SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவின் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அரசு

2020-03-27@ 01:42:57

* மளிகை, காய்கறி கடை, உணவகம் நாள் முழுவதும் இயங்கலாம்
*  விவசாய பொருட்களை சந்தைக்கும் தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்ல அனுமதி
* கால்நடை, கோழி, மீன், முட்டைகளை கொண்டு செல்லும் போக்குவரத்துக்கும் அனுமதி
*  நிதிநிறுவனங்கள் அசல், வட்டி வசூலிக்க தடை

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவின் சில கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது.  நாள் முழுவதும் மளிகை கடை,  காய்கறி கடைகள் இயங்கலாம். அதேபோல விவசாய பொருட்களை சந்தைக்கும் ெதாழிற்சாலைக்கும் அனுமதி பெற்று எடுத்து செல்லலாம். மேலும்  கால்நடை, கோழி, மீன், முட்டைகளை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள்  அசல், வட்டி போன்றவற்றை வசூலிக்க கூடாது என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி  அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில்,  பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.  அதன்படி, தமிழகத்திலும் ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும்.  சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு  அனுமதித்துள்ளது. சாலைகள் மற்றும் கடைகளில் தேவையற்ற கூட்டத்தை கட்டுப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்க கடந்த  25ம் தேதி மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, தமிழகத்தில் கொரோனா வைரஸ்  பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி  தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
* தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.  இதற்கென பொதுமக்களின் நன்மை கருதி,  144 ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை  அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
* 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.
* மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு,  அவர்கள் தலைமையில் இந்த பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
* பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவி
குழுக்கள்ஆகியவை தினசரி, வாராந்திர, மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு  செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை  மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும்.
* பெரிய காய்கறி மார்க்கெட், சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி, பழ வகைகளை விற்கும்  கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க  வேண்டும். மளிகை கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.  
* அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற  இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.  
* கொரோனா நோய் தொற்று மிக மிக கடுமையானது, இது ஒரு ஆட்கொல்லி நோய் என ஒலிபெருக்கி, தண்டோரா, துண்டு பிரசுரம் மூலம்  பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* கர்ப்பிணி பெண்கள், ரத்த கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்ஐவி தொற்று உள்ளோருக்கு அரசு மருத்துவமனைகளில் இரு மாதங்களுக்கு தேவையான  மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
* தனியார் நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவு பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கான தடை  தொடரும்.
* காய்கறி, பழங்கள், முட்டை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை அந்தந்த  கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.  
* வேளாண் விளை பொருட்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.
* கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடை தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், காவல்  துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை 044-28447701, 044-28447703 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்:
* அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு, தேவைப்படின் நிவாரண தொகை மற்றும் பொருட்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாக சென்று  வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய் தொற்றினை தடுக்கும் விதத்தில், கை ரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள்  வழங்குவதை தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, அவரவர்  வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  
* கொரோனா தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பத்தினர்  வெளியில் வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய  பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி வெளியில் வருவோர் மீது அபராதம் விதிப்பதோடு, தகுந்த  பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
* உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர  வரம்பு எதும் குறைக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்