SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிள்ளித் தரலாமா?

2020-02-20@ 00:22:07

உலகில் சுமார் 3 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் வரை மொழிகள் இருக்கும் என மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். இதில் சில மொழிகளே எழுதவும், பேசவும் பயன்படுகின்றன. இதில் வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் மிக மிகக்குறைவு. இவற்றிற்கு 6 மொழிகள் தாயாக  உள்ளன. பேச்சுவழக்கில் இல்லாத எபிரேயம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் மற்றும் உயிர்ப்போடு பேச்சுவழக்கில் இருக்கும் தமிழ், சீனம் ஆகியவையே அந்த ஆறு மொழிகள்.இதில்  உலக மொழிகளில் மூத்ததும், முன்னோடியாக இன்னும் இளமை குன்றாமல் திகழும் மொழி தமிழ்  மட்டும் தான். எழுத்தளவிலும், பேச்சளவிலும்  இளமை குன்றாதது தமிழ் மொழி. அப்படிப்பட்ட தமிழ் மொழியை மத்திய அரசு  தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில்  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘‘சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் டெல்லியில் நிறுவப்பட்ட  ராஷ்டிரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் அமைப்புக்காக கடந்த 3 ஆண்டில் 643.84 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் 231.15 கோடி ரூபாயும், 2018-19ல் 214.38 கோடி ரூபாயும், 2017-18ல் 198.31 கோடி ரூபாயும்  செலவிடப்பட்டுள்ளது’’ என  கலாசாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அள்ளிக் கொடுத்த மத்திய அரசு, மற்ற செம்மொழிகளான  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளின் வளர்ச்சிக்கு நிதியை கிள்ளிக்கூட கொடுக்கவில்லை. இந்த 5 செம்மொழிகளுக்கும் சேர்ந்து  மத்திய அரசு வழங்கிய தொகை 29 கோடி ரூபாய் மட்டும் தான். இதில் சமஸ்கிருதத்திற்கு வழங்கிய கூடுதல் நிதியால் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதியை மத்திய அரசு படிப்படியாக குறைத்திருப்பது தற்போது அம்பலமாகி
யுள்ளது.கடந்த 2017-18ல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு 10.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2018-19ல் 4.65 கோடி ரூபாயும், 2019-20ல் 7.7 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு மொழிகளின் வளர்ச்சிக்கு  2017-18ல்  தலா 1 கோடியும், 2018-19ல் 99 லட்ச ரூபாயும், 2019-20ல் 1.07 கோடி ரூபாயுமே செலவிடப்பட்டுள்ளது. மலையாளம், ஒடியாவுக்கு ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை. அம்மொழிகளுக்கு ஆய்வு மையமும் அமைக்கப்படவில்லை.பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டங்களில் தமிழில் வணக்கம் சொல்வதும், திருக்குறளில் இருந்து குறள்களை எடுத்தாழ்வதும் மட்டுமே தமிழுக்கு பெருமை சேர்க்காது. அவற்றை வழங்கிய தமிழ் மொழிக்கும், பிற மொழிகளுக்கும் உரிய அந்தஸ்தையும், நிதியையும் வழங்க வேண்டும். சமஸ்கிருதத்திற்கு மட்டும் வெண்ணெயை பூசி அழகு பார்த்து விட்டு மற்ற மொழிகளின் மீது சுண்ணாம்பு பூசும் வேலையை மத்திய அரசு இனிமேலாவது கைவிட  வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்