SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கி பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறும் அவலம் பற்றி சொல்கிறார் விக்கியானந்தா: wiki யானந்தா

2020-01-21@ 00:06:44

‘‘லஞ்சம்னு வந்துட்டா அதை ஆப்லைன்லையும் வாங்கலாம்... ஆன்லைன்லையும் வாங்கலாம்னு சொல்றாங்களே, அது உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கூடவே இருக்கும் கான்ஸ்டபிள் லஞ்சம் வாங்குவதில்லையா... குக்கிராமத்தில் இருக்கும் போலீஸ்காரர் லஞ்சமே வாங்காமல் இல்லையா... இங்கே லட்சியம்தான் முக்கியம். லஞ்சம் எங்கிருந்தாலும் வாங்கலாம்... எங்கிருந்தாலும் வாங்காமலும் இருக்கலாம். அதை தான் தனக்கு சாதகமாக ஒரு டாஸ்மாக் அதிகாரி கொள்கையாக வைத்துள்ளார்.
‘‘குழப்பாதே, விஷயத்துக்கு நேரே வாரும்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் ஒருவர் மீது தொடர்ந்து லஞ்சப்புகார் தலைமை அலுவலகத்திற்கு வந்தவாறு இருந்தது. இந்தநிலையில், அவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், இடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் லஞ்சம் வாங்குவதும், ஆய்வு நடவடிக்கைகளை பாரபட்சமாக நடத்துவதாகவும் ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, 30 கடைகளுக்கு ஆய்வு சென்றால் அதில், 10 கடைகளில் ஆய்வு நடத்தியதாக மட்டுமே கணக்கு காட்டுகிறார். மீதம் 20 கடைகளில் பணத்தை பெற்றுக்கொண்டு தவறு செய்த ஊழியர்களை விட்டுவிடுகிறார். இது சென்னை மண்டலத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, அவர்கள் தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்பும் பணியில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜல்லிக்கட்டில் கால்நடை துறையை கால் வாரிய அதிகாரிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜல்லிக்கட்டு சமயத்தில் கால்நடைத்துறையினருக்கு பணிச்சுமை அதிகரித்து விடும். தகுதிச்சான்று வழங்குவதற்காக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களை ஆய்வு செய்யும் பணி, ஜல்லிக்கட்டுக்கு காளைகள் பங்கேற்பதற்கான அனுமதிச்சீட்டு  வழங்கும் பணி கால்நடை துறையின் அனைத்து அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணியாற்றுகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பொங்கல் நாளில் நடக்கும் போதிலும் அதிகாலையே ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளுக்கு சென்று காளைகள் பரிசோதனை, அதற்கு அனுமதி வழங்குவது, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ளும் பணிக்காக கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என ஒரு குழுவாகவே வந்து பணியாற்றி வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு நடக்கின்ற நாள் வரை ஏறத்தாழ 80 சதவீத பணிகளை கால்நடை துறையினர் மேற்கொள்கின்றனர்.
ஆனால் ஜல்லிக்கட்டு நடந்து முடிகின்ற வேளையில் கால்நடை துறையினரை ஜல்லிக்கட்டு நடத்தும் கமிட்டியினரும் சரி, பிற அரசுத்துறையினரும், அரசியல்வாதிகளும் யாருமே கண்டுகொள்ளவில்லையாம். உரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லையாம்.
ஜல்லிக்கட்டு விழா நிறைவு பெறும்போது பரிசளிப்பு சமயத்தில் விழா மேடைக்கு கூட அதிகாரிகள் உள்ளிட்ட யாரையும் கண்டுகொள்வதே இல்லை. ஜல்லிக்கட்டிற்காக காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கக்கோரியும், அனுமதிச்சீட்டு வழங்கக்கோரியும் பலமுறை அதிகாரிகளை விடாமல் துரத்தும் அரசியல்வாதிகளும், காளைகளின் உரிமையாளர்களும் தங்கள் தேவைகளை நிறைவேறிய பின்னர் எதையுமே கண்டுகொள்வதில்லை...’’ என்று குமுறுகின்றனர் என்றார் விக்கியானந்தா.
‘‘வங்கி பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறுவது தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 11ம், டிரைவர் பணியிடங்கள் 3ம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வி தகுதி 8ம் வகுப்பு என இருந்தாலும் கூட இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை விண்ணப்பங்களை வாங்கி சென்றுள்ளனர். 31ம் தேதி தான் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும். ஆனால் இந்த பணியிடத்தை நிரப்ப பல லட்சம் பேரம் நடக்குதாம். மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என கூறியே ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர். விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் கடைசி நேரத்தில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் சிக்கல் வந்து விடும் என்பதால், அதிமுக முக்கிய புள்ளி கேட்டுக் கொண்டதால் விண்ணப்ப வினியோகத்தை திடீரென நிறுத்தி விட்டார்கள். ஆன்லைனில் ஏன்? விண்ணப்பம் வெளியிட வில்லை என்று பொதுமக்கள் கேட்டால், 8ம் வகுப்பு தான் கல்வி தகுதி. 8ம் வகுப்பு முடித்தவர்கள் எப்படி ஆன்லைனில் போய் விண்ணப்பத்தை டவுன் லோடு செய்வார்கள் என்று அதிகாரிகள் எதிர்கேள்வி கேட்டு விண்ணப்பதாரர்களை திணறடிக்கிறாங்க...‘’ என்றார் விக்கியானந்தா.
‘‘கரன்சியில் குளிக்கும் அதிகாரி பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில் பிட்டராக பணியை துவக்கி, மீட்டர் ரீடர், ஓவர்சீஸ் மற்றும் டிமேன் என பல பதவிகளை கடந்து, தற்போது ஏ.இ. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்  ஒரு அதிகாரி. இவர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், சென்னையில் உள்ள முக்கிய அதிகாரிக்கு வலது கரமாகவும், கோவையில் உள்ள இன்னொரு முக்கிய அதிகாரிக்கு இடது கரமாகவும் உள்ளார். அதனால், இவரை கண்டு பல அதிகாரிகள் நடுங்குகின்றனர்.  இவர், எந்த வேலையும் செய்யாமல், மற்ற அதிகாரிகளை மிரட்டியே கரன்சிகளை குவிக்கிறார்.  பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நீடிப்பதால் இவருக்கு எல்லாமே அத்துபடி. இவர், வசூல் தட்டி எடுப்பது மட்டுமின்றி, மற்ற பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் பெட்டிசன் தட்டி விடுகிறார். மாநகராட்சி கமிஷனர், ஆய்வு கூட்டம் நடத்தும்போது, அதில் மட்டும்தான் இவர் கலந்துகொள்கிறார். இதைத்தவிர, வேறு எந்த வேலையும் செய்வதில்லை. இவரது மனைவியும், மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். பல காரியங்களை தனது மனைவி மூலமாக நிறைவேற்றி, அதிலும் காசு பார்த்து விடுகிறார் இந்த கில்லாடி அதிகாரி.   ஒரு வேலையும் செய்யாமல், மற்றவர்கள் மீது குறை சொல்லியே காலத்தை ஓட்டியும் கோடிக்கோடியாக பணத்தை குவித்தும் வருகிறார்..’’என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்