SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் சவால்

2020-04-01@ 00:10:14

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழ்கிறது. கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது 198க்கும்  மேற்பட்ட உலக நாடுகளில் பரவி, மக்களை பெரிதளவில் பலி வாங்குகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த  வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இக்கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 39  ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

கொரோனா பாதிப்பில், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் இரு இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு, நெல்லை மாவட்டத்தில் தலா 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று, முதல் இரு நிலைகளை கடந்து, ‘’சமூக பரவல்’’ என்னும் மூன்றாம் நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக பரவல் என்பது, காற்று மூலம் அதிவிரைவாக பல லட்சம் பேருக்கு பரவிவிடும். அதனால், சமூக பரவல் நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மத்திய-மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த பெரும் சவாலை நம் சுகாதார துறை ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.  கண்ணுக்கு தெரியாமல் நெருங்கும் இந்த பேராபத்தை தடுக்க ஒரே வழி, ஊரடங்கு மட்டும்தான். மருத்துவ துறையில் அபார வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடுகள்கூட இந்த யுக்தியைத்தான் கையாள்கின்றன. இதைத்தான், இந்தியாவும் மேற்கொண்டுள்ளது.
இது, ஒரு கடினமான நடவடிக்கைதான், மறுப்பதற்கில்லை. ஆனாலும் இதை, நோய் தீர்க்கும் கசப்பு மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது. முடங்கும் தொழில்துறை, பறிபோகும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சரிவு என நாடு பெரும் இன்னல்களை சந்தித்தாலும், கொரோனாவை எதிர்கொள்ள இதைத்தவிர ேவறு வழியே இல்லை.

இவை அனைத்தையும் மீறி, காய்கறி, மளிகைப்பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, வீதியில் நடமாடாமல், வீட்டில் முடங்கியிருந்து, வெற்றிகொள்வதே புத்திசாலித்தனம். விழித்திருப்போம், விலகியிருப்போம், வீட்டிலேயே இருப்போம், கொரோனாவை வெல்வோம்.  ஒருபுறம் தற்காப்பு, மறுபுறம் வைரஸ் ஒழிப்பு என இவை இரண்டும் அவசியம். முதலில், நம்மை தற்காத்துக்கொண்டால், இந்த வைரஸ் கிருமியை ஒழிக்க நிச்சயம் மருந்து கண்டுபிடிக்க முடியும். விண்ணையும், மண்ணையும் ஆட்கொள்ளும் விஞ்ஞான யுகத்தில், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்