SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைதி பூங்காவாக திகழும் பெங்களூரு தீவிரவாதிகள் புகலிடமாக மாறி வருகிறதா? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

2020-01-26@ 01:28:07

பெங்களூரு: அமைதிப் பூங்காவாக திகழும் பெங்களூருவை குறிவைத்து தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருவதால், இந்நகரம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  சமீபகாலமாக தீவிரவாதிகள் பெங்களூரு மாநகரை குறிவைத்து செயல்படுகிறார்கள் என்பது உளவுப்பிரிவின் தகவல்கள் உறுதி செய்கின்றன. பெங்களூரு, உடுப்பி, ஹுப்பள்ளி, மைசூரு, மங்களூரு, கல்புர்கி, பெலகாவி, உடுப்பி, கோலார், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் தீவிரவாதிகளை இதற்கு முன்பு போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெங்களூரு மாநகரை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிவருவது தற்போது அம்பலமாகியுள்ளது.  தீவிரவாதிகள் அட்டகாசம்: இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) கடந்த 2005 டிசம்பர் 28ம் தேதி நடந்த ஆபரேஷனல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் சர்வதேச கருத்தரங்கில் திடீரென புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் விஞ்ஞானிகள் மீது சராமாரியாக சுட்டனர். இதில் டெல்லியை சேர்ந்த விஞ்ஞானி பூரி படுகொலையானார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2007 நவ.5ம் தேதி யூசுப்கான் என்ற தீவிரவாதியை கல்புர்கி மாநகரில் போலீசார் கைது செய்தனர். 2008ம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்ட இருதீவிரவாதிகளை ஹுப்பள்ளியில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2008 ஜூலை 25ம் தேதி பட்டப்பகலில் பெங்களூரு மாநகரில் 7 இடங்களில் தொடர்குண்டுவெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் இருவர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர். சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டது. பகல் 1.20மணிக்கு துவங்கி, பிற்பகல் 3 மணி வரை மடிவாளா, மைசூரு ரோடு, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையாரோடு, லாங்க்போர்ட் ரோடு, ரிச்மண்ட்டவுன் ஆகிய 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு மக்களை உறைய வைத்தது.  

பெங்களூருவில் கடந்த 2008 ஜூலை 25ம் தேதி நடந்த தொடர்குண்டுவெடிப்பில் தொடர்புடைய சர்பரஸ்நவாஸ் என்ற தீவிரவாதியை கைது செய்து விசாரித்ததில் கடந்த 2009 பிப்ரவரி 9ம் தேதி கேரளாவை சேர்ந்த அப்துல்சத்தார், அப்துல்ஜப்பார், முஜீப்முஹிதீன், பைசல் அப்துல்ரகுமான், அப்துல் ஜலீல்மூசா, மனாப்முகம்து, பத்ருதீன்நூர் அகமது, சகாரியா ஆகிய 9 தீவிரவாதிகளை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அதை தொடர்ந்து மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய இருதீவிரவாதிகளை பெங்களூரு போலீசார் கடந்த 2009 பிப்.13ம் தேதி கைது செய்தனர். கடந்த 2015ம் ஆண்டு மைசூரு மாநகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அல்பதர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், விதான சவுதாவை தாக்க திட்டமிட்டுள்ள தகவலும் வெளியாகியது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விதான சவுதா வரைப்படம், ஏகே-47 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன், சில வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர். கடந்த 2005 முதல் 2019ம் ஆண்டு வரை தீவிரவாதிகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என 69 பேரை இதுவரை ேபாலீசார் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: தமிழக இந்து மக்கள் கட்சி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக மொஹிதின் காஜா உள்பட மூன்று பேரை தமிழக கியூ பிராஞ்ச் ேபாலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து கடந்த 20 நாட்களில் தமிழக கியூ பிராஞ்ச் போலீஸ் மட்டுமில்லாமல் பெங்களூரு சிசிபி போலீசார், டெல்லி போலீசார் கூட்டு முயற்சியில் கோலார், ராம்நகரம், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் 18 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தனி தனியாக நடத்தி வரும் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழா சமயத்தில் நாசகார வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சில இந்து அமைப்பு தலைவர்களை படுகொலை செய்வது, குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்துவது உள்பட பல சதி திட்டங்கள் தீட்டியுள்ளது அம்பலமாகி வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள 18 பேரில் 11 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும் மற்றவர்கள் தமிழகம் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவராகவும் உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இன்னும் 9 பேர் மாநிலத்தில் பல இடங்களில் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை ேபாலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையி–்ல் பெங்களூரு சிவாஜிநகரில் கடந்த 2016 அக்டோபர் மாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொண்டர் ருத்ரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வரும் கவுஸ்பாய் என்பவருக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு ஐசிஎஸ், ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச அளவில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி: கடந்த 20 நாட்களி–்ல் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் நடத்தி வரும் விசாரணையில் தினம் ஒரு புது தகவல் வெளியாகி வருவது போலீசாரை தலை சுற்ற செய்துள்ளது.

சிசிபி போலீசார் கைது செய்த மெஹபூப் பாஷா, முகமது ஹனிஷ், முகமது மன்சூர், இம்ரான்கான், ஜபிபுல்லா, உசேன், முஜாவிர் உசேன், அப்துல் மதின் அகமது, அனிஸ், சலீம் கான், அஜாஜ்பாஷா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் என்னென்ன சதி திட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற விவரம் கொடுத்து வருகிறார்கள். அதில் தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் கடந்த டிசம்பர் 9ம் தேதி கைது செய்யபட்ட மொஹிதின் காஜா, ஆரம்பத்தில் அல்உம்மா தீவிரவாத அமைப்பில் இருந்ததாகவும் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபின், பிற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் சென்ற அவர், அங்கிருந்து தென்னிந்தியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் சிரியா (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பை பலப்படுத்த திட்டமிட்டதாகவும், அதற்காக மெகபூப்பாஷாவை தென்னிந்திய கமாண்டராக நியமனம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தமிழக போலீசார் தேடி வருவதை தெரிந்து கொண்ட மெகபூப்பாபாஷா, அவரின் கூட்டாளிகளான இம்ரான் மற்றும் அனிப் ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்க மாநிலம் வழியாக நேபாள் சென்று அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவருக்கு பின் மேலும் பத்து பேர் பாகிஸ்தான் சென்று சிறப்பு பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக போலீசார் கைது செய்ததால், தங்களின் திட்டம் சீர்குலைந்து விட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

மங்களூரு  சம்பவத்துடன் தொடர்பா?
கடந்த 20 நாட்களாக கர்நாடகாவில் 18 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 பேர் கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலைமறைவாக இருக்கும் சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. குடியரசு தின விழாவுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளதால், பெங்களூரு மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாநில உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்