SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வருக்கு எதிராக நடந்த ரகசிய கூட்டம் பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-11-15@ 00:45:14

‘‘புதுவையில் முதல்வருக்கு எதிராக ரகசிய கூட்டம் நடந்ததா சொல்றாங்களே.. அது என்ன விஷயம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘புதுச்சேரியில் கிரண்பேடியை சமாளிக்க  ஓருபக்கம் முதல்வர் போராடிக்கொண்டிருக்கிற நேரத்தில், சொந்த கட்சிக்காரர்களை சமாளிக்கவே பெரும்பாடாக இருக்கிறதாம். நியமன எம்எல்ஏக்களை ஆளும் அரசு பரிந்துரை செய்யாததால், பாஜகவே மூன்று நியமன எம்எல்ஏக்களை போட்டுவிட்டனர். கட்சிக்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து கடைசியில் ஏமாந்து போனார்கள். சரி வாரியமாவது கிடைக்குமா என ஏக்கத்தோடு முதல்வர், கட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.  மேலிடத்துக்கு பட்டியலை அனுப்பி விட்டதாக கூறி வந்தனர். ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல்வாஸ்னிக்கை நேரில் சந்தித்த கட்சிக்காரர்கள், வாரியத்தலைவர் பதவியை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென கூற, அப்படி ஒரு பட்டியலே இல்லையென ஒரு போடு போட்டார். இதனால் வாரியத்தை எதிர்பார்த்து இலவுகாத்த கிளிகள் கடும் கோபமடைந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்து ரகசியகூட்டம் போட்டு வந்தனர். இனிமேல் உள்ளூர் அரசியலை நம்பினால் கிடைக்காது. நேரடியாக கட்சி தலைமையை சந்தித்து வலியுறுத்துவோம் என முடிவெடுத்து டெல்லிக்கு டிக்கெட் போட பட்டியல் தயார் செய்திருக்கின்றனர். ஆனால் இதில் சிலர் கடைசி நேரத்தில் வரவில்லை என ஜகா வாங்கியதோடு, ரகசிய கூட்ட முடிவுகளை போட்டுக்கொடுத்துவிட்டனர். இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டதாம். ஆளுக்கொரு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், வாரியம் கிடைக்காது போலிருக்கிறது என புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மஞ்சள் நகர மாநகராட்சியில் 4 உதவி ஆணையாளர்கள் கோலோச்சுறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. இவர்களை ஆணையாளர்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகார செல்வாக்கில் உள்ளனர். காரணம், மேலிடம் முழு சப்போர்ட். இம்மாநகராட்சி உதயமான நாள் முதல் இவர்கள் இங்கேயே பணிபுரிகின்றனர். துவக்கத்தில் சாதாரண ஊழியராக இருந்த இவர்கள், படிப்படியாக பதவி உயர்வுபெற்று, இன்று உதவி ஆணையாளர்களாக பணிபுரிகிறார்கள். வழக்கமாக, ஒரு அதிகாரி 3 ஆண்டுக்கு மேல் ஒரு இடத்தில் பணிபுரியக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், இவர்கள் நங்கூரம் போட்டதுபோல் இங்கேயே பணியாற்றி வருகின்றனர். டிரான்ஸ்பர் என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு, இங்கேயே கோலோச்சி வருகின்றனர். இந்த 4 ஏ.சி.க்களும் இம்மாநகராட்சியை விட்டு வெளியே போனதே இல்லை. அதிகபட்சம் இதே மாநகராட்சியில் மண்டலம் விட்டு மண்டலம் மட்டும்தான் மாறியிருக்கிறார்கள். மாநகராட்சியில் உபரி வருமானத்திற்கான அத்தனை வழிமுறைகளும் இவர்களுக்கு அத்துபடியாம். இதுல, விஜயமான அதிகாரிதான் டாப்ல இருக்கிறாராம். 2006-க்கு பிறகு 4 ஏ.சி.க்களின் அயராத உழைப்பால், இவர்களது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்கு. இந்த பேச்சுதான் மஞ்சள் மாவட்டம் முழுவதும் உலாவுகிறது. இந்த 4 பேரையும் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி கமிஷனர் விழிபிதுங்கி நிற்கிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி எம்எல்ஏக்கு உதவப்போய் மாட்டிக்கிட்டாங்களாமே மாநகராட்சி அதிகாரிகள்..’’ ‘‘நெல்லை மாநகராட்சியில் குப்பை அள்ளும் டிப்பர் லாரி ஒன்று, எல்லை தாண்டி கடந்த 11ம் தேதி கல்லிடைக்குறிச்சி - அம்பை சாலையில் விபத்துக்குள்ளானது. கல்லிடைக்குறிச்சி போலீசார் ஓடிச் சென்று லாரியை பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைத்தனர். தாங்கள் பறிமுதல் செய்தது மாநகராட்சி லாரி என தெரிய வர, போலீசார் விசாரணை தொடங்கியது. எல்லை தாண்டி இப்படி போயி விபத்துல சிக்கிட்டாங்களே என அலறியடித்த நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வார்டு எண் அலகு 1ல் திடக்கழிவு மேலாண்மைக்கு செயல்படும் டிப்பர் லாரியையும், அதனை ஓட்டிச் சென்ற பசுமை சுகாதாரக்குழு ஊழியர் சண்முகவேலையும் கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை என புகார் அளித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் மாநகராட்சி அதிகாரிகளை திடுக்கிட வைத்தது. அம்பை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் நெல்லை டவுனில் தனக்கு வேண்டிய ஒரு சுகாதார அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு, நெல்லை மாநகராட்சியின் பசுமை உரத்தை தங்கள் பகுதி வயல்களுக்கு கேட்டுள்ளார். பணி நேரம் முடிந்த பிறகு இரவு நேரங்களில் டிப்பர் லாரியில் பசுமை உரம் ஆளும்கட்சி பிரமுகரின் வயல்களுக்கு சென்றுள்ளது. இம்முறையும் உரத்தை தட்டிவிட்டு லாரி திரும்புகையில், கல்லிடைக்குறிச்சியில் விபத்தில் சிக்கியது. மாநகராட்சி அதிகாரிகள் இவ்வழக்கை எப்படி முடிப்பது என செய்வதறியாது விழிக்கின்றனர். எல்லாம் அந்த முருகன் செயல். இந்த வழக்கில் இருந்து எங்களை காப்பாத்துப்பா என நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் கும்பிடாத கோயில் இல்லை’’ என்றார் விக்கியானந்தா.

'மாநில தேர்தல் ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்ட கதை தெரியுமா' என்றார் பீட்டர் மாமா 'தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. தேர்தல் அறிவிப்பை நவம்பர் மாத இறுதியில் வெளியிட்டு டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பதவியை பேரூராட்சி இயக்குநர் கூடுதலாக கவனித்து வந்ததால் அந்த பதவிக்கு நிரந்தரமாக ஒரு அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி அடங்கியுள்ள மாவட்டத்தின் ஆட்சியர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சிக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் ெவற்றி பெற முழு ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தால் அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது' என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்