SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையில் எடுக்குமா சி.பி.ஐ.?

2020-02-19@ 00:22:29

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து, குரூப்-2 தேர்வுகளிலும் மோசடி நடந்துள்ளதாக வெளியான தகவல், பல லட்சம் இளைஞர்களின் எதிர்கால கனவில் மண் அள்ளிப்போட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகள் ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தன் ஆகிய இருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது, மற்றொரு மெகா மோசடியாக, கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் தலா ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு இருவரும் பெரிய அளவில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த 12 பேர் இடைத்தரகர்கள் மூலம் தலா ₹8 லட்சம் கொடுத்து மோசடியாக தேர்வு எழுதி, பல்வேறு அரசு பதவிகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அரசுப்பணி பெற்றுள்ளனர். இந்த 12 பேரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டனர். 12 பேரும் சிக்கினால், இன்னும் மெகா பூதம் வெளிவரும் என்பது உறுதி.

சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரை சேர்ந்த சித்தாண்டி, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படைப்பிரிவில் எஸ்.ஐ.யாக உள்ளார். இவர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக நடராஜ் பணிபுரிந்தபோது, அவரிடம் கார் ஓட்டுனராக பணியாற்றியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நடராஜ் பதவி ஏற்றபோது, சித்தாண்டியும் அவருடன் ஒட்டிக்கொண்டார். நடராஜுக்கு பிறகு அந்த பதவிக்கு வந்த நவநீதகிருஷ்ணனுக்கும் இவரே கார் ஓட்டுனராக இருந்தார். இதன் காரணமாக, தேர்வாணைய வட்டாரத்தில் சித்தாண்டிக்கு நன்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம் மூலமாக சித்தாண்டி தனது சித்து விளையாட்டுகளை அரங்கேற்றியுள்ளார்.2017 குரூப்-2ஏ தேர்வில் தன் மனைவி, சகோதரர், அவரின் மனைவி உள்பட தன் குடும்பத்திலேயே 4 பேரை குறுக்குவழியில் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் வெற்றிபெற வைத்துள்ளார் சித்தாண்டி. இதில் பிரச்னை எதுவும் எழாததால், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த குரூப்-4 தேர்விலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார் சித்தாண்டி. சித்தாண்டியை கைது செய்துவிட்டதால் பிரச்னை முடிந்துவிட்டது என போலீசார் நினைத்து விடக்கூடாது. இன்னும் பல நூறு சித்தாண்டிகள் டி.என்.பி.எஸ்.சி. யில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டால் மட்டுமே உண்மை உலகிற்கு வரும். தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், சிறிய குழி வெட்டியதிலேயே இவ்வளவு பெரிய பூதம் கிளம்பியிருக்கிறது. இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு, நங்கூரம் பாய்ச்சினால் இன்னும் எத்தனை பெரிய பூதம் வெளிவருமோ தெரியவில்லை. தொடரட்டும் வேட்ைட..!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்