SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணம் இல்லை: உயிர் பயத்துடன் பணியாற்றுவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

2020-03-27@ 07:36:16

சென்னை: கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணம் வழங்கவில்லை. இதனால் உயிர் பயத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது என மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 284 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு வார்டுகளில் 13 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இவற்றில் 2464 வென்டிலேட்டர்கள் உள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகள் மற்றும் மருத்துவமனைகளில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உயிர் பயத்துடன் பணியாற்றுவருதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அரசு மருத்துவர் ஒருவர் கூறியதாவது:  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் இரவு பகல் பராமல் பணியாற்றிவருகின்றனர். குறிப்பாக கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இதைப்போன்று செவிலியர்களும், சுகாதார பணியாளர்களும் இரவு, பகல் பாராமல் பணியாற்றிவருகின்றனர்.   ஆனால் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும், ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்களும்  போர்முனையில் பணியாற்றுவது போன்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை.

முக்கியமாக பாதுகாப்பான முக கவசம், சிறப்பு காலணிகள், சிறப்பு பாதுகாப்பு உடை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கவில்லை. 3 லேயர் உள்ள முக கவசம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இது நோய் தொற்றை தடுக்காது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் என் 95 மாஸ்க் அளிக்க வேண்டும். தமிழகத்தில் இந்த மாஸ்க் போதிய அளவில் இருப்பு இல்லை.  இதை தவிர்த்து போதிய பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. பாதுகாப்பு உடையானது உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள விதிகளின்படி வடிவமைப்பு செய்யப்படவில்லை. இதனால் காலணிகளும் அந்த விதிகளின்படி இல்லை. இவ்வாறு எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் தான் நாங்கள் பணியாற்றுவருகிறோம்.

 கொரோனாவின் தீவிரத்தன்மையை உணராமல் தேவையான உபகரணங்களை மாநில அரசு முன் கூட்டியே ஆடர் செய்யவில்லை. இதனால் பல மருத்துவமனைகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனைகளில்தான் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். அங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்குத்தான் இந்த நிலைமை உள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் பணியாற்றிய மருத்துவர்கள் கொரோனா தாக்கி மரணமடைந்துள்ளனர். தமிழக மருத்துவர்களும் உயிர் பயத்துடன்தான் பணியாற்றி வருகிறோம். சிறப்பு வார்டுகளிலேயே இந்த நிலைமை என்றால், வெளிமாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளின் நிலைமைகளை நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 பேருக்கு காய்ச்சல் என்று வந்தனர். அவர்களை கோவில்பட்டி மருத்துவமனைக்கு செல்லுமாறு அங்கு உள்ள டாக்டர் 2 நாள் சிகிச்சை அளித்த பிறகு அனுப்பியுள்ளார். அங்கும், உடனடியாக டெஸ்ட் எடுக்கப்படவில்லை. பின்னர் டெஸ்ட் தேனிக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு டெஸ்ட் எடுப்பதற்கு கூட போதிய வசதிகள் தமிழகத்தில் இல்லை. இதனால்தான் காய்ச்சல் என்று வருகிறவர்களுக்கு முழுமையான டெஸ்ட் எடுக்க முடியவில்லை. இதனால் பலரையும் கண்காணிப்பு என்ற போர்வையில் தனியாக வீடுகளில் தங்க வைக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். சீரான இடைவெளியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்