SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னட திரைப்பட பாடகி தூக்கிட்டு தற்கொலை : கணவன் குடும்பத்தினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

2020-02-18@ 00:19:35

பெங்களூரு: கன்னட திரைப்பட பின்னணி பாடகி சுஷ்மிதா பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக வாட்ஸ் அப்பில் தனது கணவன்தான் இதற்கு காரணம், அவரை விட்டு விடாதீர்கள் என்று தாய் மற்றும் சகோதரனுக்கு தற்கொலை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். கன்னட திரைப்படத்தில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கு சினிமாவில் பாடவேண்டுமென்று ஆர்வம் இருந்தது. இவரது ஆர்வத்தை கன்னட திரைப்பட உலகம் அவரை ஏற்றுக்கொண்டது. பல்வேறு கன்னட திரைப்படங்களில் இவர் பின்னணி பாடல் பாடியுள்ளார். சமீபத்தில் சில திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் இன்ஜினியரான சரத்குமார் என்பவரை சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டார். இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் சரத் குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வரதட்சணை கொடுமை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு, சுஷ்மிதா அன்னபூர்னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.அங்கு தனது தாய் மற்றும் சகோதரனுடன் சகஜமாக பேசியவர், தூக்கம் வருவதாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். அதிகாலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வழக்கமாக சுஷ்மிதா தாமதமாகத்தான் எழுந்திருப்பார் என்று நினைத்து தாய் மற்றும் சகோதரன் இருந்துவிட்டனர். பின்னர் தங்கள் மொபைல் போனை எடுத்து பார்த்தபோதுதான், அதில் சுஷ்மிதா அனுப்பியிருந்த தற்கொலை கடிதம் இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இது குறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்த தற்கொலை கடிதம் தொடர்பான மெசேஜை எடுத்து காட்டினர். அதில் சுஷ்மிதா  கூறியிருப்பதாவது; அம்மா என்னை மன்னித்துவிடு. நான் செய்த தவறுக்கு நானே தண்டனை அனுபவித்து விட்டேன். எனது கணவர் அவரது பெரியம்மா வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கணவனின் சகோதரி கீதாவும் காரணம். அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வேதனைப்படுத்தி விட்டனர். பல முறை நான் அவர்களின் காலில் விழுந்தும் என்னை விடவில்லை. இந்த கொடுமை தாங்காமல் அவர்கள் வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. பிறந்த வீட்டியே தற்கொலை செய்து கொண்டால்தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கருதி நான் நமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டேன். இந்த விபரீத முடிவால் நான் உனது அன்பை பெறமுடியாதவளாகி விட்டேன்.

அதே நேரத்தில் என்னுடைய இந்த தற்கொலைக்கு காரணமான அவர்களை சும்மா விட்டு விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இறுதியாக உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நமது சொந்த ஊரிலேயே புதைத்து விடுங்கள். இல்லையென்றால் எரித்து விடுங்கள். ஆனால் என்னை வேதனை படுத்தியவர்களை  சும்மா விட்டு விடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தற்கொலை மெசேஜை கைப்பற்றிய போலீசார், சுஷ்மிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் சரத், அவரது பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் அவர்களை தேடியபோது, 3 பேரும் மாயமாகியதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்