SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும் : ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை

2020-02-21@ 17:49:42

சென்னை : சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக தமிழக அரசு செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது என்பதை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்கள், சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் செயல்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகமும், அவர்கள் வழியில் நடைபெறும் கழக அரசும், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.“ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்ற சகோதரத்துவ உணர்வில் ஆழமான நம்பிக்கை கொண்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இது உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். மதத்தின் பெயரால் மனிதர்களை பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி, எல்லோரையும் சொந்த பந்தங்களாகவும், சகோதரர்களாகவும் நேசித்துப் பழகுவதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை.

அதுவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காட்டிய பாதை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்திலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவதும் கழக அரசுதான்.

*ஹஜ் புனித பயணத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், கழக அரசு ஆண்டுதோறும் ஹஜ் மானியமாக 6 கோடி ரூபாயை வழங்கி வருகிறது.
    
*தமிழ் நாட்டில் உள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5,145 மெட்ரிக் டன் அரிசியை ரம்ஜான் மாதத்தில் வழங்கி வருகிறது.
   
* நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை தமிழ் நாடு அரசே வழங்கி வருகிறது.

*மாவட்ட ஹாஜிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம்.
    
*பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் வக்ஃபு நிறுவனங்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி தொகுப்பு நிதி,
    
*தமிழ் நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக குறைந்த வட்டியில் கல்விக் கடன், தனிநபர் மற்றும் சிறுகடன்கள் கழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
   
* ஓய்வுபெற்ற உலமாக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.
    
*ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நான்காயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி பாஸ்போர்ட், பயண உடைமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள ஒரு ஹஜ் இல்லம் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
    
*வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25,000/- ரூபாய் (அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை) மானியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர, இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறெந்த மாநிலத்திற்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.

இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் கழக அரசு செயல்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1948-ல் அதற்கென்று ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2003-ஆம் ஆண்டு, மத்தியில், திமுக அங்கம் வகித்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக,
குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ் குடியுரிமை விதிகள், 2003 உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்த விதிகளின் கீழ், 2010-ஆம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து நபர்களின் விபரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுகிறது.

தாய்மொழி, தந்தை/தாயார்/துணைவர் பிறந்த இடம்/பிறந்த தேதி விபரம் மற்றும் ஆதார்/கைபேசி எண்/வாக்காளர் அட்டை/ஓட்டுநர் உரிம எண் ஆகிய விபரங்கள், 2020-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழ் நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்களாக அமைதியாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து, வளமான வாழ்வை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் தோளோடு தோள் நின்று உழைப்போம்! உயர்வோம்!

கழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

தமிழ் நாட்டில் எந்தஒரு சிறுபான்மை சகோதர, சகோதரிக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. கழக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இஸ்லாமிய சமூகத்திற்கு என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும் என்று  தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்