SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகங்கை சீமையில பண மழை கொட்டும் அலுவலகத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-26@ 00:06:40

‘‘கோவை கனிம வளத்துறைக்கு டிரான்ஸ்பர் ஆகி போக பல அதிகாரிகள் டிரை பண்றாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். கோவை பேரூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் பகுதியில் நொய்யல் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆற்றில், ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் காரணமாக தற்போது வருடத்தில் 12 நாட்கள்கூட தண்ணீர்  இருப்பதில்லை. பல இடங்களில் லாரி லாரியாகவும், சில இடங்களில் மாட்டு வண்டி மற்றும் கழுதைகள் மூலமாகவும் மணல் கடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் எடுக்க தடை நீடிப்பதால், நள்ளிரவு நேரத்தை தேர்வு செய்து  ஆற்று மணலை லோடு லோடாக கடத்தி செல்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில்   ஒரு லோடு 10 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் என இஷ்டத்துக்கு விற்கப்படுகிறது.இவற்றை கண்காணித்து, மணல் கொள்ளையர்களை பிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றனர். இம்மாவட்டத்தில், கனிமவளத் துறையில் உச்சத்தில் இருக்கும் ஒரு  அதிகாரி சப்தம் இல்லாமல் மாதம்தோறும் பல லட்சங்களை சுருட்டி விடுகிறார். உட்கார்ந்த இடத்தில் கோடிகள் குவிகிறது. குறு, சிறு, பெரிய கடத்தல்காரர்கள் பட்டியல் தயாரித்து, ஒன்றுவிடாமல் அனைவரையும் ‘கவர்'''' செய்து விடுகிறார்.  இவருக்கு, இதர அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால், இவரை யாரும் அசைக்கவும் முடியவில்லை. எப்போதும் ராஜாதான் என கோலோச்சி வருகிறார். இப்படியே போனால் ஆற்றை யாரும் காப்பாற்றவும் முடியாது... தண்ணீர்  பிரச்னை ஏற்படுவதை தடுக்கவும் முடியாது என்று அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘பாபநாசத்தை பற்றி சொல்லுங்க... அதுக்காக அந்த சினிமாவை பத்தி கேட்டதா நினைச்சுடாதீங்க...’’ நக்கலடித்தார் பீட்டர் மாமா. ‘‘தாமிரபரணி ஆற்றில் நீராடி பாபநாச சுவாமியை வழிபட்டால் முற்பிறவியில் உள்ள பாவங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை. ஆனால் அந்த சுவாமிக்கே சோதனையாம். அவர் எங்கு சென்று நீராடுவார். அதாவது அந்தக்  கோயில் இடத்தில் ஒரு கடை ஒதுக்கித் தருமாறு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கோயில் நிர்வாக அதிகாரியை அணுகியுள்ளார். அதற்கு கடை வைப்பதற்கு தற்போது இடமில்லை என நிர்வாக அதிகாரி கறாராக கூறி விட்டாராம்.  இந்நிலையில் அந்த அரசியல் கட்சியின் நிர்வாகி கோயிலில் கழிப்பறை வசதியில்லை, குடிநீர் வசதியில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தாராம். விவரம் கேள்விப்பட்டு ஓடோடி வந்த கோயில் நிர்வாக அதிகாரியும், போலீசும் 10 இடங்களில்  கழிப்பிட வசதி உள்ளது, குடிநீர் வசதியும் உள்ளது எனக் கூறினாராம். கூடுதலாக ₹40 லட்சத்தில் பணிகளும் நடந்து வருகிறது என்றனராம். ஆனாலும் அந்த அரசியல் கட்சியின் நிர்வாகி விடவில்லையாம். அதை பார்த்த பொதுமக்கள் தனக்கு  கடை கிடைக்காத வரை கோயிலுக்கு எதிராக அரசியல்வாதி ஏதாவது ஒரு போராட்டத்தை தூண்டி விட்டுக்கொண்டே இருப்பார். அதை தடுக்க அதிகாரிகள் முயற்சித்து கொண்டே இருப்பார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டிபாடியில இலை உதிர ஆரம்பிச்சுடுச்சாமே, என்றார் பீட்டர் மாமா. ‘‘காட்பாடி ஒன்றியத்தின் இலைக்கட்சி செயலாளராக இருப்பவர் செய்யும் அடாவடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டதே என்று கடந்த 2 ஆண்டுகளாக கட்சி நிர்வாகிகள் புலம்புகிறாங்க. ஒன்றிய நிர்வாகிக்கு சொந்தமான செங்கல்சூளைக்கு  ஏரிகளில் இருந்து இஷ்டத்துக்கு மண் எடுக்கிறாராம். இதற்காக, சேனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி தூர் வாரும் பணியை அவரே எடுத்துள்ளார். இதேபோல் கடந்த 2 ஆண்டுகளில் ₹10 கோடி வரை பணிகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால், கட்சி நிர்வாகிகளுக்கு சல்லி பைசா கிடைக்கலையாம்.மணல் கடத்தல் விவகாரத்தில் கே.வி.குப்பம் எம்எல்ஏவின் பரபரப்பு ஆடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில், ‘காட்பாடி ஒன்றிய நிர்வாகி எனது எல்லையில் தினமும் 20 லாரி மணல் கடத்துகிறார். முடிந்தால், அங்கு  சென்று கேளுங்க பார்க்கலாம்’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும், ஒன்றியத்தின் மீது நடவடிக்கை இல்லை. அப்போது, எம்எல்ஏவாலே முடியாதது நம்மால் முடியுமா? என்று கட்சி நிர்வாகிகள் கிண்டலடிக்க தொடங்கினர்...’  என்றார் விக்கியானந்தா.‘‘சிவகங்கையில காசு மழையில நனையாம இருப்பதற்கு ஏதாவது குடை இருக்கா...’’ சிரித்தப்படியே கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சிவகங்கையில் இருக்கிற மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்துல  வசூல் வேட்டை மூச்சை முட்ட வைக்கிறதாம்... சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி  பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட இந்த அலுவலகத்திடம் தான் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வாங்கணுமாம்... வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டுபவர்கள், இடங்களை பிளாட்களாக பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு  பணிகளுக்கு இங்கு சதவீத அடிப்படையில் லஞ்சம் பெறுகின்றனராம்... ஒரு நாளைக்கு ₹5 லட்சம் வரை வசூல் கொழிக்குதாம். அனைத்து ஆவணங்களை சரியாக கொடுத்தாலும், ‘முக்கிய ஆவணம்’ இல்லையென திருப்பி அனுப்பி விடுவார்களாம்... பாதிக்கப்பட்டவங்க கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்ததாம்... கணக்கில்  வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லையாம்... இதனால் மீண்டும் வசூலை குவிக்கிறாங்களாம்... மீண்டும் புகார் பறந்து நேற்று முன்தினம் அலுவலகத்தில், கலெக்டர் 2  மணிநேரம் ஆய்வு நடத்தி ஏராளமான முறைகேடுகளை கண்டுபிடித்தாராம்... ஆனால் நாங்கள் மேலிடம் வரை செல்வாக்கானவர்கள் எங்களை என்ன செய்ய முடியும் என அதிகாரிகள் மார் தட்டுகின்றனராம்... இப்படிப்பட்ட அதிகாரிகள்  இருக்கும்போது பொதுமக்கள் என்றைக்கும் அவதிப்பட வேண்டியது தான்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்