SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ஜினியரிங் கல்லூரியில் வேலியே பயிரை மேய்ந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-20@ 00:03:00

‘‘என்ன விக்கி ஜல்லிக்கட்டு விளையாட்டிலும் அரசியல் புகுந்துவிட்டது போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம்... மதுரை மாவட்ட நிர்வாகம்மற்றும் அதிகாரிகள் தான் இதுக்கு முக்கிய காரணம். அதாவது, தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றிய பின், கடந்த 3 ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்கலை. இந்த முறை ஜல்லிக்கட்டில் அரசியல் புகுந்ததால் காளைகளுக்கு டோக்கன் வழங்கியதில் கூட முறைகேடு அரங்கேறியது. போலி டோக்கன் அறிவித்து போட்டிக்கு வந்த நிஜ டோக்கன் உள்ள காளைகளை நிராகரிச்சுட்டாங்களாம். இதற்கு காளைகளின் உரிமையாளர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவிச்சாங்க... இவங்க முறையா டோக்கன் வாங்கி வரிசையில் காளைகளோடு பல மணி நேரம் காத்து நிற்க, அமைச்சர், எம்எல்ஏ, வி.ஐ.பி. டோக்கன் பெற்ற காளைகளுக்கு ‘கிரீன் சிக்னல்’ கொடுத்து தனி கேட்டில் போலீசார் அனுமதித்தார்களாம்... கள்ள மார்க்கெட்டில் டோக்கன்கள் விற்பனையாச்சாம். நியாயம் கேட்ட காளை உரிமையாளர்களை போலீசார் அடித்து துவைச்சது வேறு கதை...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமைச்சர் கோபித்து கொண்டாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்த சுகாதார அமைச்சரின் 3 காளைகளில் ஒன்று, அவர் வருவதற்கு முன் அவிழ்க்கப்பட்டதால் சீறிட்டாராம்... அதனால அவர் வர்ற வரைக்கும் மற்ற 2 காளைகளுக்கு விஐபி அந்தஸ்து வழங்கி பாதுகாப்பாக நிறுத்தி வச்சிருந்தாங்களாம்... அவர் வந்ததும் அவிழ்க்கப்பட்டதாம்... அமைச்சரின் காளைக்கே முதல் பரிசு வழங்க, மதுரை மாவட்ட அமைச்சர் சிபாரிசு செய்தாராம்... ஓய்வு நீதிபதி மேற்பார்வையில் நடைபெறுவதால், பிரச்னை வரக்கூடாது என்று அதிகாரிகள் சமாதானம் சொல்லி, மதிமுக கட்சி மாவட்ட செயலாளரின் காளைக்கு முதல் பரிசு வழங்கினார்களாம்... ஏற்கனவே மதுரை கலெக்டராக இருந்த வீரராகவராவ், ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செஞ்சிருந்தாரு... அவருக்கப்புறம் வந்த கலெக்டர்கள் தொடர்ந்து மாறிக்கிட்டே இருந்ததால, மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடும் மந்தமாக இருக்காம்... அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும், போலீசாரின் பாதுகாப்பு குளறுபடிகளுமே 3 பேர் பலியானதற்கு முக்கிய காரணம்னு சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ ஒன்றை மூன்றாக பிரிச்சது சரி... மாவட்ட செயலாளர்களை இதுவரை ஏன் நியமிக்கலை என்று இலை கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மாவட்டத்தை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று மூன்று மாவட்டங்களாக பிரித்து பல மாதங்களாகியும், வேலூர் மாவட்டத்துக்கு இலை கட்சிக்கான செயலாளரை இதுவரை நியமிக்கவில்லை. வேலூர் மாவட்டத்துக்கு புதியதாக செயலாளரை நியமிக்க வேண்டும் என்று இலை தரப்பு கோரிக்கை விடுத்தாங்களாம். வேலூர் மாவட்டத்துக்கு யார் செயலாளர் என்பதுதான் இப்போது குழப்பம். காரணம் 30க்கும் மேற்பட்டோர் இப்பொறுப்பை கேட்டு ரெகமண்டேஷனில் வருகிறார்களாம். வேலூர் மாநகர், புறநகர் என்று இரு மாவட்டங்களாக பிரித்து விடலாம் என்று வீரமான அமைச்சரும் தலைமைக்கு ஐடியா கொடுத்துள்ளாராம். இதற்கு இரட்டை தலைமையும் தலையாட்டி விட்டதாம். இந்நிலையில், வேலூர் மாநகருக்கு வேலூர் நகரை சேர்ந்த ஒருவரும், காட்பாடியை சேர்ந்த ஒருவரும் பதவி கேட்டு நெருக்குகிறார்களாம். அதேநேரத்தில் புறநகருக்கோ பலர் போட்டியிடுகிறார்களாம். இவர்களில் 2006ம் ஆண்டு எம்எல்ஏ வேட்பாளர் குடியாத்தம் பழனிமலை பெயரை கொண்டவரும், ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த ராமனின் பேர் கொண்டவரும், எஸ்எஸ்ஆரும், அணைக்கட்டை சேர்ந்த வேலானவரும் போட்டியில் முன்னணியில் உள்ளார்களாம். இதில் யாருக்கு யோகம் அடிக்குமோ? என்று காத்திருக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலியே பயிரை மேய்ந்த கதையை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்னகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரியில் ஒன்றான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை. அரசு பொறியியல் கல்லூரிக்கு எதிரே மாணவிகள் விடுதியும், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பும் இருப்பதால், மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து முக்கிய பொறுப்பில் உள்ளவர் இரட்டை அர்த்தத்தில் பேசினார் என்பது விசாகா கமிட்டி விசாரிக்கும் அளவுக்கு சென்றது. இருப்பினும் கல்லூரியின் மானம் கருதி அதை வெளிவிடாமல் பேராசிரியர்கள் அமைதி காத்தனர். எதிர்கால தூண்களான மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அந்த முக்கிய நபரே வேலியை மேய்ந்த பயிராக மாறியதுதான் இப்போது கல்லூரியில் ஹாட் டாபிக். கல்லூரி முதல்வர் குடியிருப்புக்கு முறைகேடாக மின் இணைப்பு பெற்ற விவகாரம் தற்போது மின்வாரிய விஜிலென்ஸ் விசாரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. தில்லையில் நடனமாடும் தெய்வத்தின் பெயர் கொண்ட கல்லூரியின் அந்த பொறுப்புவாய்ந்தவர், குடியிருப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, விடுதியில் இருந்து மின் இணைப்பை பெற்று கடந்த 6 மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளார்.
குளிர்சாதனங்கள், வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர், டிவி என மின்சார திருட்டு மிதமிஞ்சிய நிலையில், கல்லூரி வட்டாரமே மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் மேல் புகார் அனுப்பியது. விளைவு மதுரையில் உள்ள மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு, மின்திருட்டை கண்டுபிடித்துள்ளனர். பயிரை காக்க வேண்டிய வேலியே நடத்தும் விளையாட்டுக்களை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெல்ைல அரசு பொறியியல் கல்லூரியினர் தவிக்கின்றனர்...’’ என்றார்
விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்