SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

2020-02-15@ 00:24:27

* பெண்கள் உட்பட பலர் படுகாயம்
* 66 வயது முதியவர் பலி?

சென்னை:  வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று முஸ்லிம்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசலில் சிக்கி ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து அப் பகுதியில்  பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.  குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் தொடர்ந்து 10 மணி நேரம் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . அதேபோல் நேற்று மதியம்   500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கையில்  பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மதியம் தொழுகைக்குச் சென்றவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது. இதனால் அந்தப் பகுதியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர், துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தினரைப் பார்த்து கலைந்து செல்லும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் போராட்டம் நடத்தியவர்கள் இருந்த பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் பெண்களும், வயதானவர்களும் இருந்ததால், இந்த தள்ளுமுள்ளுவில் பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை போலீசார் சரமாரியாக தாக்கி, தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அதில் ஒரு சிலரை போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். இதை பக்கத்து வீடுகளில் இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதேநேரத்தில் தாக்குதல் நடத்தி அழைத்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வாணிமஹாலுக்கு கொண்டு சென்றனர். அப்போது 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் போராட்டங்கள் குறித்த வீடியோக்கள் வெளியானதால், ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் போராட்டம் நடக்கும் இடத்தில் திரண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் தள்ளுமுள்ளு நடந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி பழைய வண்ணாரப்பேட்டை 1வது தெருவை சேர்ந்த பஸ்லுஸ் ஹக் (66) என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பெண் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்துக்கு வந்தார். போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல்

வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்கள் மீது  போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து திருச்சி, பண்ருட்டி, செய்யாறு, மதுரை, உள்ளிட்ட தமிழகமத்தின்  பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையை பொருத்தவரை செங்குன்றம் ஜி.என்.டி சாலை, தாம்பரம், கிண்டி, அரும்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-02-2020

  28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • kalavaram2020

  டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

 • flight2020

  கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

 • keeladi20

  தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

 • raajeshaathan20

  ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்