SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழித்துக் கொள்வோம்

2020-04-07@ 03:07:07

உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் கொரோனா வைரசை, கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவத்துறை திணறி வருகிறது. மனிதர்களை கொல்ல அதிநவீன ஆயுதங்களை போட்டி போட்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வல்லரசு நாடுகள், மருத்துவத்துறையில் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் அடையவில்லை என்பதை கொரோனா  உணர்த்தியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் உலக நாடுகள் எவ்வளவு தூரம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை கொரோனா அழுத்தம்திருத்தமாக உணர்த்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவேதான், அந்த வைரஸ் தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்து  கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் உட்பட இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தலைதூக்கி வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளை காப்பாற்றுவதில் வென்டிலேட்டர் பங்கு மிக முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவில் போதியளவு வென்டிலேட்டர் வசதி இல்லை என்பது வேதனைக்குரியது. இது ஒருபுறமிருக்க, மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. 136 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது நல்லதல்ல என்பதை நாம் தற்போது புரிந்து கொண்டுள்ளோம். மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டுமின்றி, மாணவர்கள் சேர்க்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 69,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடி அறிவித்தும் சாமானியனுக்கு இன்னும் தரமான மருத்துவம் கிடைக்கவில்லை என்பது தான் கவலைக்குரியது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் முழுமையாக எப்போது குறையும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா அல்லது மாற்று முறைகள் ஏதேனும் கையாள முடியுமா என்ற முயற்சியில் அரசு இறங்க வேண்டும்.   அரசு மருத்துவமனைகளில் பல கோடியில் வாங்கப்படும் நவீன இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

முக்கியமாக, தேசிய ஊரடங்கு உத்தரவால் பல கோடி பேர் பொருளாதாரரீதியாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசு சிறப்புக்குழுவை அமைத்து, பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உடனே இறங்க வேண்டும்.  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த புதிய வழிமுறைகளை கையாள வேண்டியது கட்டாயம்.  வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்