SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை அமைச்சரை மிரட்டும் கோயம்பேடு கட்சி மாஜி எம்எல்ஏவின் கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-19@ 00:08:46

‘‘எம்.எல்.ஏ.வை தெறிக்க விட்ட நர்சுகள்... பத்தி சொல்ல ஆரம்பிச்சீங்க, என்ன சமாச்சாரம் அது’ என்று பேசத்துவங்கினார் பீட்டர் மாமா.
‘வில்லுக்கு விஜயன்' பெயர் கொண்ட கோவை மாநகர இலை கட்சி எம்எல்ஏ ஒருவர் மார்தட்டியபடி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை வளாகத்தை முழுமையாக சுற்றி முடிப்பதற்குள் பெரும்பாலான நர்சுகள் அவரை சூழ்ந்துகொண்டனர். ‘இந்த மருத்துவமனையில் 600 நர்சுகள் பணிபுரிய வேண்டும். ஆனால், 215 பேர் மட்டுமே இருக்கிறோம். சுமார் 400 காலிப்பணியிடம் இருப்பதால் எங்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. இத்தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் இங்குள்ள நர்சு காலிப்பணிடத்தை நிரப்ப, நீங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்' என்று ஒன்றுசேர்ந்து கேட்க... ஆடிப்போனார் இலை கட்சி எம்எல்ஏ... பிறகு ஒருவழியாக சமாளித்தபடி
‘ஏம்மா... அரசாங்கமா பார்த்து ஏதாவது போஸ்டிங் போட்டால்தான் உண்டு... நான் எல்லாம் என்னம்மா செய்ய முடியும்' எனக்கூற, நர்சுகள் மீண்டும் ஒரு பிடி பிடித்தனர். ‘தொகுதிக்குள் இருக்கிற குறைகளை அரசிடம் தெரிவித்து, முடிந்தவரை நிவர்த்தி செய்வதுதான் எம்.எல்.ஏ.வின் வேலை. இதைக்கூட உங்களால் செய்ய முடியாதா?' என எதிர்கேள்வி கேட்க, எம்.எல்.ஏ. ஆடிப்போய்விட்டார். அய்யோ... ஆய்வும் வேண்டாம், ஆப்பும் வேண்டாம்... ஆளை விடுங்கடா சாமீ என தலைதெறிக்க தப்பி ஓடிவிட்டார். எங்கள் தலைவரையே தெறிக்க விட்டுட்டீங்களே.... என உடன் வந்த விசுவாசிகள் கொதித்துப்போய் விட்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலையை மிரட்டும் கோயம்பேடு கட்சி மாஜி எம்எல்ஏ பற்றி சொல்லுங்களேன்...’’
‘‘உள்ளாட்சித்தேர்தல்  பணிகள் மீண்டும், மும்முரமாக நடந்து வரும் நிலையில் இப்போதே  அதிக சீட்டு கொடுக்க வேண்டுமென விழுப்புரத்தை சேர்ந்த இலை கட்சி அமைச்சரை மறைமுகமாக கோயம்பேடு கட்சியை சேர்ந்த தேமுதிக மாஜி எம்எல்ஏ  மிரட்டினாராம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல எங்களால்தான் ஜெயிச்சிங்க, கோயம்பேடுகாரர், அவரது மனைவியை அழைச்சிட்டு வரலன்னா ஜெயிச்சிருக்க மாட்டாங்கன்னு  கட்சி கூட்டத்தில் பேசி அமைச்சருக்கு மிரட்டல் விடுத்திருக்காராம்  பெருமாள் பெயரைக் கொண்ட, கோயம்பேடு கட்சியை சேர்ந்த  மாஜி எம்எல்ஏ, தனித்து போட்டியிட்ட,  தேமுதிகவின் வாக்கு வங்கிகளையும் புள்ளி விவரத்துடன் அமைச்சருக்கு  தெரியப்படுத்திருக்காறாம். பாமகவைவிட அதிகசீட்டு கொடுக்கலன்னா  வேறலெவலாகிவிடும் என்றும் பேசியிருக்காறாம். எப்படியாவது உள்ளாட்சியில்  அதிக இடங்களை புடிச்சிட்டா, கரைந்துபோன கட்சியை பலப்படுத்திடலாம்னு  திட்டம் போட்டிருக்காறாம். அதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம். இதுபோன்று அனைத்து மாவட்டத்திலும் இந்த பிரச்னை உள்ளது. தலைமை விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோயம்பேடு கட்சி நிர்வாகிகள் புலம்பி வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில சுருட்டிய பணத்தில் ஹைடெக் ரைஸ்மில் உருவானதாமே..?’
‘‘திருச்சி இலை கட்சி பெண் எம்எல்ஏவிடம் உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை நிர்வாகிகளுக்கு கொடுக்காமல் தானே சுருட்டி கொண்டுள்ளார். ஏற்கனவே வைத்திருந்த சிறிய ரைஸ்மில்லை சுருட்டிய பணம் மூலம் புதுப்பித்து ஹைடெக்காக மாற்றி உள்ளதாக கட்சியினர் தங்களது அதிருப்தியை கொட்டி வர்றாங்க... தொகுதி மக்களுக்கென ஆக்கப்பூர்வமான எந்த திட்டத்தையும் செயல் படுத்தாமல் தனக்கு மட்டும் சொத்து சேர்த்த எம்எல்ஏவை தாக்கியது எந்த விதத்திலும் தவறு இல்லை. மாறாக தேர்தல் நிதியை சுருட்டிய அந்த பெண் எம்எல்ஏ மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தலைமை ஏன் தயங்குகிறது என ஒன்றிய செயலாளரின் விசுவாசிகள் மற்றும் கட்சியினர் கோரசாக குரல் கொடுக்கின்றார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில காக்கி நிலைமை மாறிப்போச்சா, உண்மையாவா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கருங்கற்கள் கடத்தப்படுகின்றன. இவை, எம்.சாண்ட் மணல் தயாரிக்க கடத்தப்படுகிறது. இந்த கடத்தல், வீரப்ப கவுண்டனூர் செக்போஸ்ட் வழியாக தொடர்கிறது. இங்குள்ள போலீசார், ஒரு லாரிக்கு 300 முதல் 500 வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, பச்சைக்கொடி காட்டி, லாரிகளை அனுப்பி விடுகின்றனர். இவர்களுடன், வருவாய்துறை அதிகாரிகளும், கனிமவளத்துறை அதிகாரிகளும் கைகோர்த்துக்கொள்கின்றனர். பூமி வறண்டாலும், இத்துறை அதிகாரிகளுக்கு ஒரே கரன்சி மழைதான். இதற்கு, முக்கிய காரணகர்த்தா 2 ஸ்டார் கொண்ட நான்கு எழுத்துள்ள காவல் உதவி ஆய்வாளர். இவர் மூலம்தான் அனைத்து காய்களும் நகர்த்தப்படுகிறது. இவருக்கு, மூன்று ஸ்டார் அதிகாரிகள் சிலர் உடந்தை. வருவாயில், சரி பாதி மேலதிகாரிகளுக்கு சென்றுவிடுவதால் இங்கு பங்காளிச்சண்டை என்பதே இல்லை. பாவம் மக்கள் என்று புலம்புகின்றனர் நேர்மையான அதிகாரிகள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிவகங்கை சீமையில ஏதாவது விசேஷம் இருக்கா...’’ என்றார்.
‘‘சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனராம்... இவர்கள் வருமான வரி செலுத்துவதற்காக ஓராண்டுக்கான விவரங்களுடன், இதற்கான ஆவணங்களையும் மருத்துவமனையில் உள்ள சம்பள பட்டியல் போடும் நிர்வாக அலுவலகத்தில் கேட்டிருக்கின்றனராம்... முறைப்படி ஆவணங்களை இந்த நிர்வாக அலுவலகத்தினர்தான் தர வேண்டுமாம்... ஆனால், இதை வைத்து வசூல் பார்க்கும் நோக்கத்தில், ‘விவரம், ஆவணம் ஏதும் நாங்கள் தரமுடியாது. வருமான வரித்துறைக்கான வேலைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.
தலைக்கு முதல்கட்டமாக தலா ஆயிரம் ரூபாய் வசூல் செய்து தந்து விடுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி விட்டார்களாம். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரிடமும் வசூல் வேட்டை நடக்கிறதாம். பணம் வழங்காமல் சம்பள விவர பட்டியல் அடங்கிய ஆவணங்களை கேட்கும் சிலரை வேண்டுமென்றே ‘இழுத்தடித்து’ வருகின்றனராம். இதனால் இவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதும், இந்த மாதத்திற்கான சம்பளம் வருவதும் கேள்விக்குறியாகியுள்ளதாம். மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்