SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பு ஆடுகள்

2020-01-22@ 00:02:03

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வு தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 40 பேர், குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், இத்தேர்வில் முறைகேடு நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள்ளான தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மேலும், தங்களது இன வாரியாகவும் முதல் 50 இடங்களை பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நபர், தங்கள் மாவட்டத்தில் உள்ள மையத்தில் தேர்வு எழுதாமல், 4 மணி நேரம் பயணித்து, ராமேஸ்வரம் மையத்தில் ஏன் தேர்வு எழுதினார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

இவ்வாறு, பல சந்தேகங்களை எழுப்பியுள்ள இத்தேர்வில், முறைகேடு நடந்துள்ளது என பல தரப்பில் இருந்தும் டி.என்.பி.எஸ்.சி. அமைப்புக்கு புகார்கள் குவிகின்றன. இதனால், அதிர்ந்துபோன டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், தரவரிசை பட்டியல் குறித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தனது விசாரணையை துவக்கியுள்ளார். தேர்வுத்தாள்கள்  வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் தலைமை கருவூலம், கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட முத்துப்பேட்டை தேர்வு மையம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

குறிப்பிட்ட தேர்வர்களிடம் எதற்காக இந்த தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தீர்கள்? என கேட்டபோது, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும், அதனால் அங்கே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். தேர்வர்கள் ஒரே மாதிரியான பதில் அளித்துள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தேர்வர்களை தகுதி நீக்கம் செய்யவும், புதிய ரேங்க் பட்டியல் வெளியிடவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவுசெய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ் திரைப்படம் ஒன்றில், கமலஹாசன், காமெடியாக சில வில்லங்கத்தனம் செய்து, தேர்வு எழுதி, முதல் மதிப்பெண் பெற்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். அதே வில்லங்கத்தனம் தற்போது நிஜமாகவே நடந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் உடந்தையின்றி, நிச்சயம் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, அந்த ‘’கருப்பு ஆடுகள்’’’’ யார்-யார்? என கண்டறிந்து, ‘’களை’’ எடுக்கவேண்டியது அவசியமாகி விட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளை முற்றிலும் ஒழித்து, டி.என்.பி.எஸ்.சி தேர்வு என்றால், வெளிப்படையாக, நேர்மையாக நடக்கும் என்ற நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்