SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுவை சாமிக்கு ஷாக் கொடுத்த பெண் எம்எல்ஏவின் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-05@ 06:30:31

‘‘குமரி பெருமையை பேசிய கதர் கட்சி தலைவர் தலையில் அடித்துக்கொண்டு ஓடிட்டாராமே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த கதர் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தபோது மேடையில் பேசிக் கொண்டிருந்த மீனவர் அணி தலைவரின் தலையை மற்றொரு கோஷ்டி அதிரடியாக பாய்ந்து... பாய்ந்து தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இந்த காட்சியை பார்த்த கதர் கட்சியின் ‘தத்’ நான் எந்த கட்சி கூட்டத்திற்கு சென்றாலும் குமரி மாவட்ட கதர் கட்சியினரை பற்றி பெருமையாக பேசுவேன். உங்களை தான் உதாரணம் கூறுவேன். ஆனால் என் முன்னாடியே நீங்களும் அடிதடியில் இறங்கிட்டீங்களே என்று வேதனைப்பட்டாராம். இத்துடன் அங்கிருந்தால் நன்றாக இருக்காது என்பதால் மேடையில் இருந்த ‘தத்’ மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் தன்னுடன் வந்த நிர்வாகிகளுடன் பின் வாசல் வழியாக ஓடிட்டாராம். காரணம், தன் மீது எந்த அடியும் படக் கூடாது...’’ என்ற உஷார் நடவடிக்கைதான்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனீ போல தேனி மாவட்டத்துல அதிகாரிகளும் சுறுசுறுப்பாக இருக்காங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்துல உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததும், ‘உல்லாசப் பயணம் போகலாம்’ என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முடிவு செய்தாங்க. இதற்கு ஆளுங்கட்சி சேர்மனின் கணவர் தலையசைக்க.. ஒரே குஜால்தானாம்... உல்லாச டூருக்கு வசூல் வேட்டை நடந்ததாம்... ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள், கான்ட்ராக்டர்கள் என வசூல் வேட்டை நடத்தியதில், லட்சக்கணக்கில் தேறியதாம். கடந்த வாரம் 2 சொகுசு பஸ்களில், ஒகேனக்கல், மைசூர்னு போயிட்டாங்களாம். அங்கு ஒரே கூத்தும், கும்மாளமும்தானாம்... ’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுவை சாமிக்கு ஒரு பெண் எம்எல்ஏ அதிர்ச்சி கொடுத்தாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுவையில் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்த தனமானவர் அரசுக்கு எதிராக  செயல்பட்டதால் அவரை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். இதன் மீதான நடவடிக்கை குறித்து சட்ட  நிபுணர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  இதனிடையே பிரதான  எதிர்க்கட்சியான எம்எல்ஏக்களில் ஒருவரான சந்திரமானவர், காஷ்மீரை சேர்ந்த முக்கிய கதர் கட்சியின் தலைவரை சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி  அடுத்தகட்ட புயலை கிளப்பியுள்ளது.
 மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக எம்எல்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவரது தந்தை பழுத்த காங்கிரஸ்காரர் என்பதால், இந்த சந்திப்பை எளிதாக  எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் ‘சாமி’ தரப்பு அதிர்ச்சியில்  உறைந்துள்ளதாம். இதனால் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலில்  தற்போதைய புதிய எம்எல்ஏக்களில் சிலர் கட்சி மாறலாம் என்ற பரபரப்பு  புதுச்சேரியில் இறக்கை கட்டி பறக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தற்காலிக பெண் ஊழியரின் அதிகாரம் எல்லை மீறி போயும்... பிஏ சப்போர்ட்டுல ஆடுற ஆட்டம் மஞ்சள் மாவட்டத்துல நடக்குதாமே...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் அறம் போதிக்கும் ஊரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் தற்காலிக பணியாளராக பணியில் சேர்ந்தார். இவர், அமைச்சரிடம் உள்ள உதவியாளரின் உறவுக்கார பெண் என்பதால், அங்கு இவர் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. இவர் சொல்வதைத்தான் நிரந்தர பணியாளர்களும் கேட்கும் சூழல் இருந்தது. ஆரம்பத்தில் அரசு ஊழியர்களிடம் மட்டுமே தனது கெத்தை காட்டி வந்த இப்பெண், பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்களிடம் தரக்குறைவாக பேச தொடங்கினார். இதனால் கொதித்துப்போன மக்கள் இதைப்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு  புகார் அனுப்பினாங்க. தற்காலிக பெண் ஊழியர் மேல் நடவடிக்கை எடுக்கலைன்னா போராட்டம் நடத்துவோம்னு பொதுமக்கள் எச்சரிக்கை விட்டதால வேறுவழியில்லாம அப்பெண் ஊழியரை பணியில் இருந்து விடுவிக்க மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவு போட்டுச்சு. பேரூராட்சி நிர்வாகமும் அந்த பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்கிடுச்சி. அந்த கில்லாடி பெண் ஊழியர் மறுபடியும் அமைச்சர் உதவியாளரின் உதவியை நாடி, மீண்டும் அதே பேரூராட்சியில் வரி வசூல் செய்யற தற்காலிக பணியை வாங்கி வந்துட்டார். இவரது செல்வாக்கை கண்டு, பேரூராட்சி நிர்வாகம் மட்டுமின்றி, மாவட்ட நிர்வாகமும் மிரண்டு போய் இருக்காம்... ஒரு தற்காலிக வேலைக்கு கூட அமைச்சர் சிபாரிசானு கலெக்டரும் தலையில் அடித்து கொள்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மூன்று மாவட்ட தலைநகரங்கள் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதாக மக்கள் புலம்புவதை கேட்டீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டத்தை பிரிக்காதபோது அரசு விழாக்கள் தலைநகரான வேலூரில் நடத்தப்பட்டது. தற்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தொகுதி பிரித்தாலும் தலைநகர தொகுதிகளில் இலை எம்எல்ஏக்கள் இல்லையாம். இதனால எதிர்கட்சி எம்எல்ஏ உள்ள இடத்தில் ஏன் அரசு விழா நடத்தணும், இலை எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளாக பார்த்து விழா நடக்குதாம். அதாவது வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் தொகுதியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர், அரக்கோணம் தொகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளிலும் விழாக்கள் நடத்தப்படுகிறது. எதிர்கட்சி எம்எல்ஏவை காரணம் காட்டி எங்களை புறக்கணிக்கிறது நியாயமில்லை என்று இலை நிர்வாகிகள் புலம்பறாங்க...
இந்த 3 மாவட்ட தலைநகர்களில் அதிமுக எம்எல்ஏக்கள் இல்லாததால் அரசு விழாக்கள் வேறு தொகுதிகளில் நடத்துவதால் தலைநகரங்களில் அதிமுக எப்படி வெல்வது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்