SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உண்மை என்ன?

2019-12-22@ 01:10:11

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இந்த போராட்டத்தில் சில மாநிலங்களில் வன்முறை தலைதூக்கியுள்ளது. இதனால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர் போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து கல்லூரிகளை 2 வாரம் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது, நாட்டில் தற்போது நிலவும் பதற்றமான நிகழ்வுகள். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பொருளாதாரம் மந்தநிலையில் தடுமாறி வருகிறது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டியதூரம் வரையில் இல்லை என்கின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், ‘‘மந்த நிலையை தாங்கும் திறன் இந்திய பொருளாதாரத்துக்கு உள்ளது. விரைவில் வளர்ச்சி பாதைக்கு நாடு திரும்பும், அதிக முதலீடுகள் செய்ய தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்,’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. “இந்திய பொருளாதாரம், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் நிலையில் உள்ளது’ என்று எச்சரித்துள்ளார் பிரதமரின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம். இந்திய பொருளாதாரம் குறித்து பல பொருளாதார நிபுணர்கள், சர்வதேச நிறுவனங்களின் கருத்துக்கள் பலவிதமாக இருந்தாலும், இந்திய பொருளாதாரம் இன்னும் சரியும் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

ஆனால், பிரதமரின் பேச்சோ வேறுவிதமாக உள்ளது. “நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து நடைபெறும் விவாதங்கள் பற்றி நான் முழுவதும் அறிவேன். முந்தைய ஐ.மு.கூட்டணி ஆட்சியிலும் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதம் வரையும், பணவீக்கம் 9.4 சதவீதம் வரையும், நிதிப்பற்றாக்குறை ஜிடிபி.யில் 5.6 சதவீதம் வரை குறைந்தது. பொருளாதாரத்தில் இது போன்ற ஏற்ற, இறக்கங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து வெளிவரும் திறன் நமது நாட்டுக்கு உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சில பிரச்னைகளில் இருந்து நம்மால் மீண்டு வர முடியும் அதனால், எந்தவித பயமும் வேண்டாம். அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உறுதியாக அதற்கு பலன்கிடைக்கும் முன்னேறுவோம் என்கிறார் பிரதமர் மோடி.

எல்லாம் சரி, உண்மை நிலவரம் என்ன? தொழில்கள் முடங்கியுள்ளன. வேலையில்லாத நிலை அதிகரித்துள்ளது. கடன் கொடுக்க முடியாத நிலையில் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தடுமாறியுள்ளன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் விலைவாசியும் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கோபத்தை மக்கள் ஏதாவது போராட்டம் என்றால் அதில் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு, பொருளாதார உண்மை நிலவரம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்போதுதான் பிப்ரவரி பட்ஜெட் தாக்கலின்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான யோசனைகளை பகிர முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்