SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் கையில் முடிவு

2020-04-06@ 04:15:14

கொரோனா வைரசின் கொடூர பிடியை தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசுகளே தடுமாறுகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் விமான, ரயில், பஸ் போக்குவரத்துகள் எதுவும் இல்லை. இருப்பினும் மக்கள் நடமாட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் பாதிப்பு அதிகம். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. இதுவரை 5 பேர் பலியாகி விட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலிலும் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வெளியில் நடமாடி வருவதும், வாகனங்களில் பயணிப்பதும் ஆபத்தையே உருவாக்கும். ெபாதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இல்லை. பலசரக்கு, காய்கறி கடைகள் நாள் முழுவதும் இயங்கலாம் என முதலில் அறிவித்த அரசு, பின்னர் அதற்கான நேரத்தை பகல் 2.30 மணியாக குறைத்தது.

அதன் பின்னரும் மக்கள் நடமாட்டம் இருந்ததால் தற்போது மதியம் ஒரு மணிக்குள் கடைகளை அடைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் மாலை நேரத்தில் சிலர் ஏதாவது காரணத்தை கூறி வெளியில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் மார்க்கெட்டுகளில் இன்னமும் கொரோனா குறித்த அச்சமின்றியே பொதுமக்கள் மொத்தமாக குவிந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் சமூகபரவல் என்னும் நிலையை கொரோனா எட்டாத சூழலில், நோயின் தாக்கம் நிச்சயம் குறைந்திடும். சமூக பரவல் என்ற நிலை ஏற்பட்டால் நோயின் வீரியம் மேலும் அதிகரித்து, மக்கள் வெளியே வருவது முற்றிலும் தடைப்படக்கூடும்.

வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதை நீட்டிப்பதும், அன்றைய தினத்தோடு முடித்துக் கொள்வதும் மக்கள் கையில்தான் உள்ளது. கொரோனா ஒரு தொற்று நோய் என்பது தெரிந்தும் பலர் இன்னமும் அஜாக்கிரதையாக நடமாடுவதும், கண்ட இடங்களில் துப்புவதும் சகஜமாக உள்ளது. வெளியே வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என மத்திய அரசு எச்சரித்தும், சிலர் அதை பொருட்டாக மதிப்பதில்லை. முக கவசம் தட்டுப்பாடு என கூறுவோர், குறைந்தபட்சம் தங்கள் கைக்குட்டையை முகத்தில் கட்டுவதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர்.

கொரோனா ேநாயை கட்டுப்படுத்துவது என்பது மத்திய, மாநில அரசுகளின் வேலை என்றில்லாமல், ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். அதேசமயம் மத்திய, மாநில அரசுகளும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து, அவற்றை வழங்கிட வேண்டும். முக கவசங்கள், மருந்து, மாத்திரைகள், தட்டுப்பாடற்ற காய்கறிகள், மளிகை பொருட்கள், ஏழை, எளியோருக்குரிய நிவாரணங்களை சமூக பரவலுக்கு இடமின்றி வழங்குதல் அரசுகளின் கடமையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்