SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் இலக்கியத்தை புதுப்பித்த ‘தாத்தா’: இன்று உ.வே.சா பிறந்ததினம்

2020-02-19@ 15:29:08

ஒரு நாட்டின் பாரம்பரியம் என்பது மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அடிப்படையாக கொண்டது. இதில் முக்கியமாக மொழியை பாதுகாப்பதன் மூலம் நமது பாரம்பரிய பெருமைகளை உலகம் அறியச் செய்யலாம். அந்த வகையில் தமிழுக்காக பெரும் தொண்டாற்றியவர் தமிழ் தாத்தா, உ.வே.சா என அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர். இன்று அவருக்கு 165வது பிறந்தநாள். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உத்தமதானபுரம் கிராமத்தில் 1855ம் ஆண்டு, பிப்.19ம் தேதி, வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சாமிநாதன் என்கிற உ.வே.சாமிநாத ஐயர். அன்று குழந்தையாக பிறந்தவர், பின்னாளில் ‘தமிழ் தாத்தா’ என அழைக்கப்படுவார் என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை. வாய்ப்பும் இல்லை. ஏன் தெரியுமா?

இவரது தந்தையான வேங்கட சுப்பையர், ஊர் ஊராக சென்று இசையுடன் கூடிய கதாகலாட்சேபம் செய்யும் கலைஞர். தனது மகனையும் இசைக்கலைஞராக எண்ணிய தந்தை, சாமிநாதனுக்கு இசைக்கல்வியை பயிற்றுவித்தார். ஆனாலும், இவரது மனம் தமிழையே சுற்றி, சுற்றி வந்தது. இதனைத்தொடர்ந்து திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்கத்தொடங்கினார். ஆர்வத்தில் தொடங்கிய தமிழ் படிப்பு, சாமிநாதனை அன்போடு அணைத்துக் கொண்டது. கற்பவராக சென்றவர் தமிழறிஞராகத்தான் வெளியே வந்தார்.
இந்த தமிழ் படிப்பு அவருக்கு ஆசிரியர் பணியை பெற்றுத் தந்தது. கும்பகோணம், சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு தமிழ் மொழியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தோன்றியது.

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் பனை ஓலையில் எழுதப்பட்டு வந்தன. இவற்றை நூலாக அச்சிட எண்ணினார் உ.வே.சாமிநாத ஐயர். இதையடுத்து திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களில் பண்டை கால தமிழ் இலக்கிய சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அழியும் நிலையில் இருந்து பனை ஓலைச்சுவடிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை புதுப்பித்தால் இனி வரும் தலைமுறைக்கு பயன்படுமே என எண்ணினார்.
இதையடுத்து சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை பதிப்பித்து நூல்களாக வெளியிட்டார். மேலும், குறுந்தொகை இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். சங்க நூல்கள், பிற்கால நூல்கள், இலக்கண நூல்கள், திருவிளையாடற் புராணம் என 4 வகைகளில் நூல்களை வெளியிட்டார். இதுவே பாரம்பரியத்தை பறை சாற்றும் என முழுமையாக நம்பினார். நூல்களை அச்சிடுவதற்கான செலவு உள்ளிட்டவைகளுக்காக மிகுந்த சிரமப்பட்டார். சுமார் 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார்.

இவர் தமிழுக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றிய பெரும் பங்கை பாராட்டி, கடந்த 1932ம் ஆண்டு இவருக்கு ‘மதிப்புறு முனைவர்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. தனது இறுதிக்காலத்தில் இவர் தமிழ் சேவையை நிறுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் ‘தமிழ் தாத்தா’ என அழைக்கப்பட்டார். தொடர் பணிகளால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து 1942, ஏப்.28ம் தேதி, தனது 84வது வயதில் உயிரிழந்தார். இவரது மொழிச்சேவையை பாராட்டி மத்திய அரசு 2006, பிப்.18ம் தேதி, இவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது. உத்தமதானபுரத்தில் இவர் வசித்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இவரது பெயரில் சென்னையில் டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இவர் போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களை பதிப்பித்து புதுப்பிக்காமல் இருந்தால், பல அரிய நிகழ்வுகள் நாம் அறியப்படாமலே போயிருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்