SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனவரி 11ம் தேதியை திகிலோடு எதிர்பார்க்கும் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-08@ 03:33:54

‘‘என்ன விக்கி ஜனவரி 11ம் தேதியை நினைத்து காக்கிகள் முதல் வருவாய், ஒன்றிய அதிகாரிகள் நடுங்குறாங்களாம்... சிலர் பொங்கலுக்கு பிறகு ஆபீசுக்கு வரலாமா என்று யோசிக்கிறாங்களாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்... ஜனவரி 11ம் தேதி தான் மறைமுக தேர்தல் நடக்க உள்ளது... ஏற்கனவே சென்சிடிவ்வான ஒன்றியங்கள்... உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்த வித்தியாசம்... தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள  ஒன்றியங்கள்... அதிக வருவாய் வரும் ஒன்றியங்கள், ஊராட்சிகள் போன்றவற்றில் தலைவர், துணைத் தலைவர் பதவியை பிடிக்க இலை தரப்பு பகீரத்தன முயற்சியில் இறங்கி இருக்கு... மற்றொருபுறம் அதன் கூட்டணியில் உள்ள மாம்பழமும்  தனக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் தலைவர் பதவியை பிடிக்க எந்த லெவலுக்கும் போக ரெடியாக இருக்காங்களாம்... இதுகுறித்த பட்டியலை இலையின் மாவட்ட செயலாளர்களும்... கூட்டணி தலைவர்களும் அனுப்பி இருக்காங்களாம்.  அதுக்கு அப்புறம் தனியாக பேசி இந்த இடத்தில் எல்லாம் நமக்கு வேண்டிய காக்கி அதிகாரிகளை டூட்டியில் போடுங்க... நமக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்தலில் பயன்படுத்துங்க... இது கவுரவ பிரச்னை... மக்கள்  ஓட்டுபோடவில்லையென்றாலும் சுயேச்சைகள் மற்றும் சிலரை விலைக்கு வாங்கியாவது நம்ம மாவட்டத்துல ஜெயித்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்காங்களாம்... அதை அப்படியே இலை தரப்பு வாய்மொழி உத்தரவாக தங்களுக்கு  வேண்டியவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள், காக்கி அதிகாரிகளுக்கு சொல்லிட்டாங்களாம்... ஆனால் இலை தரப்பு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் குறைந்த இடத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் அங்கேயும்  தலைவர் பதவியை ஆளும் அதிகாரத்தை கொண்டு கைப்பற்றப்போவதாக தகவல்கள் வந்துள்ளது... இது சில கவுன்சிலர்களுக்கு தெரியவர... அவர்களும் எச்சரிக்கையுடனும் ஆள் பலத்துடனும் ஜனவரி 11ம் தேதி தலைவர் தேர்தலுக்கு வர  இருக்காங்களாம்... மறைமுக தேர்தலில் எத்தனை சேர் பறக்குமோ... எத்தனை இடங்களில் சாலை மறியல், அடிதடி நடக்குமோ என்ற எண்ணத்தில் ஒன்றிய, கிராம அதிகாரிகளும், காக்கி உயரதிகாரிகளும் கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளதுடன்...  பொங்கலை காரணம் காட்டி ஜூனியர் அதிகாரிகளிடம் கூடுதல் ெபாறுப்பை ஒப்படைத்துவிட்டு எஸ்கேப் ஆகலாமா என்று நினைக்கிறார்களாம். ஆனால் தேர்தல் முடியும் வரை அங்கே இங்கே நகரக் கூடாது...நாங்கள் சொல்லும் வரை லீவ்  இல்லை என்று சொல்லிவிட்டார்களாம்... இதனால் பல அதிகாரிகள் பிரச்னைக்கு பயந்து அமைதி காத்து வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாநில அளவில் எங்களை நீங்க ஓரங்கட்டினீங்க... இப்போ நாங்க ஓரம் கட்டறோம் என்று கன்னியாகுமரி தாமரை கட்சியினர் கெத்து காட்டறாங்களாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 ஒன்றியங்களில் 111 வார்டுகள் உள்ளன. இதில் வெறும் 16 வார்டுகளில் மட்டும்தான் இலை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தாமரை 31 இடங்களை பிடித்துள்ளது. ஒப்பந்தத்தின்படி ராஜாக்கமங்கலம்  ஊராட்சி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் அதிமுகவுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இலை 4 வார்டில் ஜெயிச்சு இருக்கு. தாமரை 6 இடங்களை  பிடித்துள்ளது. கூட்டணி ஒப்பந்தப்படி தாமரை ஆதரவு கொடுத்து இலை கட்சியை சேர்ந்தவர் ஒன்றிய தலைவர் ஆக வேண்டும். ஆனால் தாமரையோ கூட்டணி ஒப்பந்தத்தை கடைபிடிக்க முடியாது. நாங்கள் 6 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளதால் தலைவர் பதவி எங்களுக்கு தான். அந்த கட்சியின் மாவட்ட பொருளாளருக்கு தான் தலைவர் சீட் என்று அடித்து கூறிவிட்டார்களாம். கூட்டணி பேச்சு வார்த்தையை மீறாதீர்கள் என்று இலை தரப்பு சொல்ல மாநிலத்தில் நீங்கள்  எங்களை மதிக்கல... இப்போது நாங்க ஏன் மதிக்கணும்னு இலை தரப்பு கோரிக்கையை நிராகரித்துவிட்டார்களாம். இலையை பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டாம்... சுயேச்சை, உதிரி கட்சிகளின் உதவியோடு நாங்கள் தலைவர் பதவியை  பிடிப்போம்னு தாமரை தரப்பு சவால் விட்டு இருக்காம்... இதனால ஜனவரி 11ம் தேதி வரை கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் இருக்கும்னு நினைச்ச தாமரை... தங்கள் ஆட்கள் மூலம் சுயேச்சைகளை கண்காணித்து வருகிறார்களாம்...’’  என்றார் விக்கியானந்தா.
‘‘உறுப்பினராக பதவியேற்பதிலேயே அட்ராசிட்டியா... என்று மக்கள் அதிர்ச்சி அடைந்தாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்... மாங்கனி மாவட்டத்தில் ஊராட்சிக்குழு கவுன்சிலர்களாக பதவியேற்க வந்த இலை கட்சியினர்   காட்டிய அட்ராசிட்டி, பார்ப்பவர்களை அதிர வைத்துவிட்டதாம். மொத்தமுள்ள 29 வார்டுகளில், 18 வார்டுகளை பிடிச்சிது இலைகட்சி. இந்த 18  வார்டு உறுப்பினர்களும் தங்களுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரில் தான்  வந்தாங்களாம். வரும் போதே ஆளுயர மாலையை கழுத்தில் போட்டிருந்தாங்களாம். அப்புறம் பட்டாசு, பலவிதமான இனிப்புகளை அள்ளி வீசி, பதவி ஏற்கும்  நாட்டாமை கட்டிடத்தையே அதிரவச்சிட்டாங்களாம். இவங்க தான், இப்படி என்றால் கூட்டணியில் 4 இடத்தில் ஜெயித்த மாம்பழமும், ஒரு இடத்தில் ஜெயித்த முரசும், தங்கள் பங்குக்கு பயங்கர பில்டப் கொடுத்தபடி வந்தாங்களாம்.  பதவியேற்புக்கே இப்படி என்றால், 11ம்தேதிக்கு மேல் என்னென்ன நடக்குமோ என்று மிரண்டு போனாங்களாம் அலுவலக ஊழியர்கள்...’’ என்று 11ம் தேதி நடக்க இருக்கும் கூத்துக்களை அதிகாரிகள் திகிலோடு எதிர்பார்ப்பதை சொன்னார் விக்கி  யானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்