SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீர்க்கன்காரணை பேரூராட்சி அலுவலகத்தில் பசுமை விழாவுக்காக பழமையான 30 மரங்கள் அகற்றம்

2020-01-20@ 00:09:29

* அதிகாரிகள் அடாவடி
* பொதுமக்கள் கண்டனம்

தாம்பரம்: பசுமை விழாவிற்காக பீர்க்கன்காரணை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பழமையான 30 மரங்களை அதிகாரிகள் வெட்டி அகற்றிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த பீரக்கன்காரணை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை, பசுமை விழா வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் பிளாஸ்டிக் மாற்று பொருள் கண்காட்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் சார்பில் பிளாஸ்டிக் மாற்று பொருள் கண்காட்சி, பீர்க்கன்காரணை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பந்தல், சிறிய கடைகள் மற்றும்  ஸ்டால்கள் அமைப்பதற்கு இடையூறாக உள்ளதாக கூறி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த 40 வருட பழமை வாய்ந்த 30க்கும் மேற்பட்ட மரங்களை பேரூராட்சி அதிகாரிகள் அடியோடு வெட்டி சாய்த்து உள்ளனர். காற்று மாசுவை தடுக்கவும், மழை வேண்டியும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் மாநிலம் முழுவதும் மரங்களை வளர்க்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், தூய்மை, பசுமை விழா என கூறி 30க்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த மரங்களை வெட்டி சாய்த்த பேரூராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘நாட்டில் மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் மழையின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு சார்பிலும், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டுமென தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், மரங்களை பாதுகாத்துக் கொண்டு வருகின்றனர்.இதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அதிகாரிகளே, பழமை வாய்ந்த மரங்களை வெட்டி சாய்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை, பசுமை விழாவுக்கான கண்காட்சி அமைக்க பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி அரசு பள்ளிகள் உள்ளது.

எனவே தூய்மை, பசுமை விழாவை அது போன்ற இடங்களில் ஏற்பாடு செய்து நடத்தி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மரங்களை வெட்டி சாய்த்து இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. எனவே, பழமை வாய்ந்த மரங்களை வெட்டி சாய்த்த பேரூராட்சி அதிகாரி மீது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* போட்டி போட்டு அழிப்பு
தூய்மை, பசுமை நிகழ்ச்சி பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டு முதலில் இந்த நிகழ்ச்சி பெருங்களத்தூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற இருந்தது. ஆனால் இரு பேரூராட்சி செயல் அலுவலர்களின் போட்டியாலும், இதில் யார் பெரியவர்கள், யாருக்கு முக்கியத்துவம் என்ற சண்டையாலும், தனி மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு அதில் நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி என்பதாலும், இதில் மாவட்ட ஆட்சியரிடம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காகவும் வலுக்கட்டாயமாக இந்த விழா பீர்க்கன்காரணை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடத்த பீர்க்கன்காரணை பேரூராட்சி செயல் அலுவலர் முடிவு செய்து, அலுவலக வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்