SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவிக்காக எலியும் பூனையும் இணைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-18@ 01:14:09

‘‘கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள மாநகராட்சி வ.உ.சி. பூங்காவிற்கு மத்திய  அரசு நெருக்கடி கொடுத்து வருகிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்  நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இப்பூங்காவை மேம்படுத்த முடியாமல்  திணறுகிறது கோவை மாநகராட்சி நிர்வாகம். இப்பூங்கா,  பழைய நிலையிலேயே இருப்பதால் மூடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தை உணர்ந்து, ஸ்மார்ட் சிட்டி நிதி ரூ.20 கோடியில் இப்பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இது தொடர்பாக ஸ்மார்ட் சிட்டி இயக்குனரவை கூட்டம் நடத்தி, வரும் மே  மாதத்திற்குள் மேம்பாட்டு பணியை துவக்க வேண்டும். இல்லையேல், இப்பூங்கா இழுத்து மூடப்படும் என்று கூறியுள்ளது.

வேகமாக மேம்பாட்டு பணியை துவக்க, ஒரு உதவி  பொறியாளர் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரோ வெறும் பொம்மை. அதனால், கிழக்கு மண்டல உதவி  நகரமைப்பு அலுவலர் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே மாநகரின்  மையப்பகுதியில் ஒரு ஓட்டல் விவகாரத்தில் விட்டமின்-எம் வாங்கிய விஷயத்தில் சிக்கி, அதிலிருந்தே இன்னும் மீளவில்லை. இதற்கிடையில், இது வேற கூடுதல் பொறுப்பு என்பதால் தலையை பிய்த்துக்கொள்கிறார். எத்தனை அதிகாரி நியமிச்சாலும், இன்னும் மேம்பாட்டு பணி துவங்கவில்லை. இப்படித்தான் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பராமரிப்புக்கு நிதி  ஒதுக்கி, எந்த ஒரு பணியும் இதுவரை நடைபெறாமல், பசுமை தீர்ப்பாயம் வரை சென்றுவிட்டது. பிரச்னைக்கு  முடிவு எட்டப்படாமல் உள்ளது. மாநகராட்சி பணி என்றாலே இழுபறிதான்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல இலை கட்சியில 3 பேரு சேர்வதற்குள்ள பெரும்பாடு பட்டதா சொல்றாங்களே..’’  ‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பரியம் மிக்க கட்சியில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதா 2 பேருக்கு கல்தா கொடுத்துட்டாங்க. அவர்கள் ரெண்டு பேரும் இலை கட்சியில சேர்ந்து உள்ளாட்சி தேர்தல்ல பதவிய பிடிக்கணும்னு திட்டம் போட்டாங்களாம். ஏற்கனவே இலை கட்சியில இருந்து வெளியே வந்த மாஜி கவுன்சிலரையும் சேர்த்துக்கிட்டாங்களாம். அவர்கள் 3 பேரும் இலைகட்சியில சேருவதற்கு தூது விட்டாங்களாம். தமிழக விவிஐபி சேலம் வரும்போது ஐக்கியம் ஆகிடலாம்னு திட்டம் வச்சிருந்தாங்களாம். ஆனா 3 முறை விவிஐபி சேலம் வந்தும் அவர்களை கண்டு கொள்ளலையாம். அதுமட்டும் இல்லாம இவர்களால் கட்சிக்கு என்ன லாபம்ன்னு கேள்வி எழுப்பினதாகவும் சொல்றாங்க.கடைசியில மாவட்ட செயலாளரு முன்னாடியே கட்சியில சேர சொல்லிட்டாராம். அதன்படி கட்சியில சேர்ந்தவங்க வானத்தை வில்லாக வளைப்போம்னு சபதம் செஞ்சிகிட்டாங்களாம். இதைகேட்ட இலைக்கட்சி தொண்டர்கள், கட்சிக்கு கெட்டபெயரை சேர்க்காம இருந்தாலே போதும்னு முணுமுணுத்தாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூர் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருக்கும் பெண் அதிகாரியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக புகார் வருகிறதே..’’ ‘‘உண்மைதான். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி கமிஷனர்களிடமும், பொறியாளர்களிடம் அலுவலகத்துக்கு வரும்போது, பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறாராம். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை ஏன்றால் அந்த நகராட்சியின் பைல்கள் பல நாட்கள் அப்படியே கிடப்பில் இருக்கிறதாம். வெளியே தான் ஒரு நேர்மையான அதிகாரி போல தன்னை மாற்றி கொண்டு செயல்பட்டு வருகிறாராம். மேலும் அலுவலகத்தின் உள்ளே பணிபுரியும் அதிகாரிகளையும் ஒருமையில் பேசுவது, தான் மட்டுமே அலுவலகத்தில் வேலை செய்வதுபோல் காட்டி, மற்ற அதிகாரிகளை டார்ச்சர் செய்து வருகிறாராம். இதுகுறித்து நகராட்சிகள் நிர்வாக இயக்குனருக்கும், துறை செயலாளருக்கும் புகார் மனு அனுப்பி வைத்துள்ளனர். விரைவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’ ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் 12 யூனியன்களில் கயத்தாறு யூனியனை தனிப் பெரும்பான்மையுடன் அமமுக கைப்பற்றி அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. இது தவிர கருங்குளம் யூனியனிலும் அமமுக 2 இடங்களை கைப்பற்றியிருந்தது. அமமுக 2 இடங்களில் வெற்றி பெற்றதால் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இந்த யூனியனை கைப்பற்ற 9 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுகவிடம் 7 இடங்கள் மட்டுமே இருந்தன. அமமுக நிர்வாகிகள் இறுதி வரை நாங்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று சூளுரைத்து வந்தனர். திமுகவிடம் 5 இடங்கள் இருந்த நிலையில் எஞ்சிய இரு இடங்களில் புதிய தமிழகம் ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இதனால் யூனியன் சேர்மன் பதவி யாருக்கு என்ற ஊசலாட்டம் இருந்தது. அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தேர்தலில் எதிரியாக காட்டிக் கொண்ட அமமுகவும், புதிய தமிழகமும் யூனியன் சேர்மன் தேர்தலில் அதிமுகவிடம் சரண்டராகி விட்டன. இதனால் அமமுக ஆதரவுடன் இந்த யூனியனை அதிமுக கைப்பற்றி விட்டது. வெளியில் எலியும், பூனையுமாக இருக்கும் இரு கட்சிகளும் பதவி என வந்தவுடன் கூட்டணியில் ஐக்கியமாகி விட்டன. எல்லாம் வாய் ஜாலம் தான் என்கின்றன எதிர்க்கட்சிகள்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்