SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறுகண்ணில் சுண்ணாம்பு

2019-12-24@ 05:17:06

இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிற நிலையில் இன்று கிராமங்கள் இல்லை. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள், விவாசாயத் தொழிலை விட்டு வெளியேறி உள்ளனர். இன்றைய தேதியில், ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வதாக அரசின் அறிக்கை கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 940 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்றைய மக்கள் தொகையில் எட்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் காப்பதற்கான உருப்படியான திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. இதன் காரணமாக விளைநிலங்கள், விலைநிலங்களாகி வருகின்றன. இந்த ஆண்டாவது மழை பொழியாதா,  விவசாயம்  செழித்து விடாதா என வங்கிகளிடம் கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்  தொழிலாளர்கள். அவர்களின் கடனை  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்தியா  முழுவதும் விவசாய சங்கங்களும்,  விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் போராடி வருகின்றன. ஏனெனில், உலகம் செழிக்க  உணவு தேவை. அதை தருவது விவசாயி தான்.

இந்த நிலையில், தற்போது மத்திய  அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, விவசாயிகள் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியுள்ளது. விவசாயிகள் பெறும் நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தை முற்றிலும் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே 11 சதவீத வட்டியில் 4 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்கி வந்தது. அதாவது 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கப் பெற்றது. தற்போது இதை உயர்த்தி குறைந்தபட்ச வட்டி 9.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு, அவர்களுக்கு வங்கிக்கடன் வசதி, கடன் தள்ளுபடியையும் செய்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் பெருமுதலாளிகளிடம் இருந்து வங்கிகளுக்கு வரவேண்டிய 5 லட்சம் கோடி வராக்கடனை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு நகைக்கடனில் வட்டியில் கூட சலுகை காட்ட மறுக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 22 பேரின் 76 ஆயிரத்து 600 கோடி வராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 கோடிக்கும் மேல் கடன் வாங்கியவர்கள் 94 பேர். இதில் 27 ஆயிரத்து 24 கோடியை அந்த வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இப்படி கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை வராக்கடனாக பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தானம் செய்யும் மத்திய அரசு, ஏழை, எளிய விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் வட்டியை உயர்த்தி அவர்கள் வயிற்றில் அடிக்கிறது. விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் வட்டிமானியம் ரத்து மற்றும் விவசாய கடன் வட்டி உயர்வு உத்தரவை உடனே திரும்பப் பெறவேண்டும். அதற்காக, தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து, விவசாயிகளைக் காக்க முன் வரவேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்