகம் - ஊரடங்கு. கொரோனாவுக்கு எதிரான இந்த மாபெரும் போரில், இந்தியா மூன்றடுக்கு சிக்கலை சந்திக்கிறது. ஒன்று - கொரோனா வைரசால் ஏற்படும்  சுகாதார சிக்கல். இரண்டாவது - தொற்று பரவியதால் அமல்படுத்த நேர்ந்த ஊரடங்கு.  மூன்றாவது - திடீரென, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலையால்  ஏற்பட்ட மானுட சிக்கல். இம்மூன்று சிக்கல் காரணமாக எழும் பொருளாதார தாக்கம், நம்மை படு பாதாளத்துக்கு இழுத்துச்செல்கிறது.

ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் ஏற்படும் பொருளாதார பின்விளைவுகள், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வேறுபட்டதாக இருக்கும். கொரோனா பிடியில் இருந்து இந்தியா விடுபடவும், பழைய பொருளாதார நிலைக்கு மீண்டும் திரும்பவும் நிதி ஆதாரம் பெரும் தேவையாக உள்ளது. கொரோனா தடுப்பு நிவாரண நிதி நாடு முழுவதும் திரட்டப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக, பிரதமர், அமைச்சர், எம்.பி.க்களுக்கு 30 சதவீதம் சம்பளம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் மற்றும் ஆளுநர்களின் சம்பளமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் சமூகப்பொறுப்பாக சம்பள குறைப்பு செய்ய முன் வந்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் நாடு இப்படியொரு பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது இல்லை. உலக நாடுகளை ஒப்பிடும்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தற்போது வரை வெற்றிப்பாதையிலேயே பயணிக்கிறது. காரணம், தேச மக்களின் ஒற்றுமை. இந்த ஒற்றுமை கொரோனா பிடியில் இருந்து மீண்ட பிறகும் தொடர வேண்டும். இதுவே, வீழ்ந்த நம் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த உதவும். வீழ்ச்சி என்பது நம் வரலாற்றில் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்