SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உறுதி ஏற்கும் நாள்

2020-01-15@ 00:05:45

தனிமனித நம்பிக்கை, இலக்கு எனப்படுகிறது. சிலரது நம்பிக்கை லட்சியம் எனப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த சமூகம் அப்படி கொள்ளும் நம்பிக்கை வாழ்வியல் எனப்படுகிறது. அப்படியான வாழ்வியலுக்குச் சொந்தக்காரர்கள் உழவர்கள். தங்கள் வியர்வையை உரமாக்கி உலகிற்கு உணவளிக்கும் ஒப்பற்ற உழைப்பாளிகள். தங்கள் உழவிற்கு உதவிய இயற்கையின் கருணைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடை செல்வங்களுக்கும், விவசாயக் கருவிகளுக்கும் நன்றியைத் தெரிவிக்க தைப்பொங்கல் என்ற தனிப்பெரும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சமூகம், முக்கிய திருநாளாக கொண்டாடுகிறது.

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை தை மாதத்தில் அறுவடை செய்வதால் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனால் தை மகளை வரவேற்க  வீடுகளின் சுவர்கள் அழகிய
வண்ணம் பெறுகின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கூரைப்பூவோடு, மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ, பிரண்டை, தும்பைச்செடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி, வீட்டு வாசல்களில் தொங்க விடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய மருந்துப்பெட்டகம்.

கூரைப்பூ வீட்டிற்குள் விஷப் பூச்சிகளை அண்ட விடாது. சுவாசிக்கிற காற்றை சுத்தப்படுத்தும் குணம் மாவிலைக்கு உண்டு. தும்பை இருமலுக்கு மருந்து. நோய் எதிர்ப்பு கொண்டது வேப்பிலை. ஆவாரம் பூ சர்க்கரை வியாதிக்கான மருந்து. இதனால் மருத்துவரைத் தேடிச் செல்லக்கூடாது என ஆதிகாலத்திலேயே செய்யப்பட்ட ஏற்பாடு இது. ஒரு பண்டிகையின்  பின் இருக்கும் மருத்துவக் குணத்தை பொங்கலின் தித்திப்பில் மறந்து போகிறோம். எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், அதன் வேர் மண்ணில் தான் இருக்கிறது என்பதை மரம் உணர்த்தும். அது போலத்தான் பொங்கல் பண்டிகை நமக்கு ஒரு செய்தி சொல்லிக் கொண்டே இருக்கிறது. உலகின் எந்தத் திசையில் வேலை செய்தாலும் பொங்கல் திருநாளுக்காக குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு படையெடுக்கும் குணம் தமிழர்களுக்கு உரியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக சென்னையில் இருந்து பஸ் மூலம் மட்டும் சொந்த ஊர்களுக்கு 6.50 லட்சம் பேர் கிளம்பி வந்துள்ளனர். தங்கள் உறவுகளுடன் புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் உன்னத திருநாளாக பொங்கல் இருக்கிறது. ஆனாலும் விவசாயப் பரப்பளவு தமிழகத்தில் வெகுவாக குறைந்து வருகிறது. 21 லட்சம் ஹெக்டேரில் நடைபெற்ற சம்பா விவசாயம் தற்போது எட்டரை லட்சம் என சுருங்கியுள்ளது. குறுவை சாகுபடி 5 லட்சம் ஹெக்டேரில் இருந்து தற்போது 2 லட்சம் ஹெக்டேராக மாறியுள்ளது. நிலத்தை பாதுகாப்பதும், விவசாயத்தை பாதுகாப்பதும் வெவ்வேறான விஷயங்களல்ல. விவசாயத்தை பாதுகாப்பது, விவசாயிகளைப் பாதுகாப்பதாகும். இன்றைய பொங்கல் திருநாள் வெறும் பெயரளவுக்கு கொண்டாட்டமாக இல்லாமல், விவசாயத்தைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்று செயல்படும் நந்நாளாகவும் இருக்கட்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்