SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை வருகை: சிஏஏ குறித்து மோடியுடன் பேச திட்டம்

2020-02-23@ 00:06:17

புதுடெல்லி: இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயணத்தில் பிரதமர் மோடியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உட்பட மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச  டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு, ஜனவரி 2்0ம் தேதி பதவியேற்றார். விரைவில் அவருடைய பதவிக்காலம் முடிகிறது. இருப்பினும், வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக 2வது முறையாக அவர் போட்டியிட உள்ளார்.

இதற்கான தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை வருகிறார். அவருடன் மனைவி மெலானியாவும் வருகிறார். ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நாளை பகல் 12.30 மணிக்கு வரும் அவரை, பிரதமர் மோடியே நேரில் சென்று வரவேற்கிறார். டிரம்ப்பை வரவேற்க அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், இப்பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரியவர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, மோடி - டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) குறித்து மோடியுடன் டிரம்ப் பேச உள்ளதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அந்த அதிகாரி நேற்று அளித்த பேட்டி வருமாறு: ஜனநாயகம், மத சுதந்திரம் போன்ற விஷயங்கள் குறித்து தனது பயணத்தின்போது பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பொது வெளியிலும், தனிப்பட்ட முறையிலும் பேசுவார்.

குறிப்பாக, அமெரிக்க நிர்வாகம் மிக முக்கியமானதாக கருதும் மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் கட்டாயம் இடம் பெறும். இந்தியாவின் ஜனநாயக அமைப்பு மீது அமெரிக்காவிற்கு பெரும் மரியாதை இருக்கிறது. அதன் பாரம்பரியத்தை நிலைநாட்ட, இந்தியாவின் ஜனநாயகத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவிக்கும். நீங்கள் இங்கு எழுப்பிய சில விவகாரங்கள் (சிஏஏ, என்ஆர்சி குறித்த கேள்விகள்) குறித்து நாங்களும் கவலை கொண்டுள்ளோம்.
ஜனநாயகம் மற்றும் மத சிறுபான்மையினரின் நலனை இந்தியா தொடர்ந்து காக்க வேண்டும் என இந்த உலகம் விரும்புகிறது என்பதை பிரதமர் மோடியின் கவனத்திற்கு அதிபர் டிரம்ப் எடுத்து செல்வார் என்றே கருதுகிறேன்.

அனைத்து மதத்தினரையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்றுதானே இந்திய அரசியல் சாசனமும் வலியுறுத்துகிறது. எனவே, இந்த விவகாரம் பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமாக இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல உலக நாடுகளும் இச்சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றன. ஆனால், இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம், இச்சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்தியா தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ100 கோடி மர்மம் பிரியங்கா கேள்வி
அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ள ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக ‘டொனால்ட் டிரம்ப் நாகரீக் அபிநந்தன் சமிதி’ என்ற கமிட்டி வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி தான் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து விழாவை நடத்த உள்ளது. கமிட்டி தலைவராக அகமதாபாத் மேயர் பிஜல் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கமிட்டி குறித்த தகவல்கள் தொடர்ந்து ரகசியமாக வைக்கப்படுகின்றன. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் எழுப்பிய கேள்வியில், ‘டிரம்ப்பை வரவேற்க ரூ.100 கோடி செலவிடப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் உறுப்பினர்களுக்கே, அவர்கள் உறுப்பினராக இருக்கும் விஷயம் தெரியவில்லை. இந்த கமிட்டிக்கு எந்தெந்த அமைச்சகம் எவ்வளவு நிதி தருகிறது என்ற விவரத்தை நாடு தெரிந்து கொள்ள உரிமை இல்லையா? இந்த கமிட்டி மூலம் அரசு எதை மறைக்கிறது?’ என கேட்டுள்ளார்.

தீவிரவாதத்தை ஒழித்தால் இந்தியாவுடன் பேசலாம்
பாகிஸ்தான் பிரச்னை பற்றி வெள்ளை மாளிகை உயர அதிகாரி தனது பேட்டியில் மேலும் கூறுகையில், ‘‘இந்தியா-பாகிஸ்தான்  இடையிலான பதற்றம் தணிந்திருப்பது ஊக்கமளிக்கிறது. இருநாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் தனது எல்லையில்  தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் அடியோடு ஒடுக்கும் நடவடிக்கைகளை  எடுத்தால் மட்டுமே, இந்தியாவுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை  தொடங்க முடியும். இதை அமெரிக்காவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது,’’ என்றார்.

3 விமானத்தில் பாதுகாப்பு சாதனம் அதிபர் டிரம்ப் உயிரை காக்கும் கார்
1. அதிபர் டிரம்ப்பின் 2 நாள் இந்திய பயணம் நாளை தொடங்குகிறது. ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் தனது மனைவி மெலானியாவுடன் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகிறார். இதையொட்டி, அகமதாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் வரை 22 கிமீ தூரத்திற்கு டிரம்ப் தனது அதிநவீன காரில் பயணிக்கிறார். டிரம்ப் வருகைக்கு முன்பாக ஏற்கனவே 3 பெரிய சரக்கு விமானங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் அகமதாபாத் வந்தது விட்டன. இதில்தான் ‘மரைன் ஒன்’ ஹெலிகாப்டரும், தி பீஸ்ட் என்ற சொகுசு எஸ்யுவி காரும் கொண்டு வரப்பட்டுள்ளது.
2. இந்த கார் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். இதன் விலை ₹10 கோடி மட்டும். இது குண்டு துளைக்காத கார். எடை 9 டன்களுக்கும் அதிகம்.

3. காருக்குள் இருந்தே தாக்குதல் நடத்தும் துப்பாக்கிகள், கண்ணீர்ப் புகை குண்டு வீசும் சாதனங்கள் இருக்கிறது.
4. அதிபருக்கு காயம் ஏற்பட்டு, ரத்த இழப்பு ஏற்பட்டால் செலுத்துவதற்காக டிரம்ப் ரத்த பிரிவை சேர்ந்த ரத்த பாட்டில்கள் ஒரு ஃபிரிஜ் நிறைய இருக்கும்.
5. டிரைவர் கேபினில் அனைத்து அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும். செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் துணை ஜனாதிபதி மைக் பென்சுடனோ, அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனுடனோ எந்த நிமிடமும் தொடர்பு கொண்டு பேச முடியும்.

6. காரில் உள்ள ஆயில் டாங்க் மீது குண்டு விழுந்தால் கூட வெடிக்காத அளவுக்கு உறுதியான பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
7. நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரிகளும், கமாண்டோக்களும் டிரம்ப் பாதுகாப்புக்கு வந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்