SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனியில ஜில்...ஜங்... ஜக்கின் ஆட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-21@ 00:36:47

‘‘பெயர் மாறுமா... மாறாதா...’’ குழப்பத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கணும், பேரை மாத்த கூடாது என அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கிண்டிக்காரருக்கு கடிதம் எழுதியிருக்காங்க. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் உலகம்  முழுவதும் பிரபலம், வேறு பல்கலைக்கழகத்துடன் அபிலியேஷன் பெற்றதாக மாணவர்களுக்கு சர்ட்டிபிகேட் வழங்க முடியாது. அதனால் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாதுன்னு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஒருபக்கம் பிரஷர்  குடுக்குறாங்க... அதனால பல்கலைக்கழகத்தின் பெயர் மாறுமா, மாறாதா என்பது கிண்டிக்காரர் கையில்தான் இருக்கு... என்றார் விக்கியானந்தா.‘‘தேனியில ஜில்... ஜங்... ஜக்கின் புலம்பல் அதிகம் கேட்குதாமே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சி எம்எல்ஏவின் புலம்பல் அது. அதாவது, தேனி மாவட்டத்துல இலையில  இருந்து பிரிந்து கிப்ட் கட்சிக்கு ஆதரவு கொடுத்து, அப்புறம் சேலம்காரர் பக்கம் தாவி,  ‘ஜக்’ என்ற பெயர் வாங்கியவர் கம்பம் தொகுதி அதிமுக எம்எல்ஏ...  அப்போது இவருக்கு மாவட்ட செயலாளர் பதவி தருவதாக பேச்சு ஓடிச்சு... கடைசியில தேனிக்காரர் ஆதரவாளரான கானை மாவட்ட செயலாளராக ஆக்கினாங்க... இதனால அதிருப்தியில இருந்த ‘ஜக்’வுக்கு அண்ணா தொழிற்சங்க பேரவை  கன்வீனர் பொறுப்பை கொடுத்தாங்க.... கடந்த 2 வாரத்துக்கு முன்பு, கன்வீனர் பொறுப்பில் இருந்து இவரை கழற்றி விட்டு போக்குவரத்துத்துறை அமைச்சரை  தொழிற்சங்க பேரவைச்செயலாளராக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டா அறிவிச்சாங்க.  சமீபத்துல எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு, கம்பம் வந்த எம்பியை முஸ்லிம் அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டாங்க... இதை கண்டிச்சு இலைக்காரங்க, கம்பத்துல மறியல் போராட்டம் நடத்துனாங்களாம்.... இந்த  போராட்டத்துக்கு உள்ளூர்ல இருந்துட்டு, ‘ஜக்’ காலைலதான் வந்தார்னு தேனிக்காரருக்கு கடுங்கோபமாம். அதனாலதான் அதிரடியா நீக்கப்பட்டார். கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத குறையா, ‘மாவட்ட செயலாளர் பொறுப்பை எனக்கு  தரப்போறாங்க... அதனால தலைமை தன்னை நீக்கிச்சு...’ என்று, ‘ஜக்’ இலை கட்சி தொண்டர்கள்கிட்டே சொல்லிக்கிட்டிருக்கிறாராம்... ‘மறுபடியும் முதல்ல இருந்தா’ என தொண்டர்கள் ‘மைண்ட் வாய்சை’ வால்யூம் கூட்டி சொல்லிக்கிட்டு  திரியுறாங்கப்பா...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொள்ளைக்காரனிடம் கொள்ளையடித்த காக்கி அதிகாரியை நினைத்து அதிரும் காக்கிகள் குறித்து சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் பங்களாவில் சமீபத்தில் கொள்ளை நடந்தது. 134 பவுன் தங்க நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக துடியலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளியை கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது, கேரள மாநிலம் பாலக்காடு நகரில் உள்ள ஒரு அடகுக்கடையில், திருட்டு  நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறியுள்ளான். அதன் அடிப்படையில் போலீசார் கேரளா சென்று, அடகுக்கடை உரிமையாளரை பிடித்து விசாரித்தனர். அப்போது, 50 பவுன் நகை மட்டுமே அடகு வைக்கப்பட்டுள்ளது எனக்கூறி அதற்கான ரசீது  ஆதாரத்தை காட்டியுள்ளார்.மிரண்டுபோன தனிப்படை போலீசார், கணக்கு உதைக்குதே மச்சான்... என, அந்த கொள்ளையனை மீண்டும் கோவைக்கு அழைத்துச்சென்றனர். ஒரு தனி அறையில் வைத்து, நன்கு கவனித்தனர். அப்போது அவன், ‘சார், சும்மா... சும்மா  அடிக்காதீங்க... உங்களுக்கு ஒரே ஒரு காவல் நிலையம்தான். ஆனால், எனக்கு பல காவல் நிலையம் இருக்கு. எனது எல்லை விரிவானது... ஒவ்வொரு பகுதியில் கொள்ளையடிக்கும்போது, சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு ஏதாவது பங்கு  கொடுத்தால்தானே எனது பொழப்பு ஓடுது... அப்படி கொஞ்சம், கொஞ்சமாக பங்கு கொடுத்தது போக, மீதி 50 பவுன்தான் தேறிச்சு... அதைத்தான் அடகு வைத்துள்ளேன். அதை வேண்டுமானா நீங்க எடுத்துட்டு போங்க... என்னை, ஆளை விட்டால்  போதும்...’ என கூலாக பதில் அளித்துள்ளான். இதைக்கேட்டு, அதிர்ந்துபோன தனிப்படை போலீசார், எந்த அதிகாரி கிட்டே போய், எப்படி மீட்பது..? என்ற குழப்பத்தில் தவிக்கின்றனர்.
‘‘வேலியே பயிரை மேய்ந்தால் இப்படிதான்.. சரி விழுப்புரம் மேட்டருக்கு வா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாங்கனி கட்சி முன்னாள் எம்எல்ஏ, பாஜகவில் ஐக்கியமானார். தேசிய கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விடலாம் என கனவுடன், வரதமானவர் திட்டம் போட்டு கட்சியில் சேர்ந்தார். கட்சியில் உறுப்பினர்  சேர்த்து, மாவட்ட தலைவர் பதவிக்கு பகீரத முயற்சி எடுத்தாராம். ஆனால் கட்சிக்கு புதியவர் என்பதால் வேறு ஒருவருக்கு மாவட்டம் கிடைக்கும் என தகவல் வெளியானதும். பெட்டி படுக்கையுடன் கமலாலயம் சென்று, எப்படியோ  மாவட்டத்தை வாங்கி வந்துவிட்டதால், ஏற்கனவே இருப்பவர்கள் கடும் புகைச்சலில் இருக்கிறார்களாம்.அதோடு வந்த வேகத்தோடு கட்சி பதவியை வைத்து வேறு ஏதாவது சாதித்துவிட வேண்டும் என துடித்து பல வழிகளை கையாள்கிறாராம். தனக்கு வேண்டப்பட்டவர்களையெல்லாம் முக்கிய பதவிகளில் போட்டுவிட நடவடிக்கை எடுத்தாராம்.  லிஸ்ட் எடுத்துக்கொண்டு மீண்டும் கட்சி தலைமைக்கு சென்றாராம். கட்சி வளர்ச்சிக்கு ஏதாவது செய்யுங்க... தேர்தல் மூலம் தேர்வானவர்களுக்குதான் பதவி என முகத்தில் அடித்து அனுப்பினார்களாம். அதோடு கிழக்கு கடற்கரை சாலையில்  டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளாராம்.உள்ளே புகுந்து விசாரித்ததில், ஏற்கனவே பார் வைத்திருக்கும் இலைக்கட்சிகாரர் மாவட்டத்தை அணுகி புதிதாக கடைதிறந்தால், எனக்கு பாதிப்பு, நீங்க போராட்டம் நடத்தினால், கவனிப்பதாக கூறியுள்ளாராம். இதனாலே வரதமானவர்  போராட்டம் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பதவிக்கு வந்தவுடன் கலெக்‌ஷன் தானா என லோக்கல் கட்சிக்காரர்கள் குமுறுகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்