SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் மாபியாக்கள் இஷ்ட தெய்வத்துக்கு பூஜை போட்ட பின்னணியை சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-22@ 00:49:45

‘‘வேலூரில் மத்திய நிதியிலான பணிகள் பெயரளவுக்கு மட்டுமே நடக்குதா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ₹1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் அம்ரூத், சீரமைப்பு பணிகள், விட்ட குறை, தொட்ட குறை என்று ஏகப்பட்ட பணிகளுக்கு டெண்டர் மேல், டெண்டர் விடப்படுகிறது. இதில் பெரும்பாலான பணிகள் பெயரளவில் மட்டுமே நடக்கிறதாம். பெரும்பாலான கான்ட்ராக்டர்கள் பணியை செய்து முடித்தும் பில் கிடைக்கவில்லையே என்று ஏக்கத்தில் உள்ளார்களாம். இதில் ஆளும் கட்சியை சேர்ந்த பகுதி செயலாளரான, பெயரின் முடிவில் சாமியை கொண்டவரும் மாநகராட்சி பணிகளை அதிகளவில் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறாராம். இவர் கான்ட்ராக்ட் பணிகளை முழுமையாக முடிக்காமலே பணியை முடித்ததாக கணக்கு காட்டி, டெண்டருக்கான பில் தொகையை பெற்று கோடிகளில் சுருட்டி வருகிறாராம்.
இப்படி இலை கட்சியைச் சேர்ந்த கான்ட்ராக்டரின் தில்லாலங்கடியை பார்த்து மற்ற கான்ட்ராக்டர்களும் அதே பாணியை பின்பற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்களாம். இதனால் மாநகராட்சியில் டெண்டர் விடப்பட்ட பணிகள் கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாம். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு, மாநகராட்சிகளில் டெண்டர் விடும் பணிகள் சரியான முறையில் முடிக்கப்பட்ட பின்னர்தான் அதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘எந்த ஊரில் மணல் மாபியாக்கள் விசேஷ வழிபாடு நடத்தினாங்க...’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘விருதுநகர் மாவட்டத்துலதான்... இங்கு திருச்சுழி டிஎஸ்பியாக சசிதரன் இருக்காரு... இவர் பொறுப்பேற்ற பின்பு திருச்சுழி குண்டாறு மற்றும் பட்டா நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாராம்... சென்சிட்டிவ் ஏரியாவான இப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை வராமலும், தீவிர கண்காணிப்புல ஈடுபட்டாராம்... நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதாம்... இதனால் ஆளுங்கட்சி தரப்புல ஓவர் டார்ச்சரு... கடந்த 10 நாட்களாக மனுஷன் கட்டாய விடுமுறையில இருக்காரு.... இதனை பயன்படுத்தி மணல் மாபியாக்கள், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு, சில லகரங்களை அள்ளிக்கொடுத்ததால், பட்டா நிலங்களில் மினி மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாம்... இதனால் அரசுக்கு பல கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாம்... மேலும் மணல் அள்ளுவதாக வருவாய் மற்றும் காவலர்களிடம் புகார் அளித்தால் கூட கண்டுகொள்வதில்லையாம்... விடுமுறை முடிந்து திரும்பும் டிஎஸ்பி சசிதரன், டார்ச்சர் தரக்கூடாது என்பதற்காக, அவருக்கு விரைவில் டிரான்ஸ்பர் கிடைக்க வேண்டுமென மணல் மாபியாக்கள் சேர்ந்து உள்ளூர் இஷ்ட தெய்வ கோயிலில் பரிகார வழிபாடு நடத்தி வருகின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அலுவலகத்தில் குடித்து விட்டு ஆட்டம் போடும் அதிகாரி யார்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஈரோடு மாநகராட்சி 2வது மண்டலத்தில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி, பெண்கள் விஷயத்தில் படு வீக்காக உள்ளார். மாநகரில் துப்புரவு பணிக்கு பெண்களை தேர்வு செய்வதே இந்த அதிகாரிதான். இப்படி தேர்வு செய்யப்படும் பெண்களில், கொஞ்சம் மூக்கும், முழியுமாக இருந்தால், அப்பெண்களுக்கு இவரது அலுவலகத்திலேயே சிறப்பு பணி வழங்குகிறார். இவர், விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வருகிறார். வரும்போது, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மது கலந்து எடுத்து வருகிறார். மது குடித்துவிட்டு, தனக்கு இணக்கமாக உள்ள பெண் ஊழியர்களை வரவழைத்து, நீண்டநேரம் தனிமையில் சந்திக்கிறாராம். தனக்கு வேண்டப்பட்ட பெண் ஊழியர்களுக்கு சிறப்பு பணி, மீதமுள்ள ஊழியர்களுக்கு தெருவில் குப்பை அகற்றும் பணி என இரு முகத்துடன் இந்த அதிகாரி நடந்துகொள்வதால், பெண் ஊழியர்களிடையே கடும் சலசலப்பு உருவாகியுள்ளது.பெண்கள் விஷயம் மட்டுமின்றி, காசு பார்ப்பதிலும் இந்த அதிகாரி படு கில்லாடி. நகரில், பெரும்பாலான துப்புரவு பணி, மகளிர் சுயஉதவி குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், குறைந்த அளவு பணியாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்திவிட்டு, அதிகளவில் பணியமர்த்தியதாக கணக்கு காட்டி காசு பார்த்து விடுகிறார். இவர் மீது ஏற்கனவே ஒருமுறை கடும் புகார் எழுந்தபோது, 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது, மாநகராட்சியில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரியும், இவரும் ரொம்ப நெருக்கம் என்பதால், அந்த அதிகாரி, இவரை காப்பாற்றி விட்டார். தற்போது அந்த அதிகாரி பணி ஓய்வுபெற்று விட்டார். தற்போது, இவரது ஆட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிண்டிக்காரர் பங்களாவில் என்ன நடக்கிறது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ராணுவ துறையின் பாதுகாப்பு உயர் அதிகாரி, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு அதிகளவு டார்ச்சர் கொடுக்கிறாராம். அவர் வாக்கிங் வரும்போதுகூட எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை என்றாலும் ஆபாசமாக திட்டி, வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன் என்று மிரட்டுகிறாராம். இதுபோல் சில காவல்துறை அதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்றியும் விட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் சேலம் விருந்தினர் மாளிகையில் கவர்னருடன் இந்த ராணுவ அதிகாரியும் சென்றிருந்தார். இவர் தங்கிய அறையில் நவீன வசதிகள் இல்லை என்பதால் வருவாய் துறை அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், வழக்கம்போல் வேறு இடத்திற்கு மாற்றிவிடுவேன் என்றும் மிரட்டினாராம். இதையெல்லாம் கிண்டி மாளிகையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த அதிகாரிகள் பதில் தெரிவித்து விட்டனர். இவரது நடவடிக்கை பற்றி கவர்னரிடம் புகார் செய்தாலும், ஏதாவது சொல்லி அவரை நம்ப வைத்து விடுகிறாராம். பாதுகாப்பு அதிகாரிக்கு பதிலாக இன்னொரு பாதுகாப்பு அதிகாரி அசாமில் இருந்து வந்துள்ளாராம். ஆனாலும், ராணுவ உயர் அதிகாரி பதவி நீட்டிப்பு கேட்டு பெற்றுள்ளார். பணியிட மாற்றம் செய்தாலும் ராஜ்பவன் சொகுசு அதிகாரிகளை இங்கிருந்து செல்லாமல் தடுத்துவிடுகிறது என்று கவர்னர் மாளிகை ஊழியர்கள் கூறுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்