SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞரின் ஓய்விடத்தில் மணவிழா மரபுகளைக் கடந்து புதுமையை அணுகி நடைபெற்றது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

2019-11-09@ 00:41:57

சென்னை: கலைஞரின் ஓய்விடத்தில் நடந்த மணவிழா, மரபுகளைக் கடந்து, புதுமையை அணுகி நடைபெற்றது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  திமுக நடத்துகின்ற சுயமரியாதை திருமணங்கள் என்பவை, தமிழ்ப் பண்பாட்டை மீட்கின்ற ஒரு சிறப்பான நிகழ்வாகும். நம்முடைய தொண்டர்கள் சிலர், தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் காத்திருந்து, அவர்கள் வெளியே வரும்போது, அவர்கள் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டது உண்டு. ஏன்? உங்களில் ஒருவனான என்னுடைய வீட்டிற்கும் வந்து பல தொண்டர்கள் அப்படித் திருமணம் செய்து கொண்டு சென்றிருக்கிறார்கள்.  இன்றைக்கு நடைபெற்ற அந்த எளிமையான, சுயமரியாதை  திருமணம் என்பது, மேலும் மகிழ்ச்சி கூட்டிடும் ஒரு விழாவாக நடைபெற்றது. காரணம் அது நடைபெற்ற இடம், வீடோ மண்டபமோ  அல்ல.

ஆலயம் என்று சொல்லலாம். ஏனென்றால், வங்கக்கடற்கரையில், தன்னுடைய தங்கத்தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்குகின்ற இடத்திற்குப் பக்கத்திலே ஓய்வு கொள்ளா நம் தலைவர் ஓய்வு கொள்கிறாரே,  அந்த இடத்திலேதான், இன்றைக்கு நம் திமுக தொண்டரின் திருமணத்தை நடத்தி வைக்கின்ற ஒரு பெரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி, 13-வது வார்டு, அண்ணா நகர், சொசைட்டி தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர் எஸ்.கருப்பையன்- துவாக்குடி நகர திமுக மகளிரணி துணை அமைப்பாளர் ராணி ஆகியோரின் மகன் கே.கதிரவன் மற்றும் மேற்கண்ட முகவரியிலேயே வசிக்கும் 13வது வார்டு திமுக அவைத்தலைவர் எஸ்.ராஜு-ராஜம்மாள் ஆகியோரின் பேத்தி ஆர்.வளர்மதியின் மகள் என்.ஷியாம்லி ஆகியோரின் திருமணத்தைத்தான், தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்க, பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., பகுதிச் செயலாளர் மதன் மோகன் ஆகியோர் கலந்து கொள்ள, நான் தலைமை ஏற்று நடத்தி வைத்தேன்.

 தலைவர் கலைஞர் மீது அன்பும், பாசமும், மரியாதையும் கொண்ட இப்படிப்பட்ட ஒரு தொண்டரின் திருமணத்தை, தலைவர் கலைஞர் ஓய்வெடுக்கிற அந்த இடத்தில், நடத்தி வைக்கின்றபொழுது, என்றென்றும் நம் இதயத்தில் வாழ்கின்ற அந்தத் தலைவரின் வாழ்த்துரை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு, எதிரொலித்தது. திமுக வரலாற்றில் பல திருமணங்கள் இப்படி புரட்சிகரமாக, மனதை கவரக்கூடிய வகையிலே, மாற்றாருக்கும் வழிகாட்டக்கூடிய வகையிலே, புதிய  முறையிலே, புதுமைச் சிந்தனையுடன் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையிலே, இன்று நடைபெற்ற இந்தத் திருமணமும் மரபுகளைக் கடந்து, புதுமையை அணுகி நடைபெற்ற திருமணம் ஆகும்.

 தொட்ட துறைகள் அனைத்தையும்  துலங்கிடச் செய்தவர், தலைவர் கலைஞர் . அவர்கள் விரும்பிய திருமண முறையில், அவர்களின் ஓய்விடத்தில், திருமணம் செய்துகொண்ட இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ்க. வாழும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளமோடும், நலமோடும் வாழ்க என மனமார வாழ்த்துகிறேன். இனமான உணர்வுடன் சுயமரியாதை திருமணங்கள் நாடெங்கும் பெருகட்டும்; நற்றமிழர் சிறக்கட்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘அரசு முனைப்பு காட்டுமா?’
‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு தொழில்களை அழித்து, முன்னெப்போதும் இல்லாத அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தையும் உருவாக்கி, பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது. அதனால்தான் இன்று அரசே பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மவுனம் காக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு இப்போதாவது முனைப்புக் காட்டுமா?’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்