SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்ஐ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி சிக்கினான்?....கேரளாவில் 6 பேர் கும்பல் சுற்றிவளைப்பு தமிழக போலீஸ் தீவிர விசாரணை

2020-01-13@ 00:00:55

நாகர்கோவில்: களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், கொல்லம் அருகே 6 பேர் கும்பலை கைது செய்தனர். இவர்களில் ஒருவர், முக்கிய தீவிரவாதி அப்துல் சமீம்மாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் (57) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஜிபி திரிபாதியும் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை செய்திருந்த நிலையில், கடந்த 7ம்தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த முகமது ஹனிப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள் இரவுதான், எஸ்.ஐ. வில்சனை, அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் சுட்டுக் கொன்றனர்.

தங்களது கூட்டாளிகளை காவல்துறை கைது செய்ததால், தமிழக போலீசாரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வில்சனை சுட்டு ெகான்றதாக கூறப்படுகிறது. கொலை நடந்து இரு நாட்களுக்கு பின் டெல்லியில், தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக காஜாமைதீன் (52), அப்துல் சமது (28), சையது அலி நவாஸ் (32) ஆகியோரை கைது செய்தனர். இதில் சையது அலி நவாஸ், கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரும், அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோரின் கூட்டாளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அப்துல்சமீம், தவுபீக் ஆகியோரை பிடிக்க குமரி மாவட்ட எஸ்.பி. நாத் தலைமையில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள போலீசாரும் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் 80-க்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. கேரளாவிலும் இதுவரை 6 பேரை பிடித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை, கேரள மாநிலம் கொல்லம் அருகே தென்மலை பகுதி, கழுதரூட்டி என்ற இடத்தில் ஒரு காரில் சந்தேகத்துக்கிடமான வகையில் மொத்தம் 6 பேர் சென்றுள்ளனர்.

இவர்கள் காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது இவர்களை தென்மலை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரகசியமாக பின் தொடர்ந்தனர். துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கையில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேருக்கு நேர் மோதி அவர்களை பிடிக்கும் முடிவை கைவிட்டு, ரகசியமாக பின் தொடர்ந்தனர். பாலருவி பகுதியில் சென்றபோது காரை நிறுத்தி விட்டு அருவியில் குளித்துள்ளனர். பின்னர் மீண்டும் காரில் புறப்பட்டபோது கேரள-தமிழ்நாடு போலீசார் இணைந்து சாலையின் குறுக்கே லாரி ஒன்றை நிறுத்தி, காரை மறித்து அவர்களை மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களை தமிழக கியூ பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் ஒருவர், தீவிரவாதி அப்துல் சமீம் ஆக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. எனினும் தமிழக மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஆட்டோ டிரைவர் உட்பட 6 பேர் சிக்கினர்: சிறப்பு எஸ்ஐயை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுடனான தொடர்பில் இருந்த  நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நாகூர் ஹனிபா (39), பிஸ்மி நவுசாத் (33), விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அக்பர் அலி (30) ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல் செங்கோட்டை அருகே 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மர்ம பை எங்கே?

களியக்காவிளை மார்க்கெட் சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ம் தேதி இரவு அடையாளம் தெரியாத 2 பேரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. முன்னதாக இருவரும் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை பகுதியில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. சம்பவம் நடப்பதற்குமுன் இரவு 8.40 மணியளவில் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அருகே சாலையில் நடந்து செல்கின்றனர். அப்போது ஒருவரது கையில் பை ஒன்று இருக்கிறது. சிறிது தூரம் சென்ற பின்னர் அதனை சாலையோரம் கடையில் வைத்துவிட்டு நடந்து செல்கின்றனர். இந்த மர்ம பை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பை வைத்த இடத்தில் சென்றபோது அங்கு பை கிடைக்கவில்லை. அதனை கூட்டாளிகள் யாரேனும் எடுத்து சென்றார்களா என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

 • chinnaa_hospiitt1

  25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

 • vinveli_sathanaiiii1

  விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

 • landlide_floodd_11

  பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்