SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலவச வேட்டி, சேலைக்கு தடை போட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-15@ 02:06:14

‘‘மழை விட்டும் தூவானம் விடாத கதையா, தூங்கா நகர மக்கள் புலம்புறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிரா பேசாம விளக்கமாக சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பு, ரூ.1,000 பணம் தந்தாங்க இல்லையா... தேர்தலை மனதில் வைத்துத்தான் சர்க்கரை கார்டுகளை மாத்தச் சொல்லி அரசு அறிவித்தது. இதுல என்ன பிரச்னைன்னா, மதுரை மாவட்டத்தில், 72 ஆயிரம் சர்க்கரை கார்டுதாரர்களில் 47 ஆயிரம் பேர் தங்களது கார்டுகளை அரிசி கார்டாக மாத்திட்டாங்க... இவங்க பொங்கல் தொகுப்பையும் வாங்கிட்டாங்க... ஆனால் இலவச வேட்டி, சேலை இந்த கார்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறிட்டாங்களாம்... இதனால் ஏமாற்றமடைந்த கார்டுதாரர்கள் சிலர் கடை ஊழியர்களிடம் சண்டை போட்டனராம்....
ஏற்கனவே உள்ள அரிசி கார்டுகளுக்கு மட்டுமே இலவச வேட்டி சேலை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக அரிசி கார்டாக மாற்றியவர்களுக்கு வழங்க வேண்டாம் என தெரிவித்து விட்டதாக அதிகாரிகள் கூறினாங்களாம்... இதனால் மாவட்டத்தில் 47 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்கலை... இதுபோல தமிழகம் முழுவதும் பல லட்சம் கார்டுகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கவில்லையென வட்ட வழங்கல் அதிகாரிகள் சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘பண்ணை வீட்டுக்கு பறக்குது கரன்சி என்கிறார்களே.. அது என்ன விவகாரம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘கோவை மாநகரை ஒட்டி, பாலக்காடு சாலையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தூயமான ஆய்வாளர் ஒருவர் உள்ளார். இவருக்கு விசுவாசமாக சத்தியமான ஓட்டுனர் ஒருவர் கடந்த 12 வருடத்திற்கும் மேலாக பீடு நடை போடுகிறார். ஐயாவுக்கு எல்லாமே இவர்தான். இக்காவல்நிலைய எல்லைக்குள் டாஸ்மாக் ‘பார்'' கள்ள மது விற்பனை, மசாஜ் சென்டர், ஒரு நம்பர் லாட்டரி, 3 நம்பர் லாட்டரி என சட்ட விரோத செயல்கள் அனைத்தும் ஐயாவோட ஆசியில் நடக்குது. அத்துடன், இக்காவல்நிலைய எல்லைக்குள் கேரளா பைபாஸ் ரோட்டில் ஹவாலா பணம் பறக்கிறது. இதை, கண்டுக்காமல் இருக்க, ஐயாவுக்கு மாதம்தோறும் பெரும் தொகை வெட்டப்படுகிறது. அத்துடன், ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா விற்பனை, சூதாட்டம் என பல வகைகளில் பணம் குவிகிறது. பத்து நாளைக்கு ஒருமுறை 3 லட்சம் ரூபாய் வரை சேர்ந்துவிடுகிறது. இந்த கரன்சி நோட்டுகளை பையில் போட்டு எடுத்துக்கொண்டு, சத்தியமான அந்த டிரைவர், பூட்டு தயாரிப்புக்கு பெயர்போன ஊருக்கு பறக்கிறார். அங்கு, ஐயாவோட பண்ணை வீட்டில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு திரும்பி விடுகிறார். இப்படியே வருவதும், போவதுமாக உள்ளார் அந்த விசுவாசி. மாதம் குைறந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் டார்கெட் போட்டு, வசூல் எடுக்குது இந்த டீம். ேமலதிகாரி டார்ச்சர் அதிகமாக இருந்தால், ஒரு ரகசிய அபார்ட்மென்ட்டுக்கு சென்று படுத்துக்கொள்கிறார். பிரஷ்ஷர் ரொம்ப அதிகமானால், ‘எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக்குவார்...'' என ஹாயாக பதிலளிக்கிறார். பூனைக்கு மணி கட்டுவது யாரோ என்கிறார்கள் நியாயமான போலீசார்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘பெண் அதிகாரியின் அலப்பற அதிகமா இருக்குன்னு சொன்னியே.. அது யாரு..’’
‘‘நெடுஞ்சாலைத்துறை பெண் இன்ஜினியர் தான். அயல் பணி அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையில பணியாற்றி வந்தார். அப்ப எந்த பணியாக இருந்தாலும் கமிஷன் இல்லாமல் டெண்டர் விடுவது கிடையாதாம். அவர் இருந்த காலத்தில எந்த வேலையும் தரமா இல்லை. அதனால அவரை நெடுஞ்சாலைத்துறைக்கு சரண்டர் செய்து கடிதம் எழுதினாங்களாம். அவர் மீது உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரத்துடன் நெடுஞ்சாலைத்துறை தலைமைக்கு அறநிலையத்துறை கடிதம் எழுதியது. இதைதொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அவரை மீண்டும் தனது துறைக்கு மாத்திட்டாங்க. ஆனால், 1 வருடங்களுக்கு மேலாகியும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதற்காக, துறை தலைமைக்கு லட்சக்கணக்கில் பணம் மாறி இருக்கிறதாம். இதனால அவர் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில இப்போது வரை அறநிலையத்துறையில டெண்டர் தொடர்பான பணிகளை கூட இந்த அதிகாரி மூலமாக பணம் கைமாறுதாம். இப்போது வரை அவர் யாருக்கு சொல்கிறாரோ அவருக்கு தான் டெண்டரும் விடப்படுதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரேஷன் கடை ஊழியர்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன்கடை இருக்கு. புதுசா வந்த மாவட்ட வழங்கல் அலுவலர், தினசரி கடைகளுக்கு விசிட் என்ற பெயரில் கடைக்கு 2 ஆயிரம் வசூல்வேட்டை நடத்தி வர்றாராம். பொருட்கள் இருப்பு சரியாக இல்லை என்று கூறி மிரட்டியே, இந்த வசூல்வேட்டை நடக்கிறதாம். இவர் போன பின்னாடியே வட்ட வழங்கல் அலுவலரும், கடைக்கு 500 கொடுங்கன்னு நியாய விலைக்கடை ஊழியர்களிடம் தொடர் வசூல்தானாம். ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகள் மீது கொந்தளிப்பில் இருக்கிறார்களாம். இதனால் நேற்று கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளரிடம் ஒட்டுமொத்தமாக சென்று உயர்அதிகாரிகள் மீது புகார் தெரிவித்திருக்காங்களாம். அவரை ஒன்னும் செய்யமுடியாதென்று கூறி அனுப்பிவிட்டாராம். வசூல்வேட்டை அதிகாரிகளை கண்டித்து, போராட்டத்தில் களமிறங்க விழுப்புரம் மாவட்ட ரேஷன்கடை ஊழியர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்