SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகர்ப்புற தேர்தலை தள்ளிப்போட தயாராக இருக்கும் தேர்தல் ஆணையம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-06@ 01:43:14

‘‘நான் கிளம்பறேன்... அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி...’’ என்றார் பீட்டர் மாமா.
‘கேள்...’’
‘‘நகர்ப்புற தேர்தல் எப்போது நடக்கும்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘என்னடா இன்னும் கேட்கலையன்னு நினைச்சேன்... இலை தரப்பு ரொம்பவே நொந்து போயிருக்காங்களாம்... ஆனால் அதை வெளியில் காட்டாமல் கிரிக்கெட் ஆடி வேதனையை மறக்க நினைக்கிறார்கள் என்று உள்ளுக்குள்ளேயே புகைச்சல் கிளம்பி உள்ளது. அதனால இப்போதைக்கு நகரப்புற தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. காரணம், பொங்கல் பண்டிகை, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, நீட் தேர்வு என்று வரிசை கட்டி நிற்கிறது. இதை காரணம் காட்டி ஜூன் மாதம் நடத்தலாம் என்று ஐடியா இருக்கிறதாம். இதையே சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி பெற வேண்டிய நிவாரணத்தை பெறலாம் என்பது ஐடியாவாம். காரணம் உள்ளாட்சி தேர்தல் தந்த மனவலி ஆற இன்னும் குறைந்தது இலை தரப்புக்கு ஐந்து மாதங்களாவது தேவையாம்... அதனால இப்போதைக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை மேலிட பார்வையாளர்கள் புலம்பியபடி போனாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தலைவர் இல்லாமல் தேர்தலை சந்தித்ததுதான் நம் தோல்விக்கு காரணம்... இலை தரப்பு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்காங்க... அவர்களிடம் நாம் கூட்டணி வைத்தபோதே தோல்வி உறுதியாகிவிட்டது என்று உள்ளாட்சி தேர்தலை பற்றியே பேசினாங்களாம். கடுப்பான மேலிடம் தலைவராக யாரை போடலாம் என்பதை பற்றி மட்டும் சொல்லுங்க... உங்க புதிய தலைவர் தேர்வாகி வந்து உங்கள் பிரச்னையை சொல்லுங்க தீர்த்து வைப்பார்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் கட்சியை பற்றிய மூச்சே காணோம்... என்னாச்சு....’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உள்ளாட்சி தேர்தலில் எப்டியும் ஜெயிக்கலாம் என்று பலரும் கடன் வாங்கி வாக்காளர்களுக்கு வாரி இறைத்தாங்க... தேர்தல்ல தோல்வி அடைந்ததால இப்போது பலரும் கடனாளியாகி தத்தளித்து வர்றாங்களாம்... இது குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டதற்கு ஊராட்சி தேர்தலுக்கு இப்படி புலம்பினா... உன்னை நம்பி எப்டி எம்எல்ஏ சீட் தருவது என்று கேட்கப்பட்டதாம்... இதுக்கே கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கேன்... எம்எல்ஏ தேர்தலில் தோற்று இருந்தால் ஊரைவிட்டே காலி செய்துட்டு போயிருப்பேன்... இனி வாங்கிய கடனை எப்டி அடைக்கப்போகிறோனோ என்று புலம்பியபடியே தோற்றுபோன கிப்ட் கட்சி வேட்பாளர்கள் புலம்பி வர்றாங்களாம்... மீறி கடனை அடைக்க ஏதாவது நிதியுதவி செய்யுங்க என்று கேட்டால்... இஷ்டம் இருந்தால் கட்சியில் இரு... இல்லாட்டி வேற கட்சிக்கு போறது பற்றி எங்களுக்கு கவலையில்லை... இப்போதைக்கு நாங்க யாருக்கும் கரன்சி கொடுக்க மாட்டோம் என்று கறாராக மேலிடத்தில் இருந்து பதில் வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘தேர்தல்ல தோற்றதுக்கு ஊரையை ஒருத்தர் காலி செய்துவிட்டு வேறு ஊரில் குடியேறப்போறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த குமரி மேற்கு மாவட்ட இலை கட்சியின் மீனவரணி நிர்வாகி, தூத்தூரில் மீனவர் கூட்டுறவு சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் 4 முறை ஊராட்சி தலைவர் தேர்தலில் தோற்று வெறுத்துபோயிட்டாராம். அதிர்ஷ்டம் இருக்குதா பார்க்கலாம்னு இந்த முறை தன் மனைவியை தூத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட செய்தார். அவரும் தோல்வியடைந்தார். அத்துடன் முன்சிறை ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இவரது ஏற்பாட்டில் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

இதனால் வெறுத்துப்போன அந்த இலை தரப்பு நிர்வாகிதான் இருக்கின்ற வாட்ஸ்அப் குரூப்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இனிமேல் தூத்தூர் பகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு உதவ மாட்டேன், தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்தால் விருப்பம் இருந்தால் செய்வேன். கூட்டுறவு சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன், ஊரைவிட்டே செல்கிறேன். வேறு இடத்தில் வீடுபார்த்து குடியிருக்க உள்ளேன்’ என தெரிவித்துள்ளார். ஊராட்சி தலைவர் தேர்தலில் மனைவி தோல்வி அடைந்ததால் இனிமேல் பொதுமக்களுக்கு உதவமாட்டேன் என இலை கட்சி நிர்வாகி பேசியதை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் மக்கள் திருதிருவென முழிக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டவர் யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மத்திய சிறையில் திருத்தணி கடவுள் பெயர் கொண்டவர் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெண்கள் சிறைக்கு மாற்று பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு பணியின்போது வேலை செய்யாமல் செல்போனில் கேம் விளையாடுவதும், செல்போனில் பேசி கொண்டும் இருப்பாராம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல ஆயுதப்படை பெண் போலீசார் வேலூர் பெண்கள் சிறைக்கு வந்தனர். அப்போது திருத்தணி பெயர் கொண்டவர் பெண் போலீசை கேலி செய்தாராம்...

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் போலீசார், ஜெயிலரிடம் புகார் மற்றும் எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளாராம். இதையடுத்து ஜெயிலரும், திருத்தணியை கூப்பிட்டு, சிறைக்கு வரும் பெண் போலீசை எப்படி கேலி செய்வாய் என்று கேள்வி கேட்டு வறுத்தெடுத்தாராம். இதையடுத்து நீண்ட நாட்களாக மாற்றுப்பணியில் இருப்பதாக கூறி திருத்தணியை வேலூர் மத்திய சிறைக்கு மீண்டும் பணி மாற்றம் செய்துள்ளார்களாம்...’’ என்று கூறிவிட்டு பீட்டருக்கு டாட்டா காட்டி அனுப்பினார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்