மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங். கூட்டணி ஆட்சி உத்தவ் தாக்கரேக்கு முதல்வர் பதவி
2019-11-23@ 00:08:50

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி விரைவில் பதவியேற்கிறது. இந்த புதிய கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க நேற்று நடைபெற்ற மூன்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. பல கட்ட பேச்சுகள் நடந்தன.
நேற்றுக் காலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தென் மும்பையில் உள்ள நேரு சென்டர் அரங்கில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கூட்டணி இறுதி செய்யப்பட்டது. முதல்வர் பதவியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சம்மதித்தன. முதல்வராக உத்தவ் தாக்கரே பெயரை சரத் பவார் பரிந்துரைத்தார். இதனை மூன்று கட்சித் தலைவர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சரத் பவார், உத்தவ் தாக்கரேயைத் தவிர சிவசேனா தரப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவுத், காங்கிரஸ் தரப்பில் மேலிடப் பொறுப்பாளர்கள் அகமத் பட்டேல், மல்லிகார்ஜூன் கார்கே, கே.சி.வேணுகோபால், அவினாஷ் பட்டேல், மாநிலத் தலைவர்கள் பாலாசாகேப் தோரத், பிருத்விராஜ் சவான், மாணிக்ராவ் தாக்கரே தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல், ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே, ‘‘ உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று ஒத்தக்கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார். சரத் பவார் கூறுகையில், ‘‘நாங்கள் வகுத்துள்ள குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்திருக்கிறார்’’ என்றார். மூன்று கட்சித் தலைவர்களும் இன்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் பேச்சு தொடரும்
முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவான் கூறுகையில், ‘‘ இன்னும் சில பிரச்னைகள் இருக்கின்றன. அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நாளை (இன்று) மூன்று கட்சித் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்,’’ என்றார்.
6 மாதங்கள் கூட நீடிக்காது
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில், ‘‘முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைத்திருப்பது அரசியல் சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த அரசு 6 முதல் 8 மாதம் வரை கூட நீடிக்காது,’’ என்றார்.
அமித்ஷாவை மிஞ்சிய சரத் பவார்
பா.ஜனதா பெற்ற வெற்றிகளுக்கு அமித் ஷா காரணமாக இருந்துள்ளதாக கூறி அவரை அரசியல் சாணக்கியர் என்றே பலரும் அழைக்கிறார்கள். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சரத் பவார் இறுதியில் இந்திய அரசியலில் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவரையும் மிஞ்சி விட்டார்,’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திமொழி கற்பிக்கப்படாது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள நாடு முழுவதும் பாஜகவை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்: சென்னை திரும்பிய ப.சிதம்பரம் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிட முடிவு: பாஜ கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல், மூன்று கட்சிகள் கழற்றிவிடப்பட்டன
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நிதி: தயாநிதிமாறன்
தமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்