SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜல்லிக்கட்டை புறக்கணித்த அமைச்சரின் அரசியலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-19@ 00:04:57

‘‘முத்துமாவட்டத்துல இலை தரப்பினரின் கண் அசைவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூத்துக்குடியில் உள்ள 12 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் கோவில்பட்டி யூனியனில் மட்டும் தேர்தல் அலுவலருக்கு திடீரென  நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அட்மிட் ஆகிட்டாருனு சொல்றாங்க... தேர்தல் அலுவலர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிவு வந்தும் சேர்மன், துணை ேசர்மன் யார்னு தெரியாம வாக்காளர்கள் குழப்பத்தில் இருக்காங்க. கோவில்பட்டி யூனியனில் 19 இடங்களில் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை. இதில் திமுக 8 இடங்களிலும், அதன் கூட்டணியான இந்திய கம்யூ. ஒரு இடத்தையும் வென்றுள்ளது. சுயேட்சை கவுன்சிலர்கள் இருவர் திமுகவில் இணைந்துவிட்டனர். இதனால் 11 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் எளிதாக சேர்மன், துணை சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றும் நிலை உள்ளது. ஆனால் இலை கட்சி 5 இடங்கள் பிடித்த நிலையில், கூட்டணியான தேமுதிகவிடம் ஒரு இடம், சுயேட்சை கவுன்சிலர்கள் இருவரின் ஆதரவும் அதிமுகவிற்கு உள்ளது. எனினும் 8 இடங்கள் மட்டுமே உள்ளதால் அதிமுகவிற்கு பெரும்பான்மை சேரவில்லை. அதனால் தான் சேர்மன், துணை சேர்மன் தேர்தல் நடத்தப்படவில்லை என கோவில்பட்டி முழுவதும் பேச்சாக இருக்கிறது. நாம் ஓட்டுபோட்டோம்.. ஆனால் நம்ம தலைவர் யாருன்னு தெரியலையே என்று கோவில்பட்டி மக்கள் மனதில் புழுங்குறாங்களாம்... இது எல்லாம் இலை கட்சியின் மேலிட கண் அசைவுக்காக காத்திருக்கிறாராம். சிக்னல் வந்தால் சிகிச்சை வார்டில் இருந்து தேர்தல் அதிகாரி வெளியே வருவாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவையில யாருக்கு... என்ன கோபம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவையில் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் இலை கட்சி எம்எல்ஏ ஒருவர் இருக்கிறாராம்.  இவர், மாநகராட்சி கவுன்சிலராகி, மாநகராட்சி பணிக்குழு தலைவராகி தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், தனது கட்சிக்காரர்கள் கோபம் அடையும் அளவுக்கு வாரி வாரி குவிக்கிறார். இவரது மகன் கோவாலு போடும் ஆட்டத்துக்கும் அளவே இல்லை. கோவை மாநகரில் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை நிர்வாகம் இவர்கள் கைவசம்தான் உள்ளது. தென் மாவட்டத்தில் இருந்து, இங்கு வருகை தந்த ஒருவரிடம் அனைத்து நிர்வாக பொறுப்பையும் ஒப்படைத்து, வசூல் தட்டி எடுக்கின்றனர். இதுமட்டுமின்றி, மாநகராட்சி ஒப்பந்த பணிகள் ,உள்ளூர் திட்டக்குழுமம் பணிகள், தார் சாலை பணிகள் போன்ற பல முக்கிய பணிகளையும் விட்டுவைக்கவில்லை. மாற்று கட்சியை சேர்ந்த ஒரு நபர் உதவியுடன், கோவை திருச்சி ரோடு, சுங்கம், சிந்தாமணி போன்ற பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை பெற்றுக்கொண்டு, வசூல் குவிக்கிறார்கள். ஆளும்கட்சி பெயரை சொல்லி வசூலிக்கும் இவர்கள், ஆளும்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களை உதாசீனம் செய்வதால், அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சில முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

கோவை மாநகராட்சி 75-வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது ஒரு வீட்டிற்கு ₹30 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை வாங்கிக்கொண்டு, கனெக்க்ஷன் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், கொடுக்கவில்லை. தந்தையும், மகனுமாக சேர்ந்து, பல கோடிகளை குவித்து விட்டனர். இவர்களது ஆட்டத்தை பார்த்து இலை தரப்பினரே முகம் சுளிக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகரத்துல இலை கட்சியில களையெடுப்பு நடக்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் இலை கட்சி பெரும்பாலான இடங்களை இழந்து விட்டதாம்... குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அவரது மனைவிகள் தோல்வி அடைஞ்சிட்டாங்களாம்... மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 5 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் இலை கட்சி வசமும் இருக்கு... இன்னும் 4 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லையாம்... இந்த 4 இடங்களிலுமே திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையே உள்ளதாம்... உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் இலை கட்சி நிர்வாகிகளை மாற்ற தலைமை முடிவு செய்திருப்பதாக பரபரப்பான ‘டாக்’ ஓடிக்கிட்டிருக்குப்பா ... குறிப்பாக பணத்தை வாங்கி கொண்டு வேலை செய்யாத, பொதுமக்களிடத்தில் அதிருப்தியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி, வார்டு செயலாளர்களை மாற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும் என்றும் தலைமையிடத்தில் இலை நிர்வாகிகள் கூறியிருக்கின்றனராம்... இதனால் விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுதுப்பா...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தெர்மோகோல் அமைச்சர் கால்நடைகளிடமும் அரசியல் சாணக்கியதனத்தை காட்டுகிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அலங்காநல்லூருக்கு சேலம் விவிஐபி வரல. அதுக்கு காரணம் ஜல்லிக்கட்டு விஷயத்துல, அமைச்சர்களுக்குள்ள நடந்த மல்லுக்கட்டுதான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சேலம் விவிஐபிக்கு மதுரையை சேர்ந்த ஒரு அமைச்சர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாம்... அதேநேரம் மற்றொரு ‘சர்ச்சை பேச்சு புகழ்’ அமைச்சர், ‘சேலம் விவிஐபி  வர மாட்டார்’ என பேட்டி கொடுத்தாராம்... ஆனால், அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் தேர்தலில். இலைக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் சேலம் விவிஐபி வரத்தயங்குகிறார் என ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா... அது மாதிரியே ஜல்லிக்கட்டுக்கு வரவில்லை. அதே நேரம் சேலம் விவிஐபிக்கு அழைப்பு விடுத்த அமைச்சரும், அந்த மாவட்டத்திலுள்ள இலைக்கட்சியின் 4 எம்எல்ஏக்கள் மட்டும் வந்திருந்தாங்க... காளை வளர்க்கும் சுகாதார அமைச்சரும் வந்திருந்தாரு... ஆனால் மதுரை மாநகரை சேர்ந்த அமைச்சரும், புறநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் ‘ராஜ’ பெயரை தாங்கிய எம்எல்ஏவும் வராமல் புறக்கணிச்சுட்டாங்க... முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் புறக்கணித்ததுதான், தூங்காநகரத்துல பரபரப்பான டாபிக்கா ஓடிக்கிட்டிருக்கு... வாய் இல்லாத ஜீவன்கள் விஷயத்திலும் அரசியல் பார்ப்பதா என்று இலை கட்சி அதிருப்தியாளர்கள் சிரித்தபடி பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்