SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புது ரூட்ல போகும் பெண் அதிகாரியின் அதிரடியை பார்த்து அடங்கி போன ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2020-02-17@ 00:14:29

‘‘பதவி கிடைத்த உற்சாகத்தில் ஆட்டம் போடும் இலை கட்சியை சேர்ந்த பெண் போடும் ஆட்டத்தில் குமரியே குலுங்கி கிடக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிர்வாகி ஒருவர் தன் பெயர் பெரிய அளவில் ‘ரீச்’ ஆக வேண்டும் என்பதற்காக தில்லாலங்கடி வேலை செய்து கட்சி நிர்வாகிகளை மத்தியஸ்த்துக்கு அழைத்து சிக்க வைக்கிறாராம்.  இப்படிதான் இவர், சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய கட்டண பார்க்கிங் பகுதியில் சென்னைக்கு சென்றபோது நிறுத்திவிட்டு சென்ற தன் காரை எடுக்க வந்தார். அப்போது அவரிடம் பார்க்கிங் கட்டணம் கேட்டுள்ளனர்.  ஆளுங்கட்சியை சேர்ந்த என்னிடமே பார்க்கிங் கட்டணமா... போய்யா... போ... போ... என்று கூறிவிட்டு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ தூரம் வரை காரில் பறந்துவிட்டார். ஆனால் பார்க்கிங் ஊழியர்கள் பறக்கை விலக்கு பகுதியில்  வைத்து காரை மடக்கி பணம் கேட்டனர். அப்போது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி பிரச்னையை முடித்துள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் மூலம் காவல்துறைக்கு  தகவல் கூறி, மகளிரணி நிர்வாகியை அனுப்பி வைத்துள்ளனர். பதவி கிடைக்கும் வரை அமைதியாக கட்சி அலுவலகத்துக்கு வந்து சென்ற இவர், தனக்கு மகளிரணி பொறுப்பு கிடைத்ததும் ஆனந்தம் மிகுதியில் போடும் ஆட்டம் மிகுந்த  உச்சத்துக்கு போய்விட்டது... என்று அதே மகளிரணியை சேர்ந்த பெண்களே புலம்புறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தூங்குவது உண்மையா...தூசி நகரமாக மாறிவிட்டதாமே...’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்காநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றும் இன்னும் முடிவடையவில்லை. பெரியாறு பஸ் ஸ்டாண்ட், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தேரோடும் மாசி வீதிகள், கோயிலுக்கு செல்லும் முக்கிய வீதிகளில்  குழிகள் தோண்டி பணி முடிக்காமல் பாதியில் நிற்கிறது. தோண்டி தோண்டி நகரின் மத்தியில் தூசி பறந்து, தூங்காநகரம் இப்போது தூசி நகரமாக மாறிக்கிட்டு இருக்கிறது. மக்கள் நடந்து சென்றாலே மூச்சு முட்டுதாம். அங்குள்ள வியாபாரிகளும் போராட்டத்தில் குதிச்சாங்க. தூங்கா நகர அமைச்சரிடம் புகார் கூறியதும் அவர் சாட்டையை கையில் எடுப்பது போல் எடுத்தார். மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, ‘‘பணிகள் மந்தமாக நடந்தால், அந்த கான்ட்ராக்ட்  ரத்து செய்து வேறு கான்ட்ராக்ட் கொடுத்து சீக்கிரம் முடிக்க வேண்டியது தானே?’’ என்றாராம். அமைச்சரின் கட்டளையை ஏற்று மாநகராட்சி உயர் அதிகாரி, பொறியாளர்களுடன் ஆய்வுக்கு வேகமாக சென்றார். ஆனால் பணிகள் மந்த கதியை  கண்டும் கூட, தட்டிக்கேட்க முடியாமல் கண்ணை மூடியபடி திரும்பி விட்டாராம்.

ஏனென்றால், பணியை செய்தவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கான்ட்ராக்டர்கள் என்பதும், அவர்கள், கொங்கு மண்டல பவர்புல் அமைச்சரின் ஆட்கள் என்பதால் பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு ‘கருடா சவுக்கியமா?’ என்பது போல்  கேட்டு மிரட்டினார்களாம்.அதோடு நிற்காமல் வைகை நதியின் இருகரையிலும் நெடுஞ்சாலைதுறை மூலம் கான்ட்ராக்ட் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக ₹90 கோடியில் சாலைஓர பூங்கா அமைக்க ஸ்மார்ட் சிட்டியில்  மாநகராட்சி திட்டமிட்டது. நெடுஞ்சாலை துறையோ ‘இது எங்கள் சாலை, பூங்கா அமைக்க அதிகாரம் எங்களுக்கு தான்’ என்று மன்றாடுகிறது. மாநகராட்சி மறுக்கிறது. சதவீத கமிஷன் நோக்கில் மாநகராட்சி, நெடுஞ்சாலைதுறை இடையே  முட்டல்மோதல் எழுந்துள்ளதாம். கொங்கு மண்டலத்தில் இருந்து பாண்டிய மண்டலத்திற்கு படையெடுத்துள்ள பரமசிவன் கழுத்து பாம்புகளை கண்டு அதிகாரிகள் நடுங்குகிறார்களாம்... இதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மெதுவாக நடப்பதற்கு  காரணம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி புது ரூட்ல போகுதா என்ன...’’ பீட்டர் மாமா ஆச்சர்யமான கேள்வியை கேட்டார்.

‘‘புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும், நீக்கவும், இடமாற்றம் செய்யவும், மதிப்பெண் வழங்கும் அதிகாரம் பெண் அதிகாரி வசம் இருக்கு. இதனால் உயரதிகாரிகள் பெண் அதிகாரியை கண்டாலே  நடுங்குகிறார்களாம். முதல்வர் உத்தரவு எல்லாம் இரண்டாம் பட்சம்தானாம், அதோடு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு பயப்படும் அதிகாரிகள், கிளிப்பிள்ளை சொல்வதை போல பெண் அதிகாரி சொல்வதையே திரும்ப சொல்கிறார்கள், கேட்கிறார்கள்.  சமீபத்தில் பிசிஎஸ் அதிகாரிகள் 6 ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர். அவர்கள் கோவா, டையூ, டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு விரைவில் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். உள்துறையில் இருந்து  உத்தரவு வராததால், பெண் அதிகாரி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்து பேசாமல் அந்த அதிகாரிகளுக்கு இலாகாவை ஒதுக்கிட்டாராம். அதோடு தன்னுடைய நடவடிக்கைகள், பத்திரிகைகளுக்கு சரியாக செல்வதில்லை என  அதிருப்தியில் இருந்தவர். தன்னுடைய செயலரை செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு கூடுதல் செயலராக நியமித்துவிட்டார். அதிகாரிகளை எல்லாம் தலையாட்டி பொம்மைபோல இருப்பதால், புதுச்சேரியில் பெண் அதிகாரியின் அரசாங்கம்தான்  நடக்கிறது கட்சிகார்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் குறை கூறுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்