SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளும்கட்சியின் முக்கிய புள்ளியோடு தொடர்பு வைத்து லட்சங்களை சுருட்டும் டாஸ்மாக் பெண் அதிகாரியை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-01-07@ 00:07:31

‘‘உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த விவகாரம் கட்சிக்குள்ளேயே பல குமுறல்களை ஏற்படுத்தியிருக்கு தெரியுமா...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அப்படியா... தெரியலையேப்பா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சொல்றேன்... கேளு... ராமநாதபுரம் மாவட்டத்துல உள்ள ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் தேர்வில் எக்கச்சக்கமாக பல லட்சங்கள் புழங்கியதாம்... மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற தோல்விக்கு, சீட்டுகளை விற்பனை செய்ததே முக்கிய காரணமென அதிமுகவினர் புலம்பி வருகின்றனராம்.... தேர்தலில் நிற்க முன்னாள் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், பாரம்பரிய அதிமுகவினர் என பலர் விரும்பினாங்களாம்.... அவர்களை எல்லாம் விட்டு விட்டு, ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.5 லட்சம், மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.10 லட்சம் என சீட்டை விற்றதாலதான் பெரும்பாலானோர் தோல்வி அடைந்ததாக, மாவட்ட அதிமுகவினரே வெளிப்படையாக பேசி வருகின்றனராம்... உதாரணத்திற்கு, மாவட்ட முக்கிய அதிமுக பிரமுகருக்கு வேண்டியவரான, ‘சர்ப்பம்’ பொருள்படும் பெயர் கொண்டவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனக்குரியதை விட்டு கொடுத்திருப்பதாக கூறி வசூல் வேட்டையில் இறங்கினாராம்... தேர்தலில் நிற்காமல் விட்டுக்கொடுத்தவர்களுக்கு பல லகரங்கள் கைமாறியதாம்... இதனால் ஏற்பட்ட உள்குத்து விவகாரத்தால் ஒரு ஒன்றிய கவுன்சிலைக் கூட பிடிக்கவில்லை என்ற புலம்பலும் அதிமுகவினரிடம் ஒங்கி ஒலிக்கிறதாம்... ‘வசூல்’ குறித்த ஆதார ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முக்கிய பிரமுகரின் எதிரணியினர் தலைமைக்கு எடுத்துச் சென்றுள்ளனராம்... இதில் சம்பந்தப்பட்டவர்களின் பதவிகளை பறிக்கும் வரை ஓயப்போவதில்லை என்ற சூளுரையோடு சிலர் சென்னைக்கே சென்று முகாமிட்டிருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘இருக்கிற வரை தட்டி எடுப்போம் என ஆளுங்கட்சி ஆளோட சேர்ந்து லட்சங்களை சுருட்டுதாமே ஒரு டாஸ்மாக் அதிகாரி’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விரிவாகவே சொல்றேன்.. கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளி ஒருவருக்கும், கோவை மண்டல டாஸ்மாக் பெண் அதிகாரிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த பெண் அதிகாரி ஆசியுடன் டாஸ்மாக் சரக்கு, கள்ளச்சந்தையில் களம் இறங்குகிறது. அத்துடன், கோவை-திருப்பூர், கோவை-ஈரோடு, கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள தாபா ஓட்டல்களை இந்த சரக்குகள் ஆக்கிரமிக்கின்றன. தாபா ஓட்டல்கள் பெரும்பாலானவற்றை இந்த ஆளும்கட்சி முக்கிய புள்ளிதான் நடத்துகிறார். இங்கு, சில்லிங் மது என்ற பெயரில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை தவிர, கள்ளச்சந்தையில் சரக்கு விற்றால் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரியே, இந்த விதிமீறலுக்கு துணை போகிறார். இதன்மூலம், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் வாரி சுருட்டுகிறார். ஆளும்கட்சி பிரமுகர் காட்டில் பெய்யும் மழை, இந்த பெண் அதிகாரி காட்டுலயும் ஜோரா பெய்யுது. எவ்வளவு நாளைக்கு நாம ஆட்சியிலயும், அதிகாரத்திலயும் இருப்போம்னு தெரியாது, இருக்கிற வரைக்கும் தட்டி எடுப்போம்.. என பலமாக கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளனர். எல்லாம் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம். காப்பாத்துப்பா ஈஸ்வரா... என்கிறார்கள் சில நியாயமான அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் உளறினாராமே ஒரு அமைச்சர்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உளறுவது அங்கே சகஜம்தானே.. நாகை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் வேதாரண்யம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் தவிர எல்லா ஊராட்சிகளிலும் திமுக அதிக இடங்களை கைப்பற்றியதால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் விரக்தியில் இருந்து வருகிறாராம். நாகையில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பல ஆண்டு காலமாக தைமாதம் முதல் நாளை பொங்கல் பண்டிகையாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது தை மாதம் கொண்டாடும் பொங்கலை சித்திரை மாதம் 1ம் தேதி கொண்டாடும்படி செய்தார். தமிழர்களின் மரபுபடி தை மாதம் முதல் நாளை தான் பொங்கல் விழாவாக கொண்டாடி வருவதால் தமிழர்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனால் அவரது திட்டம் பலிக்கவில்லை என்றார். இதை கேட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அமைச்சர் எல்லாவற்றையும் மாறி, மாறி பேசி உளறி வருகிறார். அவருக்கு என்னாச்சு என தெரியவில்லை என்றனர். மறைந்த திமுக தலைவர் கலைஞர் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழ் வருட பிறப்பை சித்திரை மாதம் 1ம் தேதியாக கொண்டாடி வருவதை தைமாதம் 1ம் தேதியாக கொண்டாட வேண்டும் என்று தான்கூறி அரசாணையை வெளியிட்டார். அந்த அரசாணையை இப்படி உளறிக்கொட்டி பேசுகிறாரே என அதிமுக தொண்டர்களே தலையில் அடித்துக்கொண்டனர்’’ என்றார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்