SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்கு நிரந்தர வேலையாட்களாக மாற்றப்பட்ட அரசு ஓட்டல் பணியாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-25@ 00:06:31

‘‘சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வில்லங்கம் ஒன்னு இருக்கிறதா சொன்னியே.. அதை கொஞ்சம் விரிவா தட்டிவிடு...’’ என்று எஸ்கலேட்டரில் நகர்ந்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத் துறைக்கு சொந்தமான கடற்கரை ரிசார்ட் ஓட்டல் உள்ளது. கோவளம் தொடங்கி மாமல்லபுரம் வரை ஏராளமான தனியார் கடற்கரை ஓட்டல்கள் இருந்தாலும் கடற்கரையையொட்டி அமைந்துள்ள குறைந்த கட்டணத்திலான அரசு ஓட்டல் என்பதால் இந்த டி.டி.டி.சி. ஓட்டல் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். ஆனால், அரசு நிர்வாகம் இந்த ஓட்டல் வளர்ச்சியில் அக்கறை காட்டுவதில்லை.
அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இலவசமாக தங்குவதற்கும், மது மற்றும் உணவுப் பொருட்களை இலவசமாக சாப்பிட்டு செல்வதற்கும் அதிகமாக பயன்படுத்தி ஓட்டலின் வருவாய் கணிசமாக குறையும் அளவிற்கு சிதைத்து விட்டனர். குறிப்பாக இங்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சைனீஸ் ரெஸ்டாரண்ட் மற்றும் காபி ஷாப் போன்றவை இதுவரை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத்துறை உயர்பொறுப்பில் வர்மக்கலையின் பெயரை கொண்ட ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அவரது வீடு சென்னை நீலாங்கரையில் உள்ளது. அவர் இந்த துறைக்கு வந்தவுடன் மாமல்லபுரம் டி.டி.டி.சி. ஓட்டலில் இருந்த சைனீஸ் உணவு தயாரிக்கும் செப் ஒருவர், இரண்டு பாதுகாவலர்கள், 3 கடைநிலை ஊழியர்கள் உள்பட 6 பேரை தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். தற்போது இவர்களில் ஒருவர் அபூர்வ வர்மாவின் வீட்டில் அவரது மாட்டிற்கு பால் கறப்பவராகவும், சைனீஸ் செப் அவரது வீட்டின் சமையல்காரராகவும் பணியாற்றுகின்றனர்.
அதேபோன்று ஓட்டல் செக்யூரிட்டிகள் இருவர்தான் அந்த ஐஏஎஸ் வீட்டின் பாதுகாவலர்களாக கடந்த
1 வருடத்திற்கும் மேலாக உள்ளனர். அதேபோன்று ஓட்டலில் இருந்த துப்புரவு பணியாளர்கள் இருவர் வீட்டுத் தோட்டத்தை பராமரிக்கின்றனர். மொத்தம் 6 பணியாளர்கள் இவ்வாறு அவரது வீட்டில் வேலை செய்கின்றனர். இவர்கள் 6 பேருக்கும் மாமல்லபுரம் கடற்கரை ஓட்டல் நிதியில் இருந்து மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது அவர் சுற்றுலாத்துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு வேறு துறையில் பணி புரிகிறார். அப்படி இருந்தும் சுற்றுலாத் துறை ஊழியர்கள் அவரது வீட்டில் பணிபுரிவது எப்படி என்று தமிழக தலைமைச் செயலாளருக்கே வெளிச்சம். இதுபோன்று பல்வேறு துறைகளின் ஊழியர்களும் அந்தந்த துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீட்டில் பணிபுரிவது தற்போது தெரிய வந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தமிழகத்தில் நிதித்துறையின் கீழ் உள்ள மாநில தணிக்கைத் துறையில் ஏதோ பிரச்னை என்றாயே..’’ என இழுத்தார் பீட்டர் மாமா.
 ‘‘சொல்றேன்.. இத் துறையின் இயக்குநராக இருந்த முத்துக்குமார் கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்று விட்டார். அந்தப் பதவிக்கு நேர்மையான பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அவரை நியமிக்காமல் தமிழக அரசு கடந்த 24 நாட்களாக இழுத்தடித்து வருகிறது. அதோடு, தற்போது கோவையில் அந்த துறையில் பணியாற்றும் இணை அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து, நியமிப்பதற்கான வேலை நடந்து வருகிறதாம். அவர் உதவி இயக்குநராக பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியவராம். அந்த வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ளதாம். இந்தநிலையில் அவருக்கு பதவி உயர்வு கொடுப்பதற்கான வேலை நடக்கிறது. இதனால் தவறானவரின் கையில் துறை சென்றால் என்ன ஆகும் என்று நேர்மையான ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
  ‘‘சொத்துக்களை குவிக்கிறாராமே ஒரு அதிகாரி..’’
 ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வேலூர் நகரில் இதுவரை தீராத பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலூர் மக்கள் இருந்து வந்தனர். அதற்கேற்ப நேதாஜி மார்க்கெட், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், போக்குவரத்து நெரிசல் என பல விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பஸ் நிலையத்துக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டதை மாற்றி புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நேதாஜி மார்க்கெட் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தொல்லியல்துறையின் எதிர்ப்பு காரணமாக சொல்லப்பட்டாலும், மாற்று இடத்திலாவது நேதாஜி மார்க்கெட் திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். மாறாக வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததுபோலவே தற்போது திட்டத்தையே கைவிடுவதாக அறிவித்திருப்பது கமிஷனரின் அடுத்த நிலையில் உள்ள பகவத்கீதை போதித்தவரின் பெயர் கொண்டவரின் கைங்கர்யம்தானாம்.
இவர் ஏற்கனவே வெளிமாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ‘நிறைய’ செலவிட்டு வேலூருக்கு மீண்டும் வந்தாராம். காரணம், வேலூர் தான் வளம் கொழிக்கும் பூமியாம். அதற்கேற்ப அவர் சொந்த ஊரான சென்னை என பல இடங்களில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறாராம். அவரைப்பார்த்து ஓய்வுபெறும் நிலையில் உள்ள கமிஷனரே அசந்துபோய் இருக்கிறாராம்’’ என்றார்
விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalavaram2020

  டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

 • flight2020

  கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

 • keeladi20

  தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

 • raajeshaathan20

  ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

 • 27-02-2020

  27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்