SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இல்லத்தை காக்கும் ‘இளம் அம்மாக்கள்’

2020-01-24@ 12:05:40

‘முதல் குழந்தை பொம்பள புள்ளையா பிறந்திருக்குப்பா... லட்சுமி குவியப்போகுது பாரு இனி உன் வீட்ல...’’ என்று சொல்வார்கள். குவியா விட்டாலும் பெண் குழந்தைகள் வீட்டில் மிகப்பெரிய செல்வங்கள்தான். செல்லங்கள்தான். ‘அப்ப நாங்க...’ என்று பையன்கள் சண்டைக்கு வந்து விடாதீர்கள். வீட்டில் இல்லத்தரசியான அம்மாவுக்கு பிறகு, ஒரு இளம்தாயாக இருந்து வழி நடத்தும் பெண் பிள்ளைகளை செல்வம் என்று குறிப்பிடுவது தப்பா என்ன? அவர்களை கொண்டாடும் ஒரு தினமே ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு எல்லாம் வீட்டில் 4, 5 பிள்ளைகள் இருப்பார்கள். சகோதரன், சகோதரி என குடும்பமே கலகலவென இருக்கும். அப்புறம் பெருகும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டில் 2 பேர் என்ற நிலை மாறி, தற்போது ‘ஒரு பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சு ஆளாக்கினா போதாதா’ என்ற நிலை வந்து விட்டது. சில கிராமங்களில் என்ன குழந்தை என்று தெரிந்து கொண்டு, பெண் குழந்தை என்றால் கருவிலேயே கொல்லும் சம்பவங்கள் எல்லாம் நடந்த காலம் உண்டு. தற்போது பெண் குழந்தைகள், ஆண்களுக்கு நிகராக சாதித்து வருகிறார்கள். ‘சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்’ என்றார் மகாகவி பாரதியார். அவரின் கனவை இன்று பெண் குழந்தைகள் தங்களது திறமையால் நனவாக்கி வருகின்றனர். அவர்கள் கல்வி உட்பட பல நிலைகளில் உயர வேண்டுமென்பதற்காக போராடியவர்கள் பல பேர். அதற்காக பல சட்டங்களும் உருவாக்கப்பட்டன.

குழந்தை திருமண தடைச்சட்டம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் நிதியுதவி, கருக்கலைப்பு தடுப்பு சட்டம் இப்படி பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையில் ஈடுபடுவர்களுக்கு போக்சோ என பல சட்டங்கள் இன்று பெண்களுக்கு ஆதரவாக உள்ளன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர வேண்டுமென்பதற்காக, அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது. கடந்த 2008, ஜன.24ம் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அவர்கள் உயர்வாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதே நேரம் இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவதாக ஒரு பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 2011ம் ஆண்டு நிலவரப்படி 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற பாலின விகிதத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன. மிகவும் குறைவாக ஹாியானா மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 830 பெண்கள், பஞ்சாப் மாநிலத்தில் 846 பெண்கள் உள்ளனர். இது ஒருபுறமென்றால் இந்தியாவில் 69 சதவீத பெண்களே பள்ளி செல்கின்றனர் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. மேலும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு 18 வயது திருமணத்திற்கான தகுதி வயதாக அறிவிக்கப்பட்டாலும், இந்தியாவில் சுமார் 30 சதவீதம் வரை குழந்தை திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகச்சுமையை சுமக்க வேண்டிய இளம் வயதில், குழந்தைகளை சுமக்கும் கட்டாயத்துக்கு சிறுமிகளை பெற்றோரே தள்ளுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெண் குழந்தைகளை நாம் பேணி காக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான மனநிலையில் மாற்றம் வர வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்