SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வரிடம் முறையிட்டா பிரச்னைக்கு தீர்வு வந்துருமா என கேட்ட அரசு அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-27@ 01:13:27

‘‘மாங்கனி மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழக விவிஐபி, மாங்கனி மாவட்டத்தில் 2 நாளாக முகாமிட்டிருந்த நாளில் தனது சொந்த தொகுதிக்கு சென்று மக்களிடம் மனுக்களை பெற்றாராம். அதேவேளையில், அந்த தொகுதியின் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்களை பதிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தாலுகா ஆபிசில் ஐடிபிஎல் அதிகாரிகளால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அங்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் திரண்டனர். அப்போது, தாசில்தார் வந்து விசாரணை கூட்டம் ரத்தாகிவிட்டது, மற்றொரு நாள் நடக்கும் என கூறினார்களாம். விவிஐபி வருகையால், எதிர்ப்பு பத்திரிகைகளுக்கு செய்தியாகக் கூடாது என கூட்டத்தை ரத்து செய்ததாக கருதிய விவசாயிகள், நேரடியாக தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் விவிஐபியிடமே சென்றார்களாம்.. அவரிடம், விவசாய நிலத்தில் பெட்ரோலிய எண்ணெய் குழாயை பதிக்கக்கூடாதுன்னு மனுவை கொடுத்து அதிர்ச்சியடைய வச்சங்களாம்.

சற்றும் எதிர்பாராமல் இந்த மனுவை வாங்கிய விவிஐபி, வழக்கமான தனது புன்னகையை சிந்தி, பார்க்கலாம் எனக்கூறி அனுப்பி வைச்சாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அந்த மாவட்டத்து கார்ப்பரேஷன்ல என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் ஹை ஆபீசர்  ஒருவரை 20 வருஷம், 40 வீடு என்ற அடைமொழியோடு அழைக்கிறாங்களாம் அவரது டிபார்ட்மென்ட் சகாக்கள்.  ஏற்கனவே உதவி இன்ஜினியராகவும், உதவி செயற்பொறியாளராகவும், செயற்பொறியாளராகவும் இருந்தவர், தற்போது உயர் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இதனால் சிட்டியில் எந்த திட்டப்பணியாக இருந்தாலும் அதற்கான  கமிஷனை கரெக்டா வசூல் செஞ்சிடுவாராம். கடந்த 20 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் இவர், 40 வீடுகள், தோட்டம் என சொத்துக்களா வாங்கி குவிச்சிட்டாராம். அய்யாவை பத்தி பலமுறை விஜிலென்சுக்கு புகார் போனது. ஆனாலும் எப்படியோ அதை சரிக் கட்டி விடுகிறார்.

ஆனால் எப்படியும் ஒரு நாள் மாட்டுவார் என்பது சக ஊழியர்களின் நம்பிக்கை...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ முதல்வரை பார்த்தா பிரச்னைக்கு முடிவு வருமா என்று கேட்டு தொழிலாளர்களை அதிர வைத்த இலை கட்சி பிரமுகர்கள் பற்றி சங்க உறுப்பினர்கள் என்ன சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த 17ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து பேசி தங்களுக்கு தீர்வு இல்லை என கூறி தான் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 50 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பாக அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினர்.

 முதல்வரும், தனது அருகில் இருந்த தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை காட்டி அவரிடம் தீர்வை கூறுகிறேன். உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என கூறி அனுப்பினார். ஆனால் முதல்வரை சந்தித்து பேசி ஒரு வாரம் ஆகியும் இந்த பிரச்னைக்கு தீர்வு வரவில்லை. முதல்வரை சந்தித்து கூட எங்களுக்கு தீர்வு இல்லை. இனி யாரை போய் சந்தித்து பேச என்ற விரக்தியில் தொழிற்சங்கத்தினர் உள்ளனர். அரசு ரப்பர் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, நாங்க தான் அப்போதே சொன்னோம்ல. எங்களை தாண்டி போய் முதல்வரை பார்த்தா பிரச்னை முடிந்து விடுமா? நாங்க கொடுக்கிற ரிப்போர்ட் அடிப்படையில் தான் உங்களுக்கு சம்பள உயர்வு வரணும். இப்போதைக்கு நஷ்டத்தில தான் அரசு ரப்பர் கழகம் போகிறது. எனவே சம்பள உயர்வை பற்றி யோசிக்காம, கொடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு வேலையை போய் பாருங்கள் என்ற ரீதியில் அறிவுரை கூறுகிறார்களாம். இன்னும் ஒரு படி மேலே போய் டிரம்ப் நிகழச்சிக்காக அரசு நிதித்துறை செயலர் டெல்லி போய் இருக்கிறாரு. அவரு வந்ததும் பார்க்கலாம் என்கிறார்களாம்... அதை கேட்டு நொந்து போன தொழிலாளர்கள் அங்கிருந்து வேதனையுடன் கலைந்து சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைப்பறவை பற்றி அல்வா மாவட்டத்துல என்ன பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறைப்பறவை பெங்களூரு வழக்கில் ஆஜராக அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தவர் அந்த புகழ்வாய்ந்த மைசூர்காரர். சமீபத்தில் தென்காசி வந்திருந்த அவர் கிப்ட் காரரை ஒரு பிடி பிடித்து விட்டாராம். சிறைப்பறவையை ஏமாற்றி ரூ.800 கோடியை பறித்து விட்டார் என்பதில் தொடங்கி வெளிநாட்டில் ெசன்று செட்டிலாகி விடுவார். தமிழகத்தில் அவருக்கு அரசியல் இடமே கிடையாது என புட்டுப்புட்டு வைத்தாராம். சிறைப்பறவை வெளியில் வந்தாலும் இனி ஓய்வுதான் என அவரையும் தொட்டு வைத்தாராம். அதற்கும் மேலே ஒரு படி போய் ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டுடமை ஆக்க வேண்டும் எனவும், ஒரு குடும்பத்தின் கையில் போய் விடக் கூடாது எனவும் கூறியுள்ளார்’’ என்றார் விக்கியானந்தா.         


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்