SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘போர்’கோலம்!

2019-12-31@ 05:23:41

ஜனநாயகம் என்ற பலமான கட்டமைப்பின் அடித்தளமாக இருப்பது கருத்துரிமை. அந்த கருத்துரிமையின் மீதான தாக்குதல், ஜனநாயக கோட்பாடுகளின் மீதான துல்லியத் தாக்குதலுக்கு சமம். துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் நடக்கிற சமீபத்திய நிகழ்வுகள் அனைத்துமே, கருத்துரிமை மற்றும் அது தாங்கி நிறுத்தியிருக்கிற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உரிமை கோரி நடந்த பல்வேறு போராட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த பெருமை நம் மாநிலத்துக்கு உண்டு. போராட்டங்களின் வாயிலாகவே, பல்வேறு உரிமைகளை வென்றெடுத்த வரலாறும் நமக்குண்டு. அந்த வகையில் தமிழகத்திலும் களம் சூடுபிடித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னை, பெசன்ட்நகர் பகுதியில் கோலம் போட்டு வித்தியாசமான முறையில் எதிர்ப்புத் தெரிவித்த 5 பெண்கள் உள்பட 8 பேரை தமிழக அரசு கைது செய்த சம்பவம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யார் மனதையும் புண்படுத்தாமல், எவருக்கும் இடையூறும் இல்லாமல், நாகரீகமான முறையில் தங்கள் எதிர்ப்ைப கோலம் மூலம் பதிவு செய்தது அவ்வளவு பெரிய குற்றமா என்கிற கேள்வி பொதுவெளியில் எழும்பியிருப்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

போலீஸ் இவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றது பெரும் கண்டனங்களை எழுப்பியது. இவர்கள் விடுவிக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் இந்த ‘போர்’கோலங்கள் சாலைகளில் வரையப்பட்டு பெண்களே போர்க்கொடி தூக்கி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூட, தென்தமிழகத்துப் பெண்கள் தங்கள் வாழ்வியலுடன் கலந்தது ஜல்லிக்கட்டு என்பதை விளக்கும் வண்ணம், வீட்டு வாசல்களில் கோலமிட்டு கருத்து பதிவு செய்திருந்தனர். கோலங்கள் என்பவை, சாமானிய மக்கள் தீட்டுகிற கேலிச் சித்திரங்கள். அதையும் ஒடுக்க நினைப்பது, சகிப்புத்தன்மையின்மையின் வெளிப்பாடு.

மத்திய அரசின் இந்தச் சட்டங்களை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் இன்ைறக்கு மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொது விவாதத்திற்கு உட்படுத்துகின்றனர். ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்றான கருத்து சுதந்திரம் மூலம்  மக்கள் நியாயம் கேட்கின்றனர். கோலமிட்டவர்கள் கைது செய்யப்பட்ட
சம்பவம், இரு கேள்விகளை எழுப்புகிறது. இந்த நடவடிக்கை மூலம், தமிழக அரசு யாரை திருப்தி செய்ய ஆசைப்படுகிறது? எதிர்கருத்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த அரசு என்ன செய்தியை சொல்ல விரும்புகிறது? ஒரு கருத்தை கொண்டிருப்பது மட்டுமல்ல, அதை வெளிப்படுத்தும்
உரிமையும் வழங்குவதே உண்மையான ஜனநாயகம். அதை ஒடுக்க இந்த மண்ணில் இதற்கு முன் நடந்த எத்தனையோ முயற்சிகள், நீரிலிட்ட கோலம் போல நிலையாமல் போயிருப்பது வரலாறு!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்