SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்

2020-02-17@ 12:33:58

கிரிக்கெட் ரசிகர்களால் ‘ஏலியன்’, ‘மிஸ்டர் 360’ என அன்போடு அழைக்கப்படும் ஏ.பி.டி வில்லியர்ஸ் பிறந்தநாள் இன்று. ஆபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ் 1984 பிப்ரவரி 17ல் தென்ஆப்பிரிக்காவில் உள்ள பெலா பெலாவில் பிறந்தார். பிரெடொரியாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். இதே பள்ளியில் தான் தற்போது தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடும் டூ பிளெஸ்ஸியும் படித்தார். இவர்கள் இருவரும் பள்ளித் தோழர்கள். டி வில்லியர்ஸ் தந்தை மருத்துவர் ஆவார். தந்தை இளம்வயதில் ரக்பி கால்பந்து விளையாட்டில் விளையாடினார். எனவே தனது மகனையும் விளையாட்டில் ஈடுபடச் செய்தார். டி வில்லியர்ஸ் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. தனது ஆரம்பகாலத்தில் கோல்ப், ரக்பி, கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் கில்லாடியாக இருந்தார்.

ஆனால் கடைசியில் அவர் தேர்வு செய்தது கிரிக்கெட்டைதான். 2004ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அறிமுகம் ஆனார். அன்று முதலே இவரது ஆட்டத்திற்கு ரசிகர்கள் அடிமையாகிவிட்டனர். டிவில்லியர்ஸ் தரையில் முட்டிப்போட்டு ஸ்கொயர் லெக் பகுதியில் அடிக்கும் சிக்ஸர்கள் ராட்சஸத் தன்மையை கொண்டிருக்கும். டிவில்லியர்ஸ் ஓரிரு ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று விட்டால் போதும், நாலாபுறமும் பந்து சிதறப் போவது உறுதி. வேகப்பந்து வீச்சாக இருந்தாலும், சுழல்பந்து வீச்சாக இருந்தாலும், அவரது அசுரத்தனமான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.

டி வில்லியர்ஸ் எப்போதுமே பந்தை பவுண்டரி நோக்கி அடிப்பார் அல்லது ரன் எடுக்க ஓடுவார். இந்த இரண்டு வகையில்தான் அவரை அவுட் செய்ய முடியும். கிளீன் போல்டு செய்ய வாய்ப்பே இல்லை. பவுலர்களையும் பீல்டர்களையும் டி வில்லியர்ஸ் அளவுக்குக் குழப்பியவர்கள் யாரும் இல்லை. அவருடைய பாடி லாங்வேஜை பார்த்து டிரைவ் ஷாட் அடிக்கப்போகிறார் என பீல்டர்கள் நினைத்தால், அது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டாக மாறும். அதனால்தான் பவுலர்கள் அவருக்கு பந்து வீசத் திணறினார்கள்.

2015ல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில், மிகக் குறைந்த பந்துகளில் (16 பந்துகளில்) அரை சதம், 31 பந்துகளில் சதம் என பல புதிய உலக சாதனைகளை ஏபி டிவில்லியர்ஸ் நிகழ்த்தினார். இவ்வாறு எதிரணியை தனது அசாத்திய பேட்டிங் திறமையால் அலறவிட்டுக் கொண்டிருந்த டி வில்லியர்ஸ், மே 23, 2018ல் திடீரென தனது ஓய்வை அறிவித்தார். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்ட உடனேயே டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அன்போடு அழைத்து பார்த்தனர். ஆனால் அவர் திரும்ப வரவில்லை.

தனது அதிரடி ஆட்டத்துக்கும், பீல்டிங்கின்போது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற வல்லமைக்கும் பெயர் பெற்ற டிவில்லியர்ஸ் தனது திடீர் ஓய்வு முடிவுக்கு காரணமாக கூறியது, ‘நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்’ என்பதைதான். இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. தனது 20வது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதில் இருந்து, தனது 34வது வயதில் ஓய்வு முடிவை அறிவிக்கும் தருணம் வரையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியவர் டிவில்லியர்ஸ்.

ஒரேயொரு தருணத்தில் மட்டும்தான், அவர் தனது பர்சனல் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதமான தருணம் ஒன்றிற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விருப்ப விடுப்பு எடுத்துக் கொண்டார். 2015ல் அவரது மகன் பிறந்த தினமே அது. ஆனால் இன்று முழுமையாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்டார். சர்வதேச போட்டிகளில் மட்டும்தான் விலகினார். ஐபிஎல் போட்டிகளில் அல்ல. எனவே விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் ஏலியனின் அபார ஆட்டத்தை காண ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்