SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளறுபடி நீடிக்கலாமா?

2019-12-29@ 00:43:01

சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி முறை கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அவசர கதியில் அமல்படுத்தியது முதல் தற்போது வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் வசூல் ஆகியவற்றில் குளறுபடி தொடர்கிறது. இதனால், ஒருபுறம் அரசுக்கு வரி வசூல் குறைந்துள்ளது. மறுபுறம் பொதுமக்களும் வரி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்திய பின்னர், நிதி இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது என்ற உடன்பாட்டின்படி, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல் இலக்கு எட்டினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் ஆனால், 8 மாதங்கள் மட்டுமே இந்த அளவுக்கு வசூல் ஆனது. வசூல் குறைந்ததால் பல மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

இதற்கென சமீபத்தில் கணிசமான தொகை ஒதுக்கியும், இன்னும் 63,000 கோடி பாக்கி உள்ளது. இந்த பிரச்னைகள் அரசுகளின் பக்கம் இருந்தால், வரி செலுத்தும் பெரிய நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள் என்று அனைத்து தரப்பினரும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான கணக்கு தாக்கல் செய்வதில் குளறுபடிகள் நீடிப்பதால் லட்சக்கணக்கானோர் கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளனர். இந்நிலையில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் சொத்து பறிமுதல் உள்பட வங்கி கணக்கு முடக்கம் வரையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறைமுக வரிகள் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கூடுதலாக செலுத்திய ஜிஎஸ்டி வரியை நிறுவனங்கள், வர்த்தகர்கள் கணக்கு தாக்கலுக்கு பின்னர் உரிய காலத்தில் ரீபண்ட் செய்வதற்கும் ஜிஎஸ்டி வரி வசூல் நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால், ரீபண்ட் பெற முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர். இந்த குளறுபடியையும் இன்னும் சரி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து செலுத்தும் வகையில் குறைவாகவும் சில அடுக்குகளாகவும் இருக்க வேண்டும். அதையும் ஜிஎஸ்டி கவுன்சில் செய்யவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சீர் செய்வதோடு வரி குறைப்பு நடவடிக்கையையும் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் செய்தால், வரி வசூல் அதிகரிக்கும் பொதுமக்களும் பிரச்னைகள் இன்றி வரி செலுத்துவார்கள். இதை ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்