SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் 7 ஆண்டுகளுக்கு முன் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட காதல் மனைவி உடல் எங்கே?..கணவர் அடையாளம் காட்டிய இடத்தில் இல்லாததால் அதிர்ச்சி

2019-11-21@ 20:06:51

நெல்லை: நெல்லையில் 7 ஆண்டுக்கு முன் காதல் மனைவியை  கொன்று புதைத்த வழக்கில் போலீசார் காதல் கணவன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று உடலை பொக்லைன் மூலம் தோண்டினர். ஆனால் அங்கு எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களிடம் மீண்டும் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் போலீசார் கடந்த 5ம்தேதி கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக டவுனை சேர்ந்த மணிகண்டன் (20), ராமையன்பட்டி ஆசீர்செல்வம் (32) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 2012ம் ஆண்டு  இவரது நண்பரான சிவா(32) அவரது காதல் மனைவி புஷ்பா(30) என்பவரை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றதாகவும் உடலை தச்சநல்லூர் குருநாதன் கோயில் பகுதியில் புதைத்தாகவும் தெரிவித்தனர். இதையொட்டி மணிகண்டன், ஆசீர்செல்வம் கைது செய்யப்பட்டனர். காதல் கணவன் சிவா தலைமறைவாகி விட்டார். கைதான அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்திப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை நடந்த இடம் தச்சநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், தச்சநல்லூர் போலீசார், மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தலைமறைவான சிவாவும் இங்கு வரவே அவரையும் போலீசார் பிடித்தனர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் இன்று காலை புஷ்பா, புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்றனர். டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. காதல் மனைவி கொலை வழக்கில் சிக்கிய சிவா யார், இவர்கள் காதல் எப்படி மலர்ந்தது? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சிவாவின் முழுப்பெயர் சிவக்குமார் என்ற சிவா(36). இவரது தந்தை சேகர். சொந்த ஊர் சேரன்மகாதேவி சக்திகுளம் செண்பகவல்லி காலனியாகும். சிவா சந்திப்பில் உள்ள ஒரு தனியார் நிறுனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிவா தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தபோதிலும் போதிய வருமானம் இல்லாததால் ஆட்டோவும் ஓட்டி வந்தார்.

இவர் வேலைபார்த்து வந்த நிறுவனம் அருகில் பீடிக்கம்பெனி குடோன் உள்ளது. அங்கு பாளை ரெட்டியார்பட்டியைச்சேர்ந்த புஷ்பா என்பவர் பீடிகளை கொடுத்து செல்வார். அடிக்கடி அவர் வந்தபோது புஷ்பாவிற்கும் சிவாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தனர். தான் திருமணமாகாதவன், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறியதால் ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வந்த புஷ்பாவிற்கு அது சரி என்று பட்டது. இதைத்தொடர்ந்து புஷ்பாவை ரகசியமாக திருமணம் செய்த சிவா, டவுனில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு குடிவைத்தார். காதல் மனைவியுடன் அவர் குடும்பம் நடத்தி வந்தபோதிலும், முதல் மனைவிக்கு சந்தேகம் வராதபடி அங்கும் அடிக்கடி சென்று வருவார். இப்படி சிவாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தபோதுதான், காதல் மனைவி புஷ்பாவிற்கு  தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அடிக்கடி மனைவி டார்ச்சர் செய்ததால், சிவாவிற்கு புஷ்பாமீது வெறுப்பு ஏற்பட்டது. இதனால் காதல் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதற்காக தனது நண்பர்கள் மணிகண்டன், ஆசீர்செல்வம் உதவியை நாடினார். இவரது திட்டத்திற்கு அவர்களும் உடன்பட்டனர். இதையொட்டி புஷ்பாவை சிவா தந்திரமாக வெளியே அழைத்துவந்து தச்சநல்லூர் பகுதிக்கு அழைத்து வந்தார். இதனால் சந்தேகப்பட்ட புஷ்பா, என்னை ஏன் இங்கு கூட்டி வந்தீர்கள் என கணவரிடம் கேட்கவே, அதற்கு அவர், எனது நண்பர்களுக்கு உன்னை பற்றி தெரியாததால் பார்க்க வேண்டும் என்றார்கள். அதனால்தான் கூட்டிவந்தேன் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். அங்கு சிவா மற்றும் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தநிலையில் திடீரென்று புஷ்பாவை அவர்கள் கீழே தள்ளினர். அவர் திமிறியும் ஒருவர் பின் ஒருவரா பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. புஷ்பா கூச்சல்போடவே, அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது. இதை உறுதி செய்த 3 பேரும், புஷ்பா உடலை ரகசியமாக புதைத்து விட்டால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என கருதி அப்பகுதியில் புதைத்து விட்டனர். இந்த சம்பவம் 2012ல் நடந்தது.

சம்பவத்திற்கு பிறகு நண்பர்கள் இருவரும் ஊரில் இருக்க, சிவா மட்டும் மும்பை சென்று விட்டார். வீட்டில் மனைவி கேட்டதற்கு, இங்கு சரியாக வருமானம் இல்லை. அதனால் மும்பை செல்கிறேன் என கூறிச்சென்றார். அங்கு போன இடத்தில் அங்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடமும் நான் கட்டை பிரமச்சாரி, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை காட்டியதால் அந்த பெண்ணும் இவரது பேச்சில் மயங்கினார். அவருடன் சிவா குடும்பம் நடத்தி வந்தார். அவர் மூலம் இரு குழந்தைகள் வேறு உள்ளனர். மும்பையில் கள்ளக்காதலியுடன் சிவா குடும்பம் நடத்தி வந்தபோதும் ஊரில் உள்ள மனைவிக்கு மாதம்தோறும் பணம் அனுப்ப தவறுவதில்லை. இதனால் இங்கு யாருக்கும் அவரைப்பற்றி சந்தேகம் வரவில்லை.

இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன் ஊரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சிவா இங்கு வந்துள்ளார். இதை மோப்பம் பிடித்த போலீசார் அவரை தூக்கினர். இதைத்தொடர்ந்து இன்று காலை ஏற்கனவே கைதான மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை அழைத்து வந்து புஷ்பா உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டச்செய்தனர். அதன்பிறகு புஷ்பாவின் கணவர் சிவாவை அழைத்து வந்து அவரையும் அடையாளம் காட்ட சொன்னார்கள். அவர்கள் சொன்ன இடத்தில் பொக்லைன் மூலம் ஆழமாக குழி தோண்டினார்கள். ஆனால் புஷ்பா உடல் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிவா மற்றும் இருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை மிரட்டல் வழக்கில் மணிகண்டன், ஆசீர்செல்வம் பிடிபட்டததால் தான் பயங்கர தகவல்கள் வெளி வந்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • deepam-5

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

 • 06-12-2019

  06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • cambodiyaa_insects1

  கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

 • saxophomne_chinaaa

  40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

 • jayalalitha_admk11

  இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்