SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-24@ 00:14:14

‘‘நெல்லையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு போலி நகைகள் அடகு வைத்து அதிகாரிகளே வங்கியின் பணத்தை சுருட்டியுள்ளார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்தான் இந்த பகல் கொள்ளை அரங்கேறியுள்ளது. அதாவது 2017-18ம் ஆண்டு அதிகாரிகள் தங்கத்தின் பேரில் நகைக் கடன்களை வழங்கி உள்ளனராம். இந்த நகைகளின் அடமான காலம் காலாவதியானதால் அடகு வைத்தவர்களின் முகவரிக்கு நகைகளை திருப்புமாறு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸ் அத்தனையும் சுவற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்ததாம். சரியான முகவரியாக இருந்தால் தானே தபால் வீட்டுக்கு செல்லும். அத்தனையும் போலி முகவரியாம். அப்போதுதான் உயரதிகாரிகளுக்கு பின்னந்தலையில் உதைத்தது. நகைகளை ஆய்வு செய்தபோது அத்தனையும் போலி நகைகள். இவ்வாறு சுருட்டிய பணம் மட்டும் கோடிக்கு மேல் இருக்கும் என்கின்றனர். குட்டு வெளியானதால் நகை சரி பார்க்கும் ஊழியர் தலைமறைவாகி விட்டார்.  இத்தனைக்கும் இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் ஏற்கனவே குற்றச்சாட்டு காரணமாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவராம். இதை 3 ஆண்டுகளாக யாரும் கண்டுபிடிக்கவில்லையா, தணிக்கை செய்யவில்லையா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. எனவே பல உயர் அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருக்கலாம் என தெரிகிறது. எனினும் ஆய்வு முடிந்த பின்னர் தான் முழு விவரமும் தெரியும் என்கின்றனர் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரில் என்ன விவகாரம் இருக்கு..’’ ‘‘தூங்கா நகர் என்றாலே, எல்லாமே தூக்கத்தை கலைக்கிற மாதிரியே தான் நடக்குதாம். அரசு பெர்மிட் இல்லாமல் சாலையில் வாகனங்கள் ஓடக்கூடாது என்பது சட்டம். ஷேர் ஆட்டோக்கள் புற்றீசலாக ஆயிரத்துக்கும் மேல் பெருகியும், சிலவற்றுக்கு மட்டுமே பெர்மிட் இருப்பதாக தகவல் வெளியானது. உடனே போலீஸ் மூலம் சோதனை கெடுபிடி கடுமையானது. இதில் அவமானம் தாங்காமல் சமீபத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அமுங்கியது.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பெர்மிட் விவகாரம் பூதாகரமாக எழுகிறதாம். தூங்கா நகர் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஆயிரத்து 31 பஸ்களில், 250 பஸ்கள் பெர்மிட் இல்லாமலேயே ஓடிக் கொண்டு இருக்குதாம். இந்த பஸ்கள் விபத்தில் சிக்கினால், வேறு பஸ் பெர்மிட்டை போலியாக காட்டி தப்பிவிடுகிறார்களாம். இதை கண்காணிக்க வேண்டிய வட்டார அரசு போக்குவரத்து அதிகாரிகள் கண்ணை மூடிக் கொள்கிறார்களாம். தனியார் பஸ்கள் பெர்மிட் இல்லாமல் ஓட்டினால் தூங்காமல் விரட்டி, விரட்டி பிடித்து ஜப்தி செய்து அபராதம் விதிக்கிறார்களாம். பெர்மிட் எடுத்தால் வரி கட்டணும். டீசல் விலை எகிறியதால் நஷ்டத்தில் தத்தளிக்கும் போக்குவரத்துக்கழகம் மூழ்காமல் காக்க பெர்மிட் இல்லாமல் ஓட்டுகிறார்களோ என்னவோ அந்த இருட்டு ரகசியம் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கே வெளிச்சம். சினிமா காமெடி போல் ‘ஓட்டை உடைசல் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்’ கதியிலுள்ள 100 பஸ்கள் புகையை கக்கியபடி, படிக்கட்டுகள் ஆட்டத்துடன், பிரேக் கூட சரியாக பிடிக்காமல் ஓடுகிறதாம். இதையும் எப்.சி. எடுக்கும்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லையாம். இதுபோல், ஆம்னி பஸ்சாக பதிய வேண்டிய வெளிமாவட்ட 200 வாகனங்களை தூங்காநகருக்கு வந்து மேக்சி வேனாக பதிவு செய்து கொண்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விவிஐபி தொகுதியின் ஆக்டிங் டிஇஓவால் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் எல்லாம் அலறுகிறார்களாமே.. அது என்ன விவகாரம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பெண் அதிகாரி ஒருத்தரு டிஇஓவா இருந்தாலும், அவங்க ஆபிசுல இருக்குற மன்னர் பேர கொண்டவரு தான் அதிகாரமிக்கவராம். ஏதாவது சந்தேகம்னு கேட்குற எச்எம்கிட்ட, அதிகார தோரணையில ஒருமையில பேசி அவமானப்படுத்தராறாம். அதுமட்டுமில்லாம கல்வித்துறை வழக்கு சம்பந்தமா அடிக்கடி ஐகோர்ட்டுக்கு போறவரு, அதுக்கான செலவு தொகைய கவர்மென்ட் ஸ்கூல் எச்எம் கிட்ட தான் கலெக்ட் பண்ணுவாராம். அதுவும் அவரு கேட்குற தொகைய கொடுக்கலன்னா, பெண் அதிகாரிகிட்ட ஒன்னுக்கு ரெண்டா போட்டுக்கொடுத்து, எச்எம்களுக்கு டோஸ் வாங்கி கொடுப்பாறாம். இதுல அதிகம் பாதிக்கப்படுறது நாங்க தான்னு, முன்னாள் அமைச்சர் தொகுதிய சேர்ந்த எச்எம்ஸ் எல்லாம் புலம்பி தள்ளுறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தலில் உள்ளடி வேலை பார்த்தவருக்கு பதவி கொடுப்பதா என்று இலை கட்சிக்குள் புகைச்சலாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நடந்து முடிந்த உள்ளாட்சி ேதர்தலில் கிரிவலம் மாவட்டம் தெள்ளார் ஒன்றியத்தில் இலை தரப்பில் பெயரில் தங்கத்தை கொண்ட ஒன்றிய செயலாளர் போட்டியிட்டார். அதே கட்சியில் உள்ள தனமானவர் தனது பாட்னர் ஒருவரை சுயேச்சையாக நிற்க வைத்து தங்கமானவரை தோல்வியடையச் செய்தார். இலை தரப்பை சேர்ந்த கிழக்கு, மேற்கு ஒன்றிய ரத்தங்கள் தோல்வி அடைந்ததால், சுயேச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலரை ஒன்றிய குழு தலைவர் ஆக்க தூசியான எம்எல்ஏவை அணுகியுள்ளனர். அவர் ஆசியால் இலை, முரசு, மாம்பழம் ஆகிய 3 கட்சிகளில் 9 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் சுயேச்சையாக வெற்றி பெற்றவரை ஒன்றிய குழு தலைவர் வேட்பாளராக களம் இறக்கினர். இதில் உடன்பாடு இல்லாத இலை கூட்டணி தரப்பைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரே மாற்றி வாக்களித்தார். இதனால் இலை தரப்பு தோல்வியடைந்தது. இந்த சம்பவத்தால் ரத்தத்தின் ரத்தங்கள் கொதித்து போயினர். இந்நிலையில் கட்சியில் உள்ளடி வேலை பார்த்து இலை கட்சியின் தோல்விக்கு மூலகாரணமான தனமானவரை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆக்குவேன் என்று தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள 3 எழுத்து விஐபி முயற்சித்து வருகிறாராம். இதனை அறிந்த கட்சியின் ரத்தங்கள் உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை பார்த்தவர் இலை கட்சியில் ஒ.செ பதவிக்கு ஆசைப்படுவதா என்று கோபத்தின் உச்சத்தில் உள்ளார்களாம். தெள்ளார் ஒன்றியத்தில் தற்போது இந்த டாக் தான் ஹாட்டாக உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்