SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவியை பிடிக்க தேர்தலைவிட அதிகமாக பணத்தை இறைக்கும் இலை தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-05@ 01:46:24

‘‘தேர்தலுக்கு பிறகு பணத்துக்கு இறக்கை முளைச்சுடுச்சா என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்.. தேர்தலுக்கு அதிகாரம், பணம், ஆள் பலத்தை இறக்கினாங்க... ஆனால் மக்கள் மனசு மாறியதால ஓட்டு மாறிப்போச்சு... இதுக்கெல்லாம் டெல்லியில் இருந்து தாமரை கொடுக்கும் குடைச்சல் தான்னு தன் மகள் தோற்ற கோபத்தில் மாஜி அமைச்சர் ஒருவர் சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்தாராம்... அதை கேட்ட இலை கட்சி விவிஐபிக்களும் எங்களுக்கும் அது தெரியும்... நாடாளுமன்ற தேர்தல் சமயத்துல கொண்டு வந்த ஒரு மசோதாவால 39 தொகுதியை இழுந்தோம்... இப்போது கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால பாதிக்கு பாதி உள்ளாட்சியில் பதவிகளை இழந்து இருக்கோம்... இனியும் இப்படியே போனால் நம் கட்சி பெரிய பாதிப்பை சந்திக்கும்னு இலை வட்டாரத்தில் பேச்சாக இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நான் முதல்ல கேட்ட கேள்விக்கு பதிலே வரல...’’
‘‘உள்ளாட்சி தேர்தல்ல பணம், அரிசி மூட்டை, காமாட்சியம்மன் விளக்கு, குத்துவிளக்கு, சேலை என்று சொல்ல முடியாத பல பொருட்களை அள்ளி கொடுத்தும்... இலைக்கு பெரும் பின்னடைவு... இதனால தலைவர், துணைத் தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என்று இலை தரப்பு கங்கணம் கட்டிக் கொண்டு இருக்காங்க... அதற்காக தேர்தலுக்கு செலவு செய்ததைவிட பல மடங்கு பேரம் நடக்குது... குறிப்பாக மாங்கனி மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், எல்லா தகிடுதத்தங்களையும் செய்து, நம்ம இலைக்கட்சி  மாவட்ட ஊராட்சிக்குழுவில் அதிக வார்டுகளை பிடிச்சாச்சு.

அதனால தலைவர் போஸ்டிங் நம்ம கட்சிக்கு தான். இனி நம்மோட அடுத்த இலக்கு ஒன்றியக்குழு தலைவர் போஸ்டிங்கை எல்லாம் தக்க வைக்கிறது தான் என்று விவிஐபியின் நிழலானவரும், மைத்துனரும் ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்துறாங்களாம். இதில் ப வைட்டமின் முக்கியமா இருந்தாலும் பாசத்தையும் கொஞ்சம் சேத்து கொட்டுறாங்களாம். ஒரு சில ஒன்றியங்களில் சுயேச்சையாக ஜெயிச்சவங்களுக்கு ஸ்கெட்ச் போடும் போது, நம்ம கட்சிக்கு ஆதரவு குடுத்தா எல்லா காரியமும் நடக்கும். அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய தொகை கிடைக்கும்... விவிஐபி நம்ம ஊர்க்காரரு. எதையும் சாதிக்கலாம் என்று தூண்டில் போடுறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவை மாநகராட்சி மேட்டர் ஏதாவது இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவையில மாநகராட்சி மேட்டர் தவிர வேறு எதுவும் கேட்க மாட்டீங்களா... அந்த மாவட்டத்துல வேற எதுவுமே நடக்காதா என்ன... சரி சொல்றேன் கேளு... கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்துல ஒரு ஊழியர் நீண்ட நாட்களாக பணியில் இருக்கிறார். இவர், இங்குள்ள உயர் அதிகாரிகளை எல்லா விஷயத்துலேயும் தூக்கி சாப்பிடுறார். இந்த மண்டலத்துக்கு வரும் விண்ணப்பங்களை எல்லாம் இவர்தான் பிரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் டேபிளுக்கு அனுப்புகிறார்.

உதாரணமாக, கட்டிட வரைபட அனுமதி என்றால் 25 ஆயிரம் ரூபாய், புதிய குடிநீர் இணைப்பு என்றால் 20 ஆயிரம் ரூபாய், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் என்றால் 15 ஆயிரம் ரூபாய் என பட்டியல் போட்டு, வசூல் தட்டி எடுக்கிறார். யாராச்சும் மேலதிகாரிகிட்ட புகார் செஞ்சா போதும், கொதித்து எழுந்துவிடுகிறார். விண்ணப்பம் பரிசீலனை என்ற பெயரில் ஏதாச்சும் குறை கண்டுபிடித்து, கொக்கி போட்டு இழுத்து விடுகிறாராம்.. தாமதத்துக்கு பயந்து யாரும் புகார் கொடுக்காமல் புலம்பலோடு பணத்தை கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விருது வாங்கற மாவட்டத்தை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘விருதுநகர் மாவட்டத்துல காராச்சேவுக்கு பெயர் பெற்ற சாத்தூரில் ஒரு தெப்பக்குளம் இருக்கு. இந்த குளத்துல மழைநீரை சேகரிக்க ₹3 கோடி ஒதுக்கி இருக்காங்க. இதுதான் விருதுநகர் வாசிகளை வியக்க வைத்திருக்காம். காரணம் என்ன என்று விசாரித்தால், 3 கோடியில கால்வாசி பணம் இருந்தாலே இந்த தெப்பக்குளத்தில் மழைநீர் சேமிப்பை முழுமையாக முடிச்சு, மிச்சப்பணம் கையிலிருக்குமாம்... இந்த சிவன் கோயில் தெப்பத்தில் மழைநீரை சேகரிக்க கோயிலைச் சுற்றியும், சாத்தூர் முக்குராந்தல் ஆகிய பகுதிகளில் இருந்தும் பைப்கள் அமைத்து, பிறகு சாலை அமைக்கணும்... இப்பணியை எடுத்துச் செய்து, பலருக்கும் கமிஷன்கள் வழங்கி இதன்மூலம் கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பதற்கு நடத்தப்படுகிறது என பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ நாங்க கொடுத்துதான் பழக்கம்... இருந்தாலும் நெல்லையில வாங்க வேண்டி இருக்குனு அமைச்சர் ஒருத்தர் சொன்னாராமே, அது என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் ஒருத்தர் கலந்து கொண்டார். விழா முடிந்து வெளியே வந்த அமைச்சரின் காரை சூழ்ந்து கொண்டு இலை தரப்பினர் ஒவ்வொருவராக சிறிய மற்றும் பெரிய பைகளை தங்கள் சக்திக்கு ஏற்ப கொடுத்தாங்களாம்... அதை ஆசையோடு வாங்கிய அமைச்சர் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் கொடுங்க... கொடுங்க என்று கேட்டு வாங்கி காரில் வைத்து கொண்டாராம். அமைச்சரும் பையை மறைத்து சால்வை வாங்குவதுபோல் பையை வாங்கினாராம்.

கடைசியில் கார் ஏறிய அமைச்சரிடம் பெண் எம்பி ஒருவரும் பையை நீட்ட, அதையும் அமைச்சர் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார். இதை பார்த்து கொண்டிருந்த முக்கிய நிர்வாகி ஒருத்தர் அண்ணே கோவிச்சுக்காதீங்க... நம்ம மாவட்டத்துல அல்வா தான் ஸ்பெஷல்... அதுதான் நம்ம பாசக்கார பசங்க கொடுத்து இருக்காங்கனு சொன்னாராம்... அதை கேட்ட அமைச்சர் நல்ல மாவட்டம்யா இது... நாங்க தான் எல்லோருக்கும் இப்போ வா... அப்போ வான்னு அல்வா கொடுப்போம்... ஆனால் நெல்லை ஆளுங்க அல்வா கொடுத்தே காரியத்தை சாதிச்சுடறாங்க, என அமைச்சர் கூற அனைவரும் சிரித்து விட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்