SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காடு இல்லை வீடு!

2020-01-30@ 16:42:55

வீட்டில் மரம் வளர்ப்பதை நாம் பாத்திருப்போம். ஆனால், மரத்தில் ஒரு வீட்டைக் கட்டி இருக்கிறார் சென்னை முகப்பேரில் வசித்து வரும் சிவில் இன்ஜினீயரான ஜஸ்வந்த்சிங். வீட்டில் நுழையும்போதே புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஜஸ்வந்த்சிங் எப்போதுமே கையில் திருக்குறள் புத்தகத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். உலகத்தில் உள்ள மொழிகளில் தலைசிறந்தது தமிழ் மொழி எனவும் தமிழில் தலைசிறந்த நூல் திருக்குறள் எனவும் குறிப்பிடுகிறார். திருவள்ளுவர் மீதுள்ள பற்றின் காரணமாக அவரது திருவுருவத்தை தானே தன் வீட்டில் உள்ள ஒரு மரத்தில் செதுக்கி இருப்பதாக சொல்லிக் காட்டுகிறார்.

“நாம் அனைவரும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றி கொண்டாட வேண்டும். நான் பிறந்தது பஞ்சாபி குடும்பத்தில்தான். ஆனால், தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் அதிக பற்று வைத்துள்ளேன். நாங்கள் இங்கு சுமார் மூன்று தலைமுறையாக வாழ்த்து வருகிறோம். எனது தாத்தா சென்னைக்கு பணி நிமித்தமாக வந்தார். சென்னையில் இந்த இடத்தை வாங்கினார். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். இங்கு சுமார் ஆயிரம் வகையான செடிகளை வளர்த்து வருகிறேன். ஒவ்வொன்றும் தனித்துவம் பெற்றவை.

அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இங்கு இனிப்பை தரக்கூடிய துளசி. இன்றைய தலைமுறையினர் சர்க்கரை நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த இனிப்பு துளசியை உண்பதினால் எந்த பாதிப்பும் இல்லை. இதனை எங்கள் வீட்டில் டீ, காபி முதலியவற்றிற்கு பயன்படுத்தி வருகிறோம். இது சிறந்த நோய் தீர்க்கும் பொருளாக திகழ்கிறது. இங்கு மூலிகை செடிகள் மட்டுமே சுமார் 350 வகைகள் உள்ளது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திருவோடு மரம் உள்ளது.

அதிலிருந்து ஒரு பெரும் காய் வளரும் அதை இரண்டாக உடைத்தால் திருவோடு ஆகிவிடுகிறது. இன்றும் கோவிலில் பிச்சை எடுக்கும் சிலர் அதை வைத்துள்ளனர். ஆனால், அது பல நோய்களை போக்கும் சக்தி வாய்ந்தது. பழந்தமிழர்கள் அதை நன்கு உணர்ந்து வைத்துள்ளனர். அக்காலத்தில் தற்போது உள்ளது போல் நவீன ஸ்டீல் பாத்திரங்கள் கிடையாது. எனவே, மக்கள் அனைவரும் வாழை இலை, திருவோடு போன்றவற்றை பயன்படுத்தினர். மற்றும் சித்தர்கள், மகான்கள் இந்த திருவோட்டில்தான் உணவு உண்டனர். ஆனால் அதன் மகத்துவம் தெரியாமல் இன்று அதை பிச்சைப் பாத்திரமாக பயன்படுத்துகின்றனர்.

இங்கு தில்லை மரமும் உள்ளது. இதிலிருந்து வரும் திரவம் வெள்ளை நிறத்தில் பால் போன்று காட்சியளிக்கும். ஒரு காலத்தில் இது சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலை சுற்றி அதிகமாக இருந்தது . அதனால் தான் தில்லை நடராஜர் என பெயர் வந்தது. இதிலிருந்து வரும் பால் போன்ற திரவத்தைக் கொண்டு அக்காலத்தில் தோல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாக விளங்கியது. இன்னொரு வித்தியாசமான ஒரு செடி உள்ளது. அதன் இலையை எடுத்து எரியவைத்தால் விளக்குபோன்று எரியும் தன்மை பெற்றது. பழந்தமிழர்கள் இதன் தேவைகளை நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஆனால், நாளடைவில் இது ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. இன்னும் பல மருத்துவ நலன் மிகுந்த மூலிகை செடிகள் இங்கு உள்ளன.

இங்கு பல சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறேன். ஆதி மனிதன் மரத்தின் மீது தான் வாழ்ந்தான்.  அதனை நினைவூட்டவே இந்தமர வீட்டினை கட்டி இருக்கிறேன். எங்கள் வீட்டில் உள்ள மாடி தோட்டத்தில் வெண்டைக்காய், கத்தரிக்காய், கொய்யா, எலுமிச்சை, சீதா, மாதுளை, போன்ற செடி மற்றும் மரம்  வகைகளை வளர்த்து வருகிறேன். இங்கு வளர்க்கப்படும் செடிகளுக்கு தேவையான உரங்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

என்  சிறுவயதிலிருந்தே கேமரா மீது அதிக ஆர்வம் இருந்தது. நான் சென்னையில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தேன். அனால், தற்போது கட்டுமானத்துறை சார்ந்த வேலைகள் செய்து வருகிறேன். இங்கு பல பள்ளி மாணவர்கள் வருகின்றனர். அவர்கள் எங்கள் வீட்டைப் பார்த்து மிகவும் பிரமிப்பு அடைவார்கள். இங்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக செடி கன்றுகளை அளித்து வருகிறோம்” என்று பெருமையாக சொல்கிறார் ஜஸ்வந்த்சிங்.

தொகுப்பு: நீல்கமல்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்