SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7வது நாளாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: இன்னும் பரவ வாய்ப்பு

2019-11-11@ 05:26:52

சென்னை: சென்னையில் தொடர்ந்து ஏழாவது நாளாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறது. இந்த காற்று மாசு காரணமாக இதயம், நுரையீரல், ஆஸ்துமா போன்ற உடல் பாதிப்பு ஏற்படும் என்று  டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்த காற்று மாசு காரணமாக அங்கு வாழும் மூன்றரை கோடி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லியை போன்று லக்னோ, நொய்டா, ஜபல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மோசமான நிலையில் உள்ளது. இந்த காற்று மாசு வட மாநிலங்களை மட்டுமின்றி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தற்போது, தமிழகத்தில் வடக்கில் இருந்து  காற்று வீசுவதால் அங்குள்ள மாசுக்கள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் கடந்த 3ம் தேதி முதல் பனியும், புகையும் சேர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னையில் காற்று மாசு டெல்லியை காட்டிலும் அதிகமாக காணப்பட்டது. இவ்வாறு காற்று மாசு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு தொடர்ந்து  அதிகரித்து வரும் நிலையில் டெல்லியை போன்ற நடவடிக்கை சென்னையில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, டெல்லியில் வாகனங்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனங்களும்  ஒரு நாளும், இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு அதிகமானதையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவசியம் கருதி வெளியில் வருபவர்கள் முக கவசம் அணிந்து வரவும் அறிவுரை வழங்கியுள்ளது.  மேலும், காற்று மாசு துகள்கள் பரவுவதை தடுக்க சாலையோரம் உள்ள மரங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு கட்டுப்பாடுகளையும், பொதுமக்களுக்கு அறிவுரைகளையும் டெல்லி அரசு  வழங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு சென்னையில் அதிகரித்து  வரும் காற்று மாசு குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், செயலாளர்கள் காற்று மாசு இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.  ஆனால்  சென்னையில் அரசு காற்றுமாசு படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதனால் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறதே தவிர குறைந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் தமிழக அரசு காற்று மாசுவில் இருந்து  மக்களை காக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காற்று மாசு எதுவும் இல்லை என்று தான் தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், அதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் 7 வது  நாளாக நேற்றும் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தனியார் காற்று மாசுபாடு நிகழ் நேர காண்காணிப்பு மையங்களின் ஆய்வில் சுவாசிக்க தகுந்த அளவான தரக்குறியீடு 100 என்பதை விட அதிகமாக காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்று ஆலந்தூரில் 101, வேளச்சேரியில் 113, மணலி 182 என ஒவ்வொரு பகுதிகளிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. சென்னையில் 7வது நாளாக தொடர்ந்து காற்று அளவு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காற்று மாசு அதிகரிப்பதை தடுக்கும் வகையில் டெல்லியை போன்று சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு காற்று மாசுவில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காற்று மாசுவை தடுக்க இதுவரை தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் காற்று மாசு காரணமாக மணலி, எண்ணூர் உள்ளிட்ட வட சென்னை பகுதி அதிகமாக  பாதிக்கப்பட்டுள்ளது.  மழை பெய்ய தொடங்கினால் காற்று மாசு குறைய வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். மழை பெய்யாத பட்சத்தில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டு தான் போகுமே தவிர குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை, எனவே காற்று மாசுவை குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்