SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒத்தை ஓட்டுக்கு கோடி ரூபாய் கேட்கும் சுயேச்சை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-01-10@ 00:22:03

‘‘விக்கி நீங்க சொன்ன மாதிரியே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகுது போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அலர்ஜி, அதிர்ச்சியில் இருந்து இன்னும் இலை தரப்பு மீளவில்லை. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக் கும் இப்போதைக்கு நிலைமை சரியில்லை. தாமரையின் ஒவ்வொரு அறிவிப்பு வட மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை விட தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு... தாமரை எதிர்ப்பு அலை தமிழகத்தில் அளவுக்கு அதிகமாகவே இருக்கு... அதனால மத்திய பட்ெஜட்டுக்கு பிறகு பார்க்கலாம்... அதுல தமிழகத்துக்கு சலுகை அறிவிக்கப்பட்டால் அதை முன்னிறுத்தி நாம் தேர்தலை அறிவித்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்துவிடுவோம். அதனால இப்போதைக்கு முடிவை நிறுத்தி வைச்சுடுங்க என்று கோரிக்கை வைத்ததாக சொல்றாங்க... அதையே தான் தேனி விவிஐபி நேற்று பல்வேறு பணிகள் இருப்பதால் நகர்ப்புறங்களுக்கு தனி அதிகாரி நியமிச்சு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கீழே... மாம்பழம் மேலே இருக்காமே, யார் இப்படி செஞ்சது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை மாம்பழத்துக்கு விட்டு கொடுக்கப்போகுது இலை கட்சின்னு புதிய சர்ச்சை கிளம்பியிருக்கு. தமிழக விவிஐபியோட சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்தில் பல்வேறு தகிடுதத்தங்களை செஞ்சி, ஊராட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்ததாக பேசிக்கிறாங்க.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழுவிற்கான 29வார்டுகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில், இலைக்கு 18வார்டுகளும், மாம்பழத்திற்கு 4வார்டுகளும், முரசுக்கு ஒரு வார்டும் கிடைச்சதாம். இதன்படி இலைக்கட்சிக்கே மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி கிடைக்கும் என்று எல்லோரும் காத்திருக்காங்களாம். இப்படிப்பட்ட நிலையில், தலைவர் பதவியை மாம்பழத்திற்கு ஒதுக்கி விட்டதாகவும், மகுடஞ்சாவடியில் ஜெயித்த பெண்மணியை நிழலானவர் பரிந்துரை செய்திருப்பதாகவும், பேச்சு பரபரத்துகிட்டு இருக்கு. இலைகட்சியில் தலைவர் பதவியை பிடித்து, தன்னை மீறி  சைரன் காரில் யாரும் வலம் வரக்கூடாது என்பதே நிழலானவரின் எண்ணமாம். இதற்காகவே இந்த திட்டமாம் என்கின்றனர் இலையின் அடிமட்ட நிர்வாகிகள். ஆனால், அடுத்து வரும் தேர்தலில் இலைக்கு மேயர் சீட்டை தக்க வைக்கவே, அண்ணன் காய்  நகர்த்துகிறார் என்கின்றனர் அடிப்பொடிகள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலைக்கோட்டையில என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றியை மறுநாள் காலையில் தான் அறிவிக்கப்பட்டது. இலை எம்எல்ஏ ஒருவர் தன் கட்சியை சேர்ந்த பியர்ல்பெல்லை தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களிடம் நேரில் வந்து வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் அலுவலராக இருந்த மாவட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் அதுக்கு சம்மதிக்காமல் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு சென்றுவிட்டாராம்... புதுக்கோட்டை நகர் பகுதியில் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது மேடையில் ஏரிய மாவட்ட வழங்கல் அலுவலரை  சுகாதாரத்துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் முன்பாக இலை கட்சி எம்எல்ஏ, நகர செயலாளர் ஆகியோர் ஒருமையில் திட்டியதோடு அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனராம். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த சம்பவத்தை கண்டித்து பேசி வரும் நிலையில் ஆளும்கட்சி எம்எல்ஏ, நகர செயலாளர் ஆகியோர் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் மாநில அளவிலான பெரிய அளவில் போராட்டத்தை அரசு அதிகாரிகள் கையில் எடுக்க வேண்டும் என்று மாநில முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ மன்னிப்பு கேட்கா விட்டால் பெரிய அளவில் கோட்டை மாவட்டத்தில் போராட்டம் வெடிக்கும் என அரசு அதிகாரிகள் மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒத்தை ஓட்டுக்கு கோடிகளை கேட்டு மிரட்டும் சுயேச்சையால் கோவையே அதிர்ந்து போய் இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றயத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில், 6 வார்டுகளில் தி.மு.க. அணி, 6 வார்டுகளில் அதிமுக. அணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க இரண்டு கட்சிகள் இடையே கடும் போட்டியாம். சுயேச்சை வேட்பாளர் எந்த பக்கம் சாய்கிறாரோ அந்த பக்கம்தான் தலைவர் பதவி என்பது உறுதியாகிவிட்டது. அதனால், இம்மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில், இந்த ஒரு ஒன்றியத்தில்தான், சுயேச்சை வேட்பாளருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவை பெற, ஆளும்கட்சியினர் தவமாய் தவமிருக்கின்றனர். ஆனால், அவரோ, அமைதிப்படை’’’’ சினிமாவில், சத்யராஜ் ரேஞ்ச்சுக்கு சென்றுவிட்டார். ஆனாலும், ஆளும்கட்சியினர் விடவில்லை. அவரது கையை பிடித்து, காலை பிடித்து, ஆதரவை பெற்றுவிட வேண்டும் என துடியாய் துடிக்கின்றனர். தற்போது, அவருக்கு துணை தலைவர் பதவியும், அரசு டெண்டரில் 50 சதவீதம் கமிஷனும் தருவதாக பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அவரோ, லட்சத்தை தாண்டி, கோடிக்கு சென்றுவிட்டார். இதனால், ஆளும் தரப்பு அதிர்ந்துபோய் உள்ளது... சூலூர் சட்டமன்ற தொகுதி மாஜி எம்.எல்.ஏ. மறைந்த கனகராஜ் மனைவி ரத்தினம் என்பவரை இந்த யூனியன் தலைவர் பதவியில் அமர வைத்துவிட வேண்டும் என ஆளும் தரப்பு காய் நகர்த்தி வருகிறது. ஆனால், கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறார் சுயேச்சை வேட்பாளர். வாழ்க ஜனநாயகம்... என்கிறார்கள் ஓட்டுபோட்டவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்